செவ்வாய், 20 செப்டம்பர், 2022

சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவருக்கு எச்சரிக்கைக் கடிதம்: டி.கே.எஸ். இளங்கோவன் தகவல்!

minnambalam.com  -  Prakash  : “சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றாலும் திமுக உணர்வுடன்தான் இருக்கிறார்” என திமுக முன்னாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், தான் திமுகவில் இருந்தும் அரசியலில் இருந்துமே விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 20) திமுக செய்தித் தொடர்புத் துறை செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஏற்கனவே திமுகவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் கடந்த சில வாரங்களாக தனது ஃபேஸ்புக் பதிவில் திமுக தலைமையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.
குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் ஆவணப்பட வெளியீட்டில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கலந்துகொண்டதை அவர் கடுமையாக சாடினார்.
இந்த நிலையில் இதுகுறித்து டி.கே.எஸ். இளங்கோவனிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டபோது, “நாங்கள் சுப்புலட்சுமி கணவருக்கு எதிராக எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருக்கிறோம்.

அவருடைய பதிவுகளை நீக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறோம். திமுகவில் அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லாத காரணத்தால், அவர்மீது என்ன நடவடிக்கை எடுப்பது?” என்றார் அவர்.

மேலும், “தற்போது துணைப் பொதுச் செயலாளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை.

ஒருவேளை தேவைப்பட்டால் அதற்கு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பொதுக்குழு அனுமதியின்றி அதைச் செய்ய முடியாது. மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் நேரத்தில்தான் பொதுக்குழு தேர்தல் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் பொதுக்குழுவுக்கான நாள் தேர்வு செய்யப்பட்டு கூட்டப்படும். ஒரு பெரிய கட்சியிலே தம்முடைய உடல்நிலையைக் காரணம் காட்டி தாம் விலகிக் கொள்கிறேன் என்று சொல்லி அரசியலிலிருந்தே சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியிருக்கிறார்.

ஆனால், அவர் திமுக உணர்வுடன்தான் இருக்கிறார். எனவே, ஓர் இடத்திற்கு இன்னொருவர் வருவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும்.

அவர் இங்கிருந்து ஓய்வுபெற்று பிஜேபியில் சேர்ந்துவிடுவார் என நான் நினைக்கவில்லை.

அவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அப்படியிருக்கையில், அவரை திமுக எப்படி புறக்கணிக்கிறது என்று சொல்ல முடியும்?

திமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் மற்றும் திமுகவின் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவர் கலந்துகொண்டே வந்தார். சமீபத்தில் மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட விழாவில்கூட அவர் கலந்துகொண்டார். அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இல்லை. புறக்கணிக்கவும் இல்லை” என்றார்.

ஜெ.பிரகாஷ்

கருத்துகள் இல்லை: