செவ்வாய், 20 செப்டம்பர், 2022

நாமகிரிப்பேட்டை பட்டியல் சமூகத்தை சேர்ந்த காவலாளி பரமசிவம் கொலை . சந்தேக மரணம் என்று பதிவு செய்த காவல்துறை

நாமகிரிப்பேட்டை   பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளி கொலை  தூக்கில் தொங்க விட்ட மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

 
முனைவர். மு. சித்தார்த் ஆபிரகாம் :  நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த காவலாளி பரமசிவம்,
 இந்த நிலையில் (இடுப்பு கட்டப்பட்டு, கால்கள் கட்டப்பட்டு) நிலையில் சடலத்தை பார்த்து  கொலைக்கான அனைத்து முகாந்திரமும் தெளிவாக இருந்தும்,
 இது கொலை (302) கிடையாது இது சந்தேக மரணம் (174) தற்கொலை என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நாமக்கல் மாவட்ட காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது..\

 தினத்தந்தி :நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளி கொலை தூக்கில் தொங்க விட்ட மர்ம கும்பலுக்கு வலைவீச்சு


நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நாமக்கல் ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சின்ன அரியா கவுண்டம்பட்டி அண்ணா காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 65). இவருக்கு சின்னப்பிள்ளை என்ற மனைவியும், முருகன் (40), அழகேசன் (38) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
பரமசிவம் நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இதையடுத்து அவர் வேலை செய்யும்போது காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 2 ஆண்டுகளாக இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார்.

தூக்கில் பிணம்

இதனிடையே வாரந்தோறும் சனிக்கிழமை மாலை வேலைக்கு வந்தால் தொடர்ந்து திங்கட்கிழமை வரை பணியில் இருப்பதை பரமசிவம் வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த 17-ந் தேதி மாலை பேரூராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் இரவு வரை காவல் பணியில் இருந்தார். பின்னர் இரவு பரமசிவம், பொக்லைன் எந்திர டிரைவர் ரஞ்சித்குமார் (26) ஆகியோர் பேரூராட்சி அலுவலகத்தில் தூங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பரமசிவம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள டிராக்டர் செட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் அவருடைய இடுப்பு மற்றும் கால்கள் கயிறால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஏராளமானோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.

சாலை மறியல்

இதையடுத்து உடலை பார்த்து கதறி அழுத அவர்கள் பரமசிவம் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு காலை 6.30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துகிருஷ்ணன், சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சுகவனம் மற்றும் போலீசார் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பரமசிவத்தின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பரமசிவத்தின் சாவிற்கான காரணத்தை தெரியப்படுத்தும் வரை, உடலை அங்கிருந்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததோடு போராட்டத்தை தொடர்ந்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவர் பரமசிவத்தின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து போலீசார் பரமசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர். முன்னதாக சாலை மறியலால் ராசிபுரம்- ஆத்தூர் பிரதான சாலையில் 1½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நிருபர்களிடம் கூறியதாவது:-

பரமசிவத்தின் உடலில் சந்தேகிக்கும் வகையில் காயங்கள் ஏதும் இல்லை. ஆனால் காலும், இடுப்பும் கயிறால் கட்டப்பட்டு இருக்கிறது. எனவே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மூத்த டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தடயவியல் நிபுணர்களை கொண்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

4 தனிப்படைகள்

அதேபோல் இந்த சம்பவம் பற்றி விசாரிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலக பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை: