திங்கள், 19 செப்டம்பர், 2022

காலில் விழும் கலாசாரத்தை ஆதரிக்க தொடங்குகிறதா திமுக? என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்? - BBC News

ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின்

  பிரமிளா கிருஷ்ணன் - -     பிபிசி தமிழ் : சமீபத்தில் திமுகவின் சில மூத்த நிர்வாகிகள் திமுக தலைவர் ஸ்டாலின், அவர் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரின் திருமண நாளின்போது, அவர்களின் காலில் விழுந்து மரியாதை செலுத்திய காட்சிகள் வெளியாகின. முன்னதாக, திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் காலில், தஞ்சாவூர் மேயர் இராமநாதன், மேயர் அங்கி உடையில் இருந்தபோது, விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. இந்த இரண்டு காணொளிகளை தாண்டி சில நிகழ்வுகளில் திமுக தலைவர்கள் காலில் பிற தொண்டர்கள்

விழுந்து வணங்குவது குறித்தும் விமர்சனங்கள் எழுகின்றன.
மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் காலில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் விழுந்து வணங்குவதை கடுமையாக திமுகவினர் முன்னர் விமர்சித்துள்ளனர். தற்போது அந்த பழக்கத்தை திமுக ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
காலில் விழுவதை விரும்பாத ஸ்டாலின்
ஜனவரி 2017ல் திமுகவின் செயல்தலைவராக பொறுப்பேற்ற சமயத்தில், வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,
தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள் யாரும் தன் காலில் விழ வேண்டாம் என்றும், அது மனதளவில் பெரும் நெருக்கடியை உருவாக்குகிறது என்றும் திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதோடு, காலில் விழும் பழக்கத்தை தான் சிறிதும் விரும்புவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். காலில் விழுவதை பார்க்கும் மற்ற தொண்டர்களும் அதே முறையைக் கடைபிடிக்க நினைப்பது தனக்கு சற்றும் உடன்பாடில்லாத செயல் என்றும், சுயமரியாதைக் கொள்கை வழியில் தன்மானம் காக்கும் இந்த இயக்கத்திற்கும் அது எதிர்மறைச் செயல் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், வளைந்து குனிந்து தவழ்ந்து தரையில் உருண்டு மேல்நோக்கி கும்பிடு போடுபவர்களால் தமிழகம் பாழ்பட்டுக் கிடக்கிறது என்றும், அந்தப் பள்ளமான பாதை வேண்டாம் என்றும் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுகவை விமர்சித்திருந்தார்.

அதேபோல, ஜனவரி 2021 முதல் மார்ச் வரையிலான தேர்தல் பரப்புரைகளில் பல மேடைகளில், அதிமுகவில் காலில் விழும் பழக்கம் இருப்பதை பற்றி, ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ''எடப்பாடி படிப்படியாக உயர்ந்து இல்லை, ஊர்ந்து சென்றதால்தான் முதல்வரானார்,'' என்று அவர் பேசிய வரிகள் பிரபலமாகின. அதேபோல , மார்ச் 2021ல் திருச்சியில் பேசிய உரையில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்க சசிகலாவின் காலில் விழுந்தார் என்றும் ஆட்சிக்கு வந்த பிறகு சசிகலாவுக்கு துரோகம் செய்து பாஜகவின் அடிமையாகி விட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது ஸ்டாலின் - துர்கா தம்பதியின் திருமணநாளன்று கட்சியை சேர்ந்த பலர் காலில் விழுந்து வணங்கும் காட்சி இணையத்தில் கிடைக்கிறது. அதில், தற்போதைய அமைச்சரான தா.மோ.அன்பரசன் கூட இருவரிடமும் விழுந்து வணங்கியுள்ளதை பார்க்கமுடிகிறது.

இதுகுறித்து அமைச்சர் அன்பரசனிடம் கேட்டபோது, ''எனக்கு தாய்-தந்தை தற்போது இல்லை என்பதால், எங்கள் குடும்பத்தில் பெரியவர்களாக அவர்களை கருதி வணங்கினேன். இதில் தவறு இல்லை. தற்போது ஏற்பட்ட பழக்கம் அல்ல இது. கடந்த 30 ஆண்டுகளாக அவர்களை என் குடும்ப தலைவராக எண்ணுவதால், மரியாதை செய்தேன். கட்சி தலைவராக அல்ல அவரை குடும்பத் தலைவராக பார்ப்பதால் விழுந்து கும்பிட்டேன். அதிமுக தலைவர்கள் காலில் அமைச்சர்கள் விழுந்து வாணங்குவதை விமர்சித்திருக்கிறோம் என்பது உண்மைதான். அதற்கும், நான் திருமண நாளன்று மரியாதை செய்ததையும் ஒப்பிடமுடியாது,''என்கிறார். மேலும், குடும்ப பெரியவர்களை வணங்குவது தமிழகத்தில் பின்பற்றப்படும் வழக்கம்தான் என்கிறார்.

''காலில் விழ கூடாது என்பது திராவிட கொள்கை''

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் பேசுகையில், சுயமரியாதை கொள்கைப் படி யாரும் யாருடைய காலிலும் விழக் கூடாது என்கிறார்.

''அதிமுகவை போல திமுகவில் தலைவர் போகும் இடங்களில் எல்லாம் அவருடைய காலில் விழுந்து வணங்கும் பழக்கம் கிடையாது. தற்போது வெளியான தகவல்களை பார்க்கும்போது, விழுந்து வணங்கியவர்கள் தங்களது சொந்த விருப்பத்தின்பெயரில் அதை செய்துள்ளார்கள். ஆனால் அதைகூட தவிர்ப்பது சிறந்தது. தலைவர் ஸ்டாலினுக்கு இதில் விருப்பம் இல்லை. நான் பொறுப்பேற்றுள்ள தருமபுரி மாவட்டத்தில் உள்ள திமுகவினரிடம் இதை மிகவும் கண்டிப்பான முறையில் சொல்லியிருக்கிறேன். பொது விழாவோ, தனிப்பட்ட குடும்ப நிகழ்வாகவோ இருந்தாலும் யாரும் காலில் விழக்கூடாது என்பதுதான் சரி, அதுதான் திராவிட கொள்கை,''என்கிறார் செந்தில் குமார்.

கூட்டணி கட்சியின் பதில்

திமுகவில் தென்பட்டுள்ள விழுந்து வணங்கும் பழக்கம் குறித்து கூட்டணி கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியினரிடம் பேசினோம். பெயர் சொல்லவிரும்பாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசும்போது, திமுகவில் பரவலாக காலில் விழும் பழக்கம் அதிகரிக்கவில்லை என்றபோதும், கட்சி தொண்டர்கள், மூத்த உறுப்பினர்கள் அதுபோல நடந்துகொள்வதை தவிர்க்கவேண்டும் என்கிறார்.

''திமுகவினர் தாங்களும் இந்து கலாசாரத்தில் பின்பற்றப்படும் வணங்கும் பழக்கத்தை ஏற்பவர்களாக தங்களை காட்டிக்கொள்கிறார்கள் என்று சொல்லலாம். ஒருசிலர், காலில் விழுந்தால் தங்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கூட இருக்கலாம். திராவிட கொள்கையின்படி யார் ஒருவரும் மற்றவருக்கு அடிமை இல்லை என்பதால், இந்த பழக்கத்தை கைவிடுவது சிறந்தது,''என்கிறார்.

அதிமுகவின் விமர்சனம்

ஆனால் தங்களை விமர்சித்த திமுகவில் தற்போது விழுந்து வணங்கும் பழக்கம் என்பது ஒருபடி அதிகமாக, இளையவர்கள் காலில் கூட முதியவர்கள் விழுகிறார்கள் என்கிறார் அதிமுகவின் சட்டமன்ற துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார். ''வயதில், அனுபவத்தில் மூத்தவர்களை வணங்குவதால் பிரச்னை இல்லை. ஆனால் தஞ்சாவூர் மேயர் ராமநாதன் தன்னை விட, வயதிலும், அனுபவத்திலும் மிகவும் இளையவரான உதயநிதியின் காலில், அதுவும் மேயர் அங்கியுடன் விழுந்து வணங்கினார். எங்களை அனுதினமும் விமர்சித்த திமுகவினரின் சாயம் வெளுத்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வயதும், அனுபவமும் எங்களுக்கு வழிகாட்டியது. தற்போது கலைஞரின் வாரிசுகள் ஒவ்வொருவர் காலிலும் திமுகவினர் விழுவதை என்னவென்பது?,'' என்கிறார் உதயகுமார்.

1980களில் இருந்து, தமிழ்நாடு அரசியல் களத்தை கவனித்துவரும் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன், அரசியல் தலைவர்கள் மத்தியில் வணங்கும் பழக்கம் நீடிப்பது குறித்து பேசியபோது, அந்த பழக்கத்தின் தொடக்கம் பற்றியும், தற்போது வளர்ந்துள்ள விதம் பற்றியும் விளக்கினார்.

''தமிழ்நாட்டு அரசியலில் காலில் விழுந்து வணங்கும் பழக்கத்தை தொடங்கிவைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். 1991ல் முதல் முறை அவர் முதல்வராக இருந்தபோதே அந்த பழக்கம் தொடங்கிவிட்டது. அதன் தீவிரம் அவர் ஒவ்வொரு முறையும் முதல்வராக இருந்த சமயங்களில் அதிகரித்துக்கொண்டே போனது. நாளாக நாளாக, சட்டமன்ற வளாகம், பொது இடம், அரசு விழா, கட்சி விழா என எந்த இடத்திலும் மூத்த கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் ஜெயலலிதாவை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவார்கள். ஒரு சமயத்தில், அவர் விமானத்தில் செல்லும் திசையை பார்த்து கூட அதிமுகவினர் சாலையில் விழுந்து வணங்கிய காட்சிகள் அரங்கேறின,''என்கிறார்.

''தற்போது திமுகவில் விழுந்து வணங்கும் பழக்கம் தொடங்கியுள்ளதை பார்க்கிறோம். திமுகவில் பொதுவாக இந்த பழக்கத்தை யாரும் கட்டாயமாக செய்தாகவேண்டும் என்ற நிர்பந்தம் இதுவரை ஏற்படவில்லை. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறியவர்கள் ஒரு சிலர் தனக்கான இடத்தை நிலைநிறுத்தவேண்டும் என்றும் திமுக நிர்வாகிகள் சிலரும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை பார்க்கிறோம். இதை தற்போதே நிறுத்த முற்படவில்லை எனில், அதிமுக போன்ற நிலைதான் திமுகவில் ஏற்படும்,''என்கிறார் இளங்கோவன்.

கருத்துகள் இல்லை: