வியாழன், 22 செப்டம்பர், 2022

தாம்பரம் திமுக எம்எல்ஏ ராஜா மீது வழக்கு.. கை, கால்களை உடைச்சிடுவேன்.. கார் நிறுவனத்தில்

tamil.oneindia.com  -   Vishnupriya R  :   சென்னை: தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாம்பரம் திமுக சட்டசபை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா செங்கல்பட்டில் சிங்கபெருமாள் கோயில் அருகே மல்ரோசாபுரத்தில் உள்ள தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்றார்.
அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவர் மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ வெளியானது. அதில் கை, கால்களை உடைத்து விடுவேன் என ஊழியர்களை மிரட்டியுள்ளார்.

சமூகவலைதளங்கள்
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. ஒரு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் , "தன்னை யாரும் சாப்ட் முதல்வர் என கருதி விட வேண்டாம். நான் தேவைப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன்" என எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது ஆளும் கட்சி எம்எல்ஏவே அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் என பாஜகவினர், அதிமுகவினர் இந்த வீடியோவை வைரலாக்கினர்.

ஆலையின் சிஇஓ
இந்த நிலையில் ஆலையின் சிஇஓ கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ராஜா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது நண்பரை சிலர் நிறுவனத்திற்கு நேரில் அனுமதிக்கவில்லை .அவர்கள் நிறுவனத்திற்கு நேரில் சென்றேன் .அவர்கள் பேசியதை கட் செய்துவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

தகாத வார்த்தைகள்
எங்களை அனுமதிக்க மறுத்த சிலர் தகாத வார்த்தைகளால் பேசினார் என்று விளக்கமளித்துள்ளார். கடந்த 2006, 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் தாம்பரம் தொகுதியில் போட்டியிட்ட ராஜா வெற்றி பெற்றார். அது போல் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் அந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் தாம்பரம் மாநகர திமுக செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக மீது நடவடிக்கை
திமுக அரசு 2021 தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்ட நாளில் கூட திமுகவினர் சிலர் அம்மா உணவகத்திற்கு சென்று கலாட்டா செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அது போல் பரோட்டா கடை, பஜ்ஜி கடை, பிரியாணி கடை என எங்கெல்லாம் திமுகவினர் மிரட்டல், அராஜகத்தில் ஈடுபடுகிறார்களோ அங்கெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
 

கருத்துகள் இல்லை: