திங்கள், 2 மார்ச், 2020

அமித் ஷா பதவி விலக வேண்டும்.. நாடாளுமன்றம் நாள் முழுதும் அமளி .. ஒத்தி வைப்பு


மாலைமலர் :டெல்லி வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி: டெல்லியில் வன்முறை பரவிய சமயத்தில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலிறுத்தி வருகிறத இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதாக கூறி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். டெல்லியில் தற்போது அமைதி திரும்புவதற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பின்னர் இதுபற்றி விவாதிப்போம் என்றும் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறி சமாதானப்படுத்தினார். ஆனால் உறுப்பினர்கள் சமாதானம் அடையவில்லை
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார்கள். அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 

2 மணிக்கு அவை கூடியபோதும் டெல்லி வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதேபோல் மக்களவை பிற்பகல் கூடியபோது, டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், வன்முறை தொடர்பாக விவாதிக்க இப்போது நேரம் ஒதுக்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். 

இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை: