வெள்ளி, 6 மார்ச், 2020

இளைஞரைத் தாக்கிய பெண் போலீஸ்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

இளைஞரைத் தாக்கிய போலீஸ்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!மின்னம்பலம் : காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்க வந்த இளைஞரைப் பெண் தலைமைக் காவலர் தாக்கிய விவகாரம் குறித்து கோவை காவல் துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணவேணி. இவர் காவல்நிலையத்துக்குப் புகார் அளிக்க வருபவர்களிடம் மிரட்டி லஞ்சம் பெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவரால் பாதிக்கப்பட்ட சிலர் கோவை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமாரிடம் புகார் அளித்துள்ளனர். அதில், தலைமைக் காவலர் கிருஷ்ணவேணி புகார் அளிக்கச் செல்பவர்களைக் கைநீட்டி அடிக்கிறார். காவல்நிலைய ஆய்வாளருடன் சேர்ந்து இவ்வாறு செய்து வருகிறார். இவரும், இக்காவல் நிலைய ஆய்வாளரும் கைகோர்த்துக் கொண்டு லஞ்சம் வாங்குகின்றனர். பெண் காவலர் கிருஷ்ணவேணி காவல்நிலையத்துக்கு வரும் வழக்கறிஞருடன் சண்டை போடுகிறார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதுஇதனையடுத்து கிருஷ்ணவேணி தொண்டாமுத்தூர் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இதனிடையே அவர் பேரூர் காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்க வந்த இளைஞரைக் கடுமையாகத் தாக்கியது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகின. இந்த செய்திகளின் அடிப்படையில் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது மாநில மனித உரிமை ஆணையம். இதனை விசாரித்த நீதித்துறை நடுவர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், புகார் அளிக்க வருபவர்களிடம் பெண் காவலர் லஞ்சம் கேட்டுத் தாக்குவது குறித்து மாவட்ட எஸ்.பி 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கவிபிரியா

கருத்துகள் இல்லை: