வியாழன், 5 மார்ச், 2020

கொரோனா: கதிகலங்கும் இந்திய ஸ்மார்ட்போன் உலகம்!

மின்னம்பலம் : கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய அச்சத்திலிருந்து உலக நாடுகள் பலவும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றன.
வீட்டிலிருந்தே வேலையை செய்யச் சொன்ன பெரும் நிறுவனங்கள் அனைத்தும், தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வரச் சொல்லி அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவரும் சூழலில், கொரோனா வைரஸ் மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. இதனால், இந்திய நாட்டின் பல வேலைகள் பாதிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், முதலாவதாக பாதிக்கப்பட்டிருப்பது டெக் உலகம்தான்.
மும்பையில் நடைபெறுவதாக இருந்த அமேசான் வெப் சர்வீஸ் (AWS) உச்சி மாநாடு திட்டமிட்டபடி நடைபெறாது என்பதை அதிகாரபூர்வமாக அமேசான் நிறுவனம் அறிவித்திருக்கிறது. “ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரை மும்பையில் நடைபெறுவதாக இருந்த AWS உச்சி மாநாட்டை நாங்கள் நடத்தப் போவதில்லை. பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொண்டு இந்த முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம். எங்கள் ஊழியர்கள், கஸ்டமர்கள் மற்றும் பார்ட்னர்களின் உடல்நலனே எங்களுக்கு முக்கியம்” என்று அமேசானின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

அமேசான் மட்டுமல்லாது ஷியோமி, ரியல்மி போன்ற நிறுவனங்களும் தங்களது இந்திய அறிவிப்புகளை நிறுத்திவிட்டன. மார்ச் 12ஆம் தேதி Xiaomi, Redmi Note 9 சீரிஸ் மாடல்களை டெல்லியில் நடைபெறவிருந்த விழாவில் அறிமுகப்படுத்த ஷியோமி முடிவெடுத்திருந்தது. ஆனால், கொரோனா பாதிப்புகளால் இந்த நிகழ்ச்சியைத் தள்ளிவைத்திருக்கிறது ஷியோமி. அதேபோல மார்ச் 5ஆம் தேதி (இன்று) ரியல்மி ஸ்மார்ட்போன்களின் 6 சீரிஸ் மாடல்களை டெல்லியில் நடைபெறும் விழாவில் அறிமுகப்படுத்த ரியல்மி நிறுவனம் காத்திருந்தது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வெகு வேகமாக வளர்ந்துவரும் நிறுவனமான ரியல்மி, அதன் 6 சீரிஸ் மாடல்களின் விற்பனை இந்தியாவில் சாதனை படைக்கும் என்று கருதியது. இதற்குக் காரணம், 15,000 ரூபாய்க்குள் ஸ்னாப் டிராகன் 703, குவாட் கேமரா (நான்கு கேமராக்கள்), 4500mah பேட்டரி, ஆண்ட்ராய்டு வெர்ஷன் 9 என ரியல்மி 6 சீரிஸ் மிகவும் கவர்ச்சிகரமான ஸ்மார்ட்போனாக மற்ற நாடுகளில் பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பினால் நிகழ்ச்சியைத் தள்ளிவைத்ததால் எதிர்பார்த்த விற்பனை கிடைக்காமல் டெக் உலகம் வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் பல்வேறு கவர்ச்சிகரமான டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்த முயற்சி செய்த உலகின் 15 முன்னணி நிறுவனங்கள் தங்களது 2020இன் முதல்கட்ட திட்டத்தைக் கைவிட்டிருக்கின்றனர்.
-சிவா

கருத்துகள் இல்லை: