சனி, 7 மார்ச், 2020

நூற்றாண்டுகளுக்கு வழிகாட்டும் வரலாற்று பாடம் எங்கள் இனமான பேராசிரியர் அன்பழகன்

17 September 1949 ..  அன்று கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்ட திராவிட
முன்னேற்ற கழகத்தின் கடைசி சாட்சியாக இருந்த  இனமான பேராசிரியர் அன்பழகன் .!.
 97 வயது வரை நீண்ட நெடிய வாழ்க்கை பயணத்தை ஒரு காவியம் போல வாழ்ந்து காட்டிவிட்டு சென்றிருக்கிறார் எங்கள் திராவிட பெருந்தகையாளன் பேராசிரியர் அன்பழகன் அவர்கள்.
இனமான பேராசிரியரின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு காவியம் போலவே போற்ற தகுந்தாகும்.
சுயமரியாதை சமூகநீதி பகுத்தறிவு கொள்கைகளை எந்த காலத்திலும் சமரசம் செய்துகொள்ளாத திராவிட போராளி!
திராவிட முன்னேற்ற கழக கப்பல் எங்கே தரை தட்டிவிடுமோ என்று பலரும் தடுமாறி தப்பி ஓடிய காலங்களில் எல்லாம் தளராது தன் ஆருயிர் நண்பன் கலைஞருக்கு பக்க பலமாக  உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைவதாம் நட்பு என்ற திருக்குறளுக்கு ஒரு மகுடமாக வாழ்ந்த பண்பாளன்.
கழகம் தோல்வியின் எல்லைக்கே சென்றாலும்  தனது உறுதியை ஒருபோதும் இழக்காமல் அடுத்த களத்துக்கு எப்போ நாள் குறிப்போம் நண்பா என்று ஓயாத போராட்டங்களால் திராவிட இயக்கத்தை உயிர்ப்போடு வைந்திருந்து அடுத்த தலைமுறைக்கு கையளித்து விட்டு சென்ற தலைமுறைகளின் நாயகன்.
தலைவர்களும் அடிமட்ட தொண்டர்களும் கூட ஒருவேளை தங்கள் நம்பிக்கையை இழந்திருந்த காலக்கட்டங்களிலும் கூட பேராசிரியர் ஒருபோதும் தனது நம்பிக்கையை இழந்தவர் அல்லர் .
அரசியல் எதிரிகளுக்க்கு பேராசிரியர் தொடுத்த தாக்குதல்கள் மிக மிக உக்கிரம் வாய்ந்தவை ஆகும். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீதான வழக்குகளை தொடுத்து அதில் வெற்றி கண்டவர் பேராசிரியர் . ஆனாலும் அவர்கூட ஒரு போதும் பேராசிரியரை வெறுத்ததாக தெரியவில்லை.
பேராசிரியரின் போர் முழக்கம் கூட ஒரு poetic  ஆகவே இருந்தது. கண்ணியம் என்ற வார்த்தையின் அர்த்தமாகவே வாழ்ந்த கண்ணியவான்
இனி வரப்போகும் நூற்றாண்டுகளுக்கு வழிகாட்டும் வரலாற்று பாடம் எங்கள் இனமான பேராசிரியர் அன்பழகன்

கருத்துகள் இல்லை: