சனி, 7 மார்ச், 2020

இந்தியப் பொது வாழ்வுக்கே எடுத்துக்காட்டான பேராசிரியர்: கி.வீரமணி மற்றும் . தலைவர்கள் அஞ்சலி!

திராவிட சிந்தனையின் தெளிவுரை- பேராசிரியருக்கு  தலைவர்கள் அஞ்சலி!மின்னம்பலம் : மறைந்த, திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பேராசிரியர் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், “திமு கழகத்தின் மூத்த தலைவர் மற்றும் 47 ஆண்டு கால பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு அன்பழகன் அவர்களின் மறைவு குறித்து என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “ தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன் -பொன்.ராதாகிருஷ்ணன்
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தனது இரங்கல் செய்தியில், “திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்கள், தலைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையை தந்திட எல்லாம்வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
திராவிட சிந்தனையின் தெளிவுரை- கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேராசிரியர் மறைவு குறித்து வெளியிட்ட செய்தியில், “தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.
தூய தலைவர்- டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,
“திமுக பொதுச்செயலாளரும், திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் சென்னையில் நேற்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட திமுக கற்றவர்களையும், கல்வியாளர்களையும் கொண்டிருந்தது. அவர்களில் அறிஞர் அண்ணா அவர்களுக்கு மிகவும் நெருங்கியவராக திகழ்ந்தவர் பேராசிரியர் அவர்கள். சிறந்த அரசியல் தலைவராகவும், போற்றத்தக்க பேராசிரியராகவும் விளங்கிய அவர், அரசியலில் அவரது சம காலத்தவரைப் போன்று எந்தவிதமான சமரசங்களையும் செய்து கொள்ளாமல் பயணித்தவர். அது தான் அவருக்கு தனித்துவத்தையும், மரியாதையையும் சேர்த்தது.
அண்ணாவுக்கு எந்த அளவுக்கு நெருக்கமானவராக இருந்தாரோ, அதே அளவுக்கு கலைஞரிடமும் நெருக்கமாக இருந்தார். தம்மை விட அனுபவத்திலும், வயதிலும் குறைந்தவர் என்றாலும், அண்ணாவிடம் தம்மால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் என்றாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கலைஞரின் தலைமையை ஏற்று செயல்பட்டவர். திறமையானவரின் தலைமையை ஏற்பதில் தயக்கமில்லை என்று கூறியவர். சுமார் 80 ஆண்டு கால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரரான பேராசிரியர் தமது வாழ்வில் கடைசி நிமிடம் வரை எந்தவிதமான விமர்சனங்களுக்கும் உள்ளாகாமல் தூய வாழ்க்கை வாழ்ந்தவர்.
அரசியலைக் கடந்து அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்களை பெற்றிருந்தார். பிற கட்சியினர் ஆனாலும் அவர்களின் சிறப்புகளையும், திறமைகளையும் தயக்கமில்லாமல் பாராட்டியவர். பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழ் ஓசை நாளிதழை தொடங்கிய போது, அதன் தொடக்க விழாவிலும், இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவிலும் கலந்து கொண்டவர். தனித்தமிழ் சொற்களுடன் தமிழ் ஓசை நாளிதழை நடத்தி வருவதற்காக என்னை பாராட்டியவர். திராவிட இயக்கங்கள் செய்ய வேண்டிய, ஆனால், செய்யத் தவறிய பணிகளை நான் செய்து வருவதாக வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.
பேராசிரியர் க. அன்பழகன் ஓர் அப்பழுக்கற்ற, அழுக்காறாமையற்ற, அவாவற்ற தலைவர் அவர். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை சில நாட்களுக்கு முன் சந்தித்து நலம் விசாரித்தேன். உடல் நலம் தேறி மீண்டும் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவரது மறைவு அரசியலுக்கு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.
அரசியல் அதிசயம்-அன்புமணி
பாமக இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி எம்பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மாணவர் பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்தவர். கற்றவர்கள் பலரும் அரசியலில் வருவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் அவர். கட்சியிலும், ஆட்சியிலும் தாம் வகித்த பதவிகளுக்கு பெருமை சேர்த்தவர் பேராசிரியர் அவர்கள். திமுகவில் இருந்தாலும் அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாலும் நேசிக்கப்பட்டவர்; மதிக்கப்பட்டவர் ஆவார்.
என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அரசியலில் அதிசயங்களாக திகழ்ந்தவர்கள் வெகுசிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் க. அன்பழகனார் அவர்கள். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும், திமுகவுக்கும் பேரிழப்பாகும். பேராசிரியர் க. அன்பழகனாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திமுகவைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள பேராசிரியரின் வீட்டில் அவரது உடலுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், திமுக தொண்டர்களும், தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பேராசிரியரின் உடல் இன்று (மார்ச் 7) மாலை சென்னை வேலங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-வேந்தன்


இந்தியப் பொதுவாழ்வுக்கே எடுத்துக்காட்டான பேராசிரியர்:  கி.வீரமணி இரங்கல்திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, மார்ச் 7 நள்ளிரவிலேயே இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
“நமது இனமானப் பேராசிரியரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற பொதுச் செயலாளராக 43 ஆண்டுகள் இருந்தவரும், எவரைச் சந்தித்தாலும் கைகுலுக்கி தமது அன்பினையும், பண்பினையும் வெளிப்படுத்தி, எந்த மேடையிலும் தந்தை பெரியார் தம் சுயமரியாதைச் சூரணத்தை, ஒரு மருத்துவர் நோயாளிக்குத் தருவதைப் போல் தவறாது தருபவரும், அறிஞர் அண்ணாவின் உள்ளம் கவர்ந்த தம்பிகளில் முதன்மையரும், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் தலைமையை ஏற்று கடைசி வரை கட்டுப்பாடு காத்தவருமான, கொள்கை மாவீரர் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் கலங்குகின்றோம்! அவர் 98 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்றாலும் எப்படி அவரது பிரிவை தாங்கி கொள்வது என்று; அவரை இழந்து தவிக்கும் அளவுக்கு நமது இலட்சியப் பயணத்தின் ஒளி கூட்டிய இனமானச்சுடர் அவர்.
அவரது பொதுவாழ்க்கை 85ஆண்டு காலம் என்ற வரலாற்றுச் சாதனை இந்தியப் பொதுவாழ்வுக்கே ஒரு தனித்தன்மையான எடுத்துக்காட்டு. தி.மு.க.வில் கலைஞர் மறைந்தவுடன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை தலைவராக ஏற்று கழகத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு இலக்கணமாக திகழ்ந்த பண்பின் இமயம் அவர் - எடுத்துக்காட்டுக்கு எப்போதும் இவரே என்ற தனித் தகுதி படைத்தவர்.
அந்த கொள்கை மாவீரரின் மறைவுக்குத் தாய்க்கழகம் தனது வேதனை மிகுந்த துயரத்தை தெரிவிப்பதுடன், அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகள் ஏழு நாட்களுக்குத் தள்ளி வைக்கப்படுகின்றன.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், கொள்கைக் குடும்பத்துத் தலைவர் தளபதி உட்பட அனைவரது துயரத்திலும், தாய்க்கழகம் பங்குபெற்று, நாம் ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டு, இலட்சியச் சுடரை அணையாது காத்து, கொள்கைப் பயணத்தை தொடருவோமாக!பேராசிரியர் என்றும் நமக்கு மங்காத ஒளியாவார்! பாடம் எடுக்கும் பாசறையின் மங்காத முழக்கம்! அவர் வரலாறாகி வழிகாட்டுவார்”என்று குறிப்பிட்டுள்ளார்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: