செவ்வாய், 3 மார்ச், 2020

ராஜ்ய சபா சீட்டுக்கு 100 கோடி...: மறுத்த ஸ்டாலின்....

   மின்னம்பலம்:  திமுகவின் ராஜ்ய சபா
வேட்பாளர்களாக திமுக சார்பில் நடப்பு ராஜ்ய சபா உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரை மார்ச் 1ஆம் தேதி அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்.
ராஜ்ய சபா உறுப்பினர் பதவி அவருக்கா, இவருக்கா என்று பல்வேறு எதிர்பார்ப்புகளும் லாபிகளும் நடந்துகொண்டிருந்த நிலையில், ஸ்டாலின் எடுத்த இந்த மூவர் முடிவு கட்சிக்குள் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது,
எந்த அடிப்படையில் ஸ்டாலின் இந்த மூவரையும் தேர்ந்தெடுத்தார்... சாதி, மத அடிப்படையிலா, சட்டமன்றத் தேர்தல் அடிப்படையிலா என்று திமுகவின் மாவட்டச் செயலாளர்களில் தொடங்கி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரைக்கும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மூவரையும் ஸ்டாலின் செலக்‌ஷன் செய்தது எப்படி? இதற்குப் பின்னால் நடந்த நகர்வுகள் என்ன? திமுக களத்தில் விரிவாக விசாரித்தோம்.


திருச்சி சிவா
கட்சியில் பல முன்னணியினரிடம் ஸ்டாலின் பேசியபோது, ‘திருச்சி சிவா புதுக்கோட்டை மக்களவை உறுப்பினராக 96-97 இருந்திருக்காரு. ராஜ்ய சபாவுல 2000-2002, திரும்பவும் 2007-13, 13-19 எனத் தொடர்ந்து இருக்காரு. இம்முறை அவருக்குப் பதிலாக வேற யாருக்காவது வாய்ப்பு கொடுக்கலாமே’ என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும், ‘சிவா முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே டி.கே.எஸ்.இளங்கோவன் ராஜ்ய சபாவில் இருக்கிறார். இப்போது திருச்சி சிவாவைத் தவிர்ப்பதன் மூலம் வேறு ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்த முடியும்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த எதிர்ப்பை ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார் என்றும் அவர்கள் நம்பினார்கள். ஏனெனில் திருச்சி சிவா 2013இல் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுகிற நிலையில், ‘மீண்டும் திருச்சி சிவாவுக்கே வாய்ப்பா?’ என்று கலைஞரிடம் தன் எதிர்ப்பைத் தெரிவித்தவர் ஸ்டாலின். அதனால் அதே மனநிலையில் இன்றும் இருப்பார் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இந்த எதிர்ப்புகளை எல்லாம் அறிந்துகொண்ட திருச்சி சிவா, “கட்சியில் நான் சீனியர். என்னோடு கட்சியில் இருந்தவர்களும், எனக்குப் பின்னால் கட்சியில் இணைந்தவர்களும் இன்று மிகப்பெரிய பொறுப்புகளுக்குப் போய்விட்டார்கள். அரசிலும் மிகப்பெரிய பதவிகளில் இருந்திருக்கிறார்கள். ஆனால் எனக்குக் கிடைத்த அதிகபட்ச பதவி இந்த எம்.பி பதவிதான். இதை ஏன் மீண்டும் எனக்குத் தரக் கூடாது?’ என்று ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
அதன் பிறகுதான், ‘ராஜ்ய சபாவில் இப்போது வலுவாகப் பேசக் கூடிய ஆள் வேறு யாரும் இல்லாததால் சிவாவையே மீண்டும் அனுப்பலாம்’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஸ்டாலின்.
அந்தியூர் செல்வராஜ்
பலர் ராஜ்ய சபா கேட்டு முட்டி மோதிக்கொண்டிருந்த நிலையில் எந்த வேண்டுகோளும் வைக்காத எந்த கோரிக்கையும் வைக்காத முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜைத் தேடி வந்திருக்கிறது ராஜ்ய சபா எம்.பி வாய்ப்பு.
அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வரை கொங்குவில் திமுக பாதிக்கப்பட்டிருப்பதால்... கொங்குப் பகுதியைச் சேர்ந்த முக்கியமான சமுதாயமான அருந்ததியர் சமுதாயத்தவருக்கு ஒரு ராஜ்ய சபா வாய்ப்பு தர வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் ஸ்டாலின். இந்த கோட்டாவில் எப்படியாவது தனக்கு வாய்ப்பை பெற்றுவிட வேண்டுமென்று முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி பலத்த முயற்சி செய்தார். இதற்காக ஸ்டாலினைச் சந்தித்தும் பேசினார். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் வி.பி.துரைசாமி ஸ்டாலினிடம், ‘நான் இதுக்கு மேல தேர்தல் களத்துல நின்னு சாதிய ஆதிக்கத்தை எதிர்த்து என்ன செய்யப் போறேன்னு தெரியலை. அதனால எனக்கு ராஜ்ய சபா கொடுத்துடுங்க. அருந்ததியர் சமூகத்துக்கு வாய்ப்பு கொடுத்தா கொங்கு திமுகவுக்கு உரமா இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்.
t: 0px; margin: 0px; opacity: 0; overflow: hidden; padding: 0px; position: relative; visibility: visible; width: 752px;">
89லேயே துணை சபாநாயகராக ஆக்கினார் கலைஞர். ஆனபோதும் அதற்குப் பிறகு அருந்ததியர் சமூகத்தில் இருந்து படித்து வழக்கறிஞராக இருந்த துரைசாமிக்குப் பெரிய அளவு அங்கீகாரம் இல்லாமல் போனதால் அதிமுகவுக்குப் போனார். ராஜ்ய சபா எம்.பி.யாகச் சென்றார். அப்போது கலைஞர் டெல்லி வந்திருந்தபோது வி.பி.துரைசாமி கலைஞரைச் சந்திக்கச் சென்றார். ‘என்னய்யா இங்க வந்துடுய்யா. எம்.பி பதவியை மறுபடியும் உனக்கு தர்றேன்யா’ என்று அழைக்க கலைஞரின் பாசத்தைத் தட்டமுடியாமல் மீண்டும் திமுகவுக்கே வந்துவிட்டார். எனவே, கலைஞர் கொடுத்த வாக்கை ஸ்டாலின் இப்போது நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் வி.பி.துரைசாமி.
ஆனால், அவருக்கு ராஜ்ய சபா சீட் தரக் கூடாது என்ற எதிர்ப்பும் ஸ்டாலினுக்குச் சென்றிருக்கிறது. ‘ஆயிரம்தான் இருந்தாலும் அவர் அதிமுகவுக்குப் போயிட்டு வந்தவர்’ என்பதுதான் அது. ஆனால் இதையெல்லாம் தாண்டி ஸ்டாலினுக்கு வி.பி.துரைசாமி மீது ஒரு வருத்தம் இருந்திருக்கிறது.
“கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் வி.பி.துரைசாமியை வைத்துக் கொண்டு சில முக்கிய முடிவுகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. அப்படி விவாதித்துவிட்டு ஸ்டாலின் வீட்டுக்குத் திரும்புவதற்குள் அந்த முடிவுகள் பற்றி ஆங்கிலப் பத்திரிகைகளுக்குச் சென்றுவிடுகின்றன. இவரை டெல்லிக்கு அனுப்பினால் என்னாகும்?‘ என்று கருதிய ஸ்டாலின், கொங்குப் பகுதி அருந்ததியரில் நீண்ட கால கட்சிக்காரர் யார் என்று தேடும்போது அந்தியூர் செல்வராஜைத் தேடிப் பிடித்து அவரை எம்.பி.யாக்கியிருக்கிறார். எந்த நிலையிலும் திமுகவை விட்டுப் பிரியாமல் கட்சிப் பணியாற்றியதற்கான பரிசுதான் அந்தியூர் செல்வராஜுக்குத் தேடிச் சென்றிருக்கிறது.
என்.ஆர்.இளங்கோ
திருச்சி சிவாவுக்கு முக்குலத்தோர் காரணம் சொல்லப்பட்டது போலவே என்.ஆர்.இளங்கோ பெயர் பரிசீலிக்கப்பட்டபோதும் சாதிக் காரணத்தைச் சிலர் முன்னிறுத்தியிருக்கிறார்கள். ‘ஏற்கனவே முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி இருக்கிறார். மீண்டும் அதே சமூகத்திலிருந்து இளங்கோ என்றால் சரியா வருமா? தவிர, ஏற்கனவே வில்சன் எம்.பி.யாகி டெல்லியில் இருக்கிறார். உச்ச நீதிமன்ற வழக்குகளை அவர் பார்த்துக் கொள்கிறார். மாநில அளவில் சட்டத் துறையை வலுப்படுத்த என்.ஆர்.இளங்கோவை இங்கேயே வைத்துக்கொள்ளலாம். சட்டமன்றத்தில் வாய்ப்பு கொடுக்கலாம்’ என்று ஸ்டாலினிடம் சில கருத்துகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் ஸ்டாலினோ, ‘அவர் அரக்கோணம் தொகுதியில் நான் சொல்லித்தான் நின்றார். வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டார். அப்போதே அவருக்கு ராஜ்ய சபா தருவதாகச் சொல்லியிருந்தோம். அதுபோல போன முறை வில்லனுக்குக் கொடுத்துவிட்டதால் இம்முறை இளங்கோவுக்குக் கொடுத்தே ஆக வேண்டும்’ என்று உறுதியாக முடிவெடுத்துவிட்டார்.
100 கோடி - ஸ்டாலின் எடுத்த முடிவு
ராஜ்ய சபா தேர்தல்கள் வரும்போது பற்பல தொழிலதிபர்கள் கோடிகளோடு திமுக, அதிமுகவை அணுகுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். கலைஞர், ஜெயலலிதா காலத்திலேயே பலரும் இதுபோல அணுகி வெற்றிபெற முடியாமல் திரும்பியிருக்கிறார்கள். அதேபோல இந்த முறையும் மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் ஸ்டாலினைச் சந்தித்து, ‘கட்சிக்கு 100 கோடி நிதியா கொடுத்துவிடுகிறேன். எனக்கு ராஜ்ய சபா சீட்டு கொடுங்க’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். அந்தத் தொழிலதிபருக்கு, குடும்பத்தில் சிலரே சிபாரிசும் செய்திருக்கிறார்கள்.
திமுக நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லப்படும் இந்த நிலையில்கூட ஸ்டாலின் அந்த தொழிலதிபரின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டு, திமுக திமுக திமுக என்று இருப்பவர்களை மட்டுமே செலெக்ட் செய்திருக்கிறார்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: