வெள்ளி, 6 மார்ச், 2020

YES Bank வீழ்ச்சியை பார்க்கும் போது ... Margin Call படம் வந்து செல்கிறது.

Karthikeyan Fastura : YES Bank வீழ்ச்சியை பார்க்கும் போது கண் முன்னே Margin Call படம் வந்து செல்கிறது.
அந்தப்படத்தில் வால் ஸ்ட்ரீட்டில் இயங்கும் புகழ்பெற்ற ஒரு இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் திடீரென்று பிங்க் ஸ்லிப் கொடுத்து சில பணியாளர்களை வீட்டிற்கு அனுப்புவார்கள். அதில் அந்த வங்கியில் நீண்டகாலமாக பணிபுரிந்த ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவின் தலைவரையும் கிளப்புவார்கள். அப்போது அவர் சொல்வார் "வங்கியின் நிதி நிலை பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நான் ஆராய்ந்து வருகிறேன். கொஞ்சம் டைம் கொடுங்கள்" என்று கேட்பார். "அதை அடுத்து வரும் உங்கள் ஜூனியர் பார்த்துக்கொள்வார். நீங்கள் கிளம்பலாம்" என்று ரொம்ப எகத்தாளமாக வெளியே அனுப்புவார் வங்கியின் மனித வளத்துறை அதிகாரி.
அவர் எல்லாவற்றையும் பேக் செய்து விட்டு கிளம்பும்போது லிப்டில் வைத்து ஒரு பென்-டிரைவில் கொடுத்து "இது ரொம்ப முக்கியம் கவனமாக இரு" என்று சொல்லிவிட்டு செல்வார்.
அதை அன்று இரவு அந்த ஜூனியர் எடுத்து ஆராய்ந்து பார்ப்பார். அங்கு அவருக்கு ஒரு திடுக்கிடும் செய்தி காத்திருக்கும். வங்கியின் நிதி நிலை இன்னும் சில நாட்கள் கூட தாங்காது. அவர்களின் போர்ட்போலியோ 25% விழுந்துவிட்டால் வங்கியின் மொத்த மதிப்பும் விழுந்துவிடும். அதேபோல வங்கியின் கடன் காப்பு அளவு அதன் தாங்கு திறனை விட மிக மோசமாக இருக்கும். மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் வங்கியின் மதிப்பு விழுவது உறுதி.

அந்த ஜூனியர் அன்று இரவே தனது மேலதிகாரிக்கு இதை தெரியப்படுத்துவான். முதலில் சாதாரணமாக எடுத்துக் கொள்வார். இல்லை இப்போது கவனிக்காவிட்டால் வங்கி திவாலாகி விடும் என்று சொல்லவும் அலுவலகத்திற்கு ஓடி வருவார். அங்கிருந்து கதையின் பரபரப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும். அந்த மேலதிகாரி அவருக்கு மேலுள்ள அதிகாரிக்கு அழைத்து சொல்வார். இதில் முடிவெடுக்க அவராலும் முடியாது. அவர் வங்கியின் CEOக்கு போன் போடுவார். அவர் நேரில் வந்து பார்த்து திகைத்துப்போய் வங்கியின் போர்டு மெம்பர்கள் அனைவரையும் அழைப்பார். இறுதியில் வங்கியின் சேர்மன் வந்து கேட்பார். இதெல்லாம் ஓர் இரவிற்குள் நடக்கும்.
எல்லா வகைகளிலும் தீரவிசாரித்தாலும் வங்கி திவாலாகி போவதை தடுக்க முடியாது என்றுதான் வரும். கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தாக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை மீட்கும் வழிகள் எதுவும் கிடையாது என்று தெரியவரும்போது இரவு மூன்று மணி ஆகிவிடும். அப்போது இவர்கள் ஒரு முடிவு எடுப்பார்கள். வங்கியின் அனைத்து பங்குகளையும், சொத்துக்களையும் கிடைத்த விலைக்கு விற்று வெளியேறுவது என்று முடிவெடுப்பார்கள்.
இது அநியாயம், நம்மை நம்பி இந்த வங்கியின் பங்குகளை வாங்கியிருக்கும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் இதனால் ஒரே நாளில் ஏமாற்றப்படுவார்கள். அவர்களின் முதலீடுகள் முற்றிலுமாக காணாமல் போகும் என்று விற்பனைத் துறை மேலதிகாரி கத்துவார். அதற்கு நாம் என்ன செய்யமுடியும் அதைப் பார்த்தால் நம்முடைய நிலைமை என்னாவது? இருப்பதை விற்பனை செய் உன்னுடைய ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள் என்பார். வேறுவழியின்றி அவரும் மனசாட்சிக்கு விரோதமாக ஃபயர் சேல் செய்வார்.
மொத்தத்தில் வங்கியின் மேல்அடுக்கில் உள்ள அனைவரும் தங்களை காப்பாற்றிக் கொண்டு வங்கியை, அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு செல்வார்கள்.
அந்தப்படத்தில் ஒருநாளில் செய்ததை எஸ் பேங்க் சென்ற ஏப்ரல் மாதம் முதல் ஒரு வருடம் செய்திருக்கிறார்கள். வங்கியின் ஆரம்பகட்ட புரமோட்டர்கள் அனைவரும் நல்ல விலைக்கு தங்கள் பங்குகளை விற்றுவிட்டு கிட்டத்தட்ட வெளியேறிவிட்டார்கள். ஆர்பிஐ இப்பொழுது பாவத்தை சுமக்கிறது.

கருத்துகள் இல்லை: