வெள்ளி, 6 மார்ச், 2020

பார்ப்பனர்களுக்கு தனி கழிப்பறை; கேரள மகாதேவா கோவிலின் அறிவிப்புப் பலகை


தினமணி :கேரளாவின் திரிச்சூரில் புகழ்பெற்ற குட்டுமுக்கு மகாதேவ கோயிலில் அமைந்துள்ளது. சமீபத்தில் திருவிழா ஒன்றிற்காக அங்கு சென்ற அரவிந்த் என்ற ஆராய்ச்சி மாணவர்தான் கோவிலில் இத்தகைய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பதை முதலில் கண்டறிந்தவர்.  கோவில் வளாகத்தில் மூன்று டாய்லெட்டுகள் இருந்துள்ளன. அதில் வழக்கம்போல் முதல் இரண்டு டாய்லெட்டுகளில் ஆண், பெண் என எழுதப்பட்டிருந்தது. மூன்றாவதாக மூடப்பட்டிருந்த அந்த டாய்லெட் அறையின் மேலே பிராமணர்களுக்கு என்று எழுதப்பட்டிருந்திருக்கிறது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அதனை புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. கோவில் நிர்வாகத்தின் இந்த  செயலுக்கு பல்வேறு திசைகளில்  இருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக டாய்லெட்டில் கூட சாதி பார்க்கப்படுவதாக பலரும் கோபத்துடன் கருத்து தெரிவித்ததை அடுத்து, பிராமணர்களுக்கு என்று எழுதப்பட்டிருந்த பலகையை கோயில் நிர்வாகம் நீக்கியுள்ளது.

இதுதொடர்பாக கோவிலில் நிர்வாகக் குழு செயலாளர் பிரேமகுமரன் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறுகையில், 'அந்தப் பலகை 25 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. இந்த பலகையை கோயில் கமிட்டியினர் பார்த்ததில்லை. அவை கோயில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதனை பயன்படுத்தி வருகிறார்கள். பிராமணர்களுக்கு என்று இருக்கும் அந்த டாய்லெட்டை கோயில் குருக்கள் மற்றும் நிர்வாகிகள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பெரும்பாலான கோயில்களில் இதுபோல் குருக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகளுக்காக தனி டாய்லெட்டுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆனால், இதுபோன்று பிராமணர்களுக்கு என்று பலகை வைக்கப்படவில்லை' என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: