செவ்வாய், 3 மார்ச், 2020

சபீதாவின் தற்கொலை: நாம் செய்வதற்கு ஏதேனும் உள்ளதா? – மனுஷ்ய புத்திரன்

uyirmmai.com : கவிஞர் சபீதாவின் தற்கொலை குறித்த ஏராளமான பதிவுகளை பார்க்க முடிந்தது. மனம் பதறச் செய்யும் எதிர்பாராத மரணம். கவின் மலர் நேற்றிரவு கண்ணீரோடு அந்தச் செய்தியைச் சொன்னார். சபீதாவை  சில ஆண்டுகள் முன்பு நன்கறிவேன். அபிராமபுரம் அலுவலகத்திற்கு சிலமுறை சந்திக்க வந்திருக்கிறார். ஒரு இறுக்கமான மத- குடும்ப பின்னணியிலிருந்து வந்து தன்னுடைய வாழ்க்கையை சுயமாக அமைத்துக்கொள்வதற்கான துணிச்சலான முடிவுகளை எடுத்தவர்.
எங்கள் ஊரோடு அவரது குடும்பத்தினருக்கு தொடர்புகள் உண்டு. தன் வாழ்வில் எடுத்த முடிவுகளுக்கான சில விலைகளையும் கொடுத்தார். வாழ்க்கை என்பது கவித்துவமான தர்க்கங்களால் ஆனதல்ல.
அதன் எதார்த்த விதிகள் கொடுமையானவை. அவரது கவிதைத் தொகுப்பு ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் வெளியிட்டு பேசினேன். பிறகு வேறொரு கவிஞர் சம்பந்தப்பட்ட முக நூல் அக்கபோர் ஒன்றில் அவர் விலகிச் சென்றுவிட்டார். இந்த முக நூல் சர்ச்சைகளால் இழந்தவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.

குமரகுருபரன் இறப்பதற்கு முந்தையை 7-8 மாதங்கள் எனக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தார். ஆனால் அப்போதும்கூட அதற்கு முன்னதாக அவரை நானோ அவர் என்னையோ ஃபேஸ்புக்கில் ப்ளாக் செய்தது அப்படியேதான் இருந்தது. சாருகூட சமீபத்தில் எழுதியிருந்தார் ‘மனுஷ்ய புத்திரனை ஃபேஸ்புக்கில் ப்ளாக் செய்ததை எடுக்கவே முடியவில்லை’ என்று.<br /> சபீதாவின் மரணம் மட்டுமல்ல, தற்கொலை முடிவுகள் நாம் அறிந்த யாராவது ஒருவர் மரணத்தின் பாதையை தேர்ந்தெடுக்கும்போது காரண காரியங்கள் குறித்து நம் அனைவருக்குமே சொல்வதற்கு ஏதேனும் ஒன்று இருக்கிறது. இறந்தவர்கள் வழியே இறக்க ஆயத்தமாகிக்கொண்டிருப்பவர்களுக்கு நாம் ஏதோ ஒன்றை போதிக்க விரும்புகிறோம். அல்லது நமக்குள் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கும் தற்கொலை விருப்பத்தை மாற்றிக்கொள்ள போராடுகிறோம். ஆனால் எந்த மரணத்தையும் நமது சொந்த தர்க்கங்களால் மதிப்பிட இயலாது. பொதுமைப்படுத்தவும் முடியாது. சட்டென கிளம்பிப் போவதற்குமுன் கொஞ்சம்கொஞ்சமாக என்ன அழுத்தம் சேர்ந்திருக்கும் என்று யாருக்குத் தெரியும்?<br /> <img alt=" height="200" src="https://uyirmmai.com/wp-content/uploads/2020/03/sucide-1-300x200.jpg" width="300">
ஆனால் நமக்கு அருகாமையில் இருக்கும் ஒருவர் சாவின் பாதையில் நடக்க முற்படுகிறார் என்று நமக்கு ஒருபோதும் தெரியவே தெரியாதா? ‘’இன்றைக்கு காலையில்கூட நன்றாகத்தாங்க பேசிக்கொண்டு இருந்தார்’’ என்ற கூற்றுகளை முழுமையாக ஏற்கமுடியவில்லை. நன்றாக பேசிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள் என்று பொருள் இல்லை. நம் அருகில் ஒருவருக்கு முகம் வாடும்போது நாம் எந்த அளவு அவர்கள் மேல் பொறுப்பு எடுத்துக்கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.
மூன்று தினங்களுக்கு முன்பு நான் அறிந்த ஒரு பெண் தனக்கு ஒருவருடன் ஏற்பட்ட உறவு முறிவினால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தொலைபேசியில் கூறினார். நான் மிகுந்த பதட்டமடைந்துவிட்டேன். அவரிடம் இரண்டுமணி நேரம் பேசினேன். அப்போது நானே கடும் உடல்நலக்குறைவினால் போராடிக்கொண்டிருந்தேன். ஆனால் அந்தப்பொறுப்பை தட்டிக்  கழிக்க எனக்கு உரிமையில்லை. அடுத்த நாள் காலை கண் விழித்ததும் உயிரோடுதான் இருக்கிறாரா என்று பதட்டமாக இருந்தது. போன் செய்தேன் நல்லவேளை போனை எடுத்தார். ‘ உங்ககிட்ட பேசினது மனசு தெளிவாயிடுச்சு..தாங்கஸ் சார்’’ என்றார். என்னை இந்தப் பதட்டத்திலிருந்து விடுவித்ததற்காக நானும் நன்றி கூறினேன்.

நான் என்ன தொழில் முறை கவுன்சிலரா அல்லது தற்கொலை தடுப்பு மையம் நடத்துகிறவனா? எனக்கும் வாரத்தில் ஒரு நாளாவது தற்கொலை எண்ணம் மேலிடத்தான் செய்கிறது. அதற்காக அபயக்குரல்களைக் கேட்டு ஓடிப்போய் பார்க்காமல் இருக்க முடியுமா? எனது நண்பர் ஒருவர் வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து ஏதோ ஒரு லாட்ஜில் தங்கி தான் தற்கொலை செய்துகொள்ளபோவதாகச் சொல்லிவிட்டு போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார், கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க சென்னையில் அவர் தங்க வாய்ப்புள்ள இடங்கள் அனைத்தையும் தேடி அலைந்தேன், சித்ரவதை. கடைசியில் ஒரு லாட்ஜில் குடித்துவிட்டு நினைவில்லாமல் கிடந்தார். கையெடுத்துக் கும்பிட்டு ஊருக்கு அனுப்பி வைத்தேன். ஒரு பெண்ணால் நிராகரிக்கப்பட்டு சாவை நோக்கி நடந்துகொண்டிருந்த நண்பனை தேற்றி மீட்டெடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். பெண் எழுத்தாளர் ஒருவரின் புகைப்படங்களை வைத்து ஒரு பொறுக்கி அவரை அவமானப்படுத்தியபோது அவர் தற்கொலையின் எல்லைக்குச் சென்றார். அவரை ஆற்றுப்படுத்தியதுடன் அந்தப் பொறுக்கியை காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்த என்னாலான எல்லாவற்றையும் செய்தேன். எதுவும் பொதுசேவை அல்ல. நான் தற்கொலை நோக்கி செல்லும்போது மனிதர்கள் பதிலுக்கு என்னைக் கைவிட்டுவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்.

எனக்கு ஆறாத குற்ற உணர்வு ஒன்று இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு என் ஒன்றுவிட்ட தம்பி ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். அழகன். விதவிதமான ஆடைகள் அணிவான். அவனுக்கு திருமணமான ஒரு வருடத்தில் நிகழ்ந்த தற்கொலை. அப்போது நான் திருநெல்வேலியில் இருந்தேன். இறப்பதற்கு ஒரு மாதம் முன் என்னிடம் ‘அண்ணே மனசே சரியில்ல.. உன் கூடவே வந்திடட்டுமா?’’ என்றான். அவன் ஒரு பிஸினஸ் செய்துகொண்டிருந்தான்.  நான் ‘போடா கிறுக்குப் பயலே.. வேலையைப் பார்.. ரெண்டு நாள் வந்து கூட இருந்துட்டு போ.. ஏன் எல்லாத்தையும் விட்டுட்டு வரேங்கிறே?’’ என்று சொல்லிவிட்டு ஊருக்குப்போய்விட்டேன். அவன் வரவே இல்லை. சாவுச்செய்திதான் வந்தது. ஒரு அபயக்குரலை நான் கேட்காமல் போய்விட்டேனோ என்ற குற்ற உணர்வு இன்னும் நெஞ்சை அறுக்கிறது. இன்னும்கூட அடிக்கடி கனவில் வருகிறான் ‘’ ஏண்டா இப்படிப் பண்ணினே ?’’ என்று அவன் கன்னத்தில் மாறி மாறி அறைகிறேன். மெளனமாக நின்றுகொண்டிருக்கிறான். பிறகு மன வளர்ச்சி குன்றிய மகளை விட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட என் அத்தையின் மரணம். தற்கொலையின் ஆறாதத் துயரங்கள் இப்படித்தான் என் கவிதைகள் முழுக்க பின் தொடரும் இருளாய் நிரம்பியிருக்கின்றன.
தற்கொலை செய்துகொள்பவர்களையெல்லாம் காப்பாற்றியிருக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நம் அருகில் இருக்கும் ஒருவரின் கண்ணீரை நாம் சற்றே அச்சத்துடன் காணவேண்டும். அந்தக் கண்ணீர் அவரது வாழ்வையே முடித்துவிடும் பிரளயமாக இருக்கலாம். நமது  எந்த நெருக்கடியிலும் நம் அருகில் இருப்பவர்கள் மேல் நமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. சிலர் நம்மை எந்தப் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள விடாமல் கதவுகளை இறுகக் சாத்திக்கொண்டு தம் தூக்குக்கயிறின் உறுதியை சோதித்துக்கொண்டிருப்பார்கள். அப்போதுகூட அந்தக் கதவை பலவந்தமாக உடைத்துத் திறக்கத்தான் வேண்டியிருக்கிறது. மன இறுக்கத்தில் ஒருவர் தொலைபேசியை எடுக்க மறுத்தால் வீடு தேடிப்போவேன்.
நாம் நிறையப்பேரை இழந்துவிட்டோம். இன்னும் தற்கொலைக்கான க்யூ பெரிதாக நின்றுகொண்டிருக்கிறது. சிறிய அக்கறைகளால் பெரிய முடிவுகளை மாற்ற முடியும். ஒருவருக்கொருவர் மீட்பராக இருப்பதற்கு நெஞ்சில் தீராத அன்பும் பொறுமையும் பொறுப்பும் தேவையாக இருக்கிறது



Sabitha Ibrahim - February 24 at 11:44 AM : Quick lesson about autoimmune diseases.

It takes an average of 3 years and 5 doctors for a person to get a proper diagnosis of an autoimmune disease. I just wish more people understood what an autoimmune disease is. It is not a cold or the flu, you will never get better, and even a nap will not help. Just eating a salad and hitting the gym won’t slim your face or get the pounds off. Sleeping 10 hours doesn’t leave you well rested, ever. Last minute changes in plans because that “just got ran over” feeling never makes appointments, just walks in whenever you aren’t ready. Achy joints and bones, dry skin, breaking hair, mood swings, and depression are just the tip of the iceberg. You are also prone to having multiple autoimmune diseases and have days where no matter how hard you try, you just can’t smile for anyone.
I am watching the ones who will take the time to read this entire post and react.
Please, in honor of someone who is fighting POTS, MCAD, Sjogren's, Scleroderma, Hashimoto Disease, Ankylosing Spondylitis, Fibromyalgia, Lupus, Sarcoidosis, Rheumatoid Vasculitis,Hepatitis, Raynauld's Syndrome, Diabetes, Mold Illness, Celiac, CROHN’S, Ulcerative Colitis, Pemphigus, SPS, MS, PBC, Psoriatic Arthritis, CIDP, MMN And GPA .Copy and paste to your page and reply "DONE" on mine.

‎ Devi Somasundaram : · சில்வியா ப்ளாத் ... அமெரிக்க பெண் கவிஞர் , நாவலாசிரியர், எழுத்தாளர் ..... அவரோட bell jar .கிட்ட தட்ட ஒரு ஆட்டோபயோகிராபி . உளவியல் பிரச்சனைகளால் மிகுந்த அழுத்தில் இருந்தவர்...100 முறைக்கும் மேல் தற்கொலைக்கு முயன்றவர் . தூக்க மாத்திரை சாப்பிடுவது , கார்ல போய் மோதிப்பது, மாடிலேர்ந்து குதிப்பது, பாத்டப்குல்ல மூழ்குவதுன்னு பல முறை காப்பாற்றப்பட்டு . இறுதியில் கேஸ் அடுப்புல ( microwave oven) தலைய குடுத்து தற்கொலை செய்து கொண்டார் ...ஓவனில் இருந்து வரும் நச்சு புகை குழந்தைகள பாதிச்சுட கூடாதுன்னு அடுப்படியை கதவு ஓட்டைகளை துணிகளால் அடைத்து விட்டு ...குழந்தைகளுக்கு காலை உணவை தயார் செய்து வைத்து விட்டு பின் தற்கொலை செய்து கொண்டார் .. சில்வியா கடவுள் நம்பிக்கையாளர், ஜோதிடத்தை நம்பியவர் .மதப் பற்றாளர் ... சபிதா இப்ராஹிம் தன் முதல் அட்டெம்ப்ட்லயே தன் முடிவை தேடிக் கொண்டு விட்டார் .. . .இன்னொரு சில்வியா ப்ளாத் .. அழகான அந்த கவிதை தன்னை தானே முடித்துக் கொண்டது வருத்தம் Addalai Nisry‎ : இங்கே பொதுவெளியில் உற்சாகமாக இருப்பவர்கள் அனைவரும் நிஜவாழ்வில் கவலைகள் சோகங்கள் அற்றவர்கள் என்றில்லையே. சகோதரி சபிதாவை எழுத்துகள்தான் அறிமுகப்படுத்தியது. இங்கே நடைபெறும் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள்,விவாதங்களில் தைரியமாக கருத்துக்களைப் பதிவிடுபவர்.
தனது மகள் குறித்து நீண்ட கனவுகளோடு வசித்தவர் என்பதனை தனது பதிவுகளூடாக அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார்..
ஆனாலும் வலிகளும் துயரங்கள் வாழ்தலையே மிஞ்சி விடுகிற அளவு நிறைந்து விட்டதா என்ன? அவசரப்பட்டு விட்டார் என்று தோன்றுகிறது. அவரது மகளாரின் முகத்தையேனும் நினைத்துப் பார்த்திருக்கலாம்..

 Meenakshi Sundaram : Low destructive instinct

கருத்துகள் இல்லை: