திங்கள், 2 மார்ச், 2020

மார்ச்: ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்குச் சவால்.. India facing diplomatic isolation...


மின்னம்பலம் :  ஐநா பாதுகாப்பு சபையின் வழக்கப்படி ஒவ்வொரு மாதமும் அதன் ஒவ்வோர் உறுப்பினரும் தலைவராகச் செயல்படுவார்கள். இதன்படி ஏற்கனவே போலந்து, வியட்நாம் நாடுகளின் தலைவர்கள் செயல்பட்டபோதுதான், பாகிஸ்தானுக்காக காஷ்மீர் பிரச்னையை ஐநா பாதுகாப்பு சபையில் சீனா எழுப்பியது. அப்போது சர்வதேச அரசியல் பேச்சுகள் மூலமாக அதை முறியடித்தது இந்தியா. இந்த நிலையில் மார்ச் மாதத்துக்காக ஐநா பாதுகாப்பு சபையின் தலைவராக சீனா இருக்கப் போகிறது. இதனால் இந்த மாதம் ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு எதிரான பல நகர்வுகள் இருக்கக் கூடும் என்ற விவாதம் சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருக்கிறது.

ஐநா பாதுகாப்பு சபையின் மார்ச் மாதத் தலைவராக இன்று (மார்ச் 2) சீனாவின் நிரந்தர பிரதிநிதி ஜாங் ஜுன் தி பதவியேற்றுக் கொள்கிறார். இதையடுத்து ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்குச் சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார்கள் சர்வதேச விவகாரங்களைக் கவனிக்கும் வல்லுநர்கள். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ரத்து செய்யப்பட்டதிலிருந்து சீனா ஐநா பாதுபாப்பு சபையின் தலைவர் பதவிக்கு வருவது இதுவே முதன்முறை. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களிடையே சுழற்சி முறையில் தலைவர் பதவி வழங்கப்படும் நிலையில், சீனா ஒரு வருடத்துக்குப் பின் இந்தப் பதவிக்கு வருகிறது.
ஏற்கனவே பாகிஸ்தானுக்காக ஐநா பாதுகாப்பு சபையில் காஷ்மீர் பிரச்னையை சீனா இருமுறை கொண்டு வந்தது. ஆனால், இந்தியாவின் உத்தி அரசியல் காரணமாக இருமுறையும் பாதுகாப்பு சபையின் அதிகாரபூர்வமற்ற விவாதமாகக்கூட காஷ்மீர் பிரச்சினை பட்டியலிடப்படவில்லை. ஆனால், இப்போது காஷ்மீர் பிரச்சினை, இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டம், அதன் பிறகு சமீப நாட்களாக டெல்லியில் நடந்த கலவரங்கள் என்று சர்வதேச சமூகம் இந்தியாவைக் கவனிப்பதற்கான காரணிகள் அதிகரித்துள்ளன. சீனா மார்ச் மாதம் பாதுகாப்பு சபையின் தலைவராக இருப்பதால் இந்த மாதத்தில் இந்தியாவுக்கு எதிரான தீர்மானங்களை அதிகாரபூர்வமாகக் கொண்டுவர தன் தோழனான சீனாவுக்கு பாகிஸ்தான் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதால் கடந்த சில நாட்களாகவே இந்தியா ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினர் நாடுகளுடன் தீவிரமாகப் பேசி வருகிறது.
சீனா தவிர ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது உரையாடலைக் கவனமாக மேற்கொண்டு வருகிறது.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: