செவ்வாய், 3 மார்ச், 2020

பறிக்கத் துடிக்கும் பரம்பரை எதிரிகள்: ஸ்டாலின்.. தமிழக கோயில்களை மத்திய தொல்லியல் துறையின் கீழ் மாற்றும் முயற்சி

பறிக்கத் துடிக்கும் பரம்பரை எதிரிகள்: ஸ்டாலின்மின்னம்பலம் : தமிழக கோயில்களை மத்திய தொல்லியல் துறையின் கீழ் மாற்றும் முயற்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள பழமை வாய்ந்த திருக்கோயில்களின் நிர்வாகத்தை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதனை நாளிதழ் ஒன்றுக்கு கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்திலுள்ள 7,000 கோயில்களின் பராமரிப்பும் நிர்வாகமும் மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை சிறப்பாக பராமரித்துவரும் சூழலில், இந்த முயற்சியை கைவிட வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும், திருக்கோயில்களையும் மத்திய தொல்லியல் துறை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் எல்லாம் ஏற்கனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. பண்டைய வரலாற்றுத் தொன்மை வாய்ந்த சின்னங்களைக் கண்டறிந்து - பாதுகாத்து, பராமரிப்பதற்கென தமிழகத்தில் “தொல்லியல் துறை”ஒன்று செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களே பாழடைந்து - பராமரிப்பு இல்லாமல் கிடக்கின்ற நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றையும் கைப்பற்றுவோம் என்பது அநீதியானது” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் அறிவிப்பு அடாவடியானது; மத்திய - மாநில உறவுகளுக்கு எதிரானது; திருக்கோயில்களில் சமூகநீதி அடிப்படையிலான நியமனங்களைப் பறித்து - வட நாட்டவருக்கும், மொழி தெரியாதோர்க்கும் கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் தாரை வார்க்கும் முயற்சி ஆகும் எனக் கூறியுள்ள ஸ்டாலின்,
“திருக்கோயில்கள் நிர்வாகத்தினை தமிழக அரசிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.க. மத்திய அமைச்சரின் இந்த செயலுக்கு, எதிர்ப்பு காட்டாமல், இதுவரை அ.தி.மு.க. அரசும் - தமிழக கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜனும் மவுனமாக இருக்கிறார்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், “உத்தரபிரதேசத்தில் உள்ள பா.ஜ.க. எம்.பி மூலம் மக்களவையில் தனிநபர் தீர்மானம் கொண்டுவர வைத்த “பரம்பரை எதிரிகள்” தமிழகத்தின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டுக் களஞ்சியங்களான திருக்கோயில்களைப் பறித்துக் கொள்ளத் துடிக்கிறார்கள். தமிழர்களின் நாகரிகம் - பண்பாடு ஆகியவற்றைச் சிதைக்க இரவு பகலாகத் தூக்கமின்றிச் செயல்படுகிறார்கள். மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கிறோம் என்ற ஒரே ஆணவத்தில் நடத்திட நினைக்கும் இந்த கலாச்சாரப் படையெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் அனுமதிக்காது” என்றும் கூறியுள்ளார்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் கைப்பற்ற நினைக்கும் கபட எண்ணத்தை மனதிலிருந்து மத்திய கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் முளையிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டும் என்றும், மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். திருக்கோயில்களையும், நினைவுச் சின்னங்களையும் எடுத்துக் கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை - கலாச்சாரத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்யுமேயானால் அதை எதிர்த்து திமுக சார்பில் தமிழ் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார் ஸ்டாலின்.
எழில்

கருத்துகள் இல்லை: