புதன், 4 மார்ச், 2020

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால், தயிர் விற்க தடை விதிக்க பரிசீலனை - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தினத்தந்தி : பால், தயிர், எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க பரிசீலித்து வருவதாக சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 சென்னை, தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் டீ கப் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அத்துமீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 52 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் உள்ள உணவகங்கள், நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், டாஸ்மாக் பார்கள், வழிபாட்டு தலங்கள் என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்து திடீர் சோதனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

பொரித்த சிக்கன் உணவுகளை வினியோகம் செய்த 42 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் எக்காரணம் கொண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளே வந்துவிடாதபடி கண்காணிக்கப்படுகிறது. உணவகங்கள் மற்றும் மளிகை கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வாடிக்கையாளர்களுக்கு விலையை குறைத்து சலுகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின்போது விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், விளையாட்டு நிகழ்வுகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என மக்கள் கூடும் இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக தொன்னை, வாழை இலை போன்றவற்றை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பால், தயிர், எண்ணெய் பாக்கெட் மற்றும் சீலிட்ட கவரில் விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விலக்கை தளர்த்தக்கோரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி பால் பாக்கெட் உள்ளிட்ட விலக்கு அளிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், ‘உணவு பொருட்களை பிளாஸ்டிக் பையில் விற்பனை செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஆவின் பால் பாக்கெட்டில் இருந்து தொடங்க வேண்டும். திரையரங்குகளிலும் பிளாஸ்டிக் தடை தொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட வேண்டும்.

பிளாஸ்டிக்கை பயன்படுத்தி டீ-சர்ட், சூட்கேஸ் போன்ற மாற்றுப்பொருட்களை தயாரிக்க வேண்டும். பிளாஸ்டிக் தடை மற்றும் மாற்றுப்பொருட்கள் தயாரிப்பு குறித்து மாணவர்களிடமும் அரசு ஆலோசனை கேட்கவேண்டும்’ என்று உத்தரவிட்டனர். தொடர்ந்து விசாரணையை ஏப்ரல் 28-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்

கருத்துகள் இல்லை: