புதன், 4 மார்ச், 2020

கன்னிமாடம்... காதலர்களுக்கு .... விழிப்புணர்வூட்டுகிறது... விமர்சனம்

Vini Sharpana : 'கன்னிமாடம்' பார்த்தேன். ஆணவக்கொலைக்கு எதிரான
வன்முறைக் கதை. தியேட்டரின் இருக்கையில் அமர்ந்திருப்பது மறந்துபோய்விடுகிறது. ஒருக்கட்டத்தில், சென்னை சூளைமேட்டிலுள்ள ஒரு வீட்டில் அமர்ந்துகொண்டு அக்கம் பக்கத்துவீட்டில் நடக்கும் சம்பவங்களை பார்ப்பதுபோலவே பதைபதைப்பூட்டுகின்றன காட்சிகள்.
சுப்பிரமணியபுரம் படத்து ஜெய் கெட்-அப்பில் இருக்கும் கதையின் நாயகன் அன்பு உட்பட அனைத்து கதாப்பாத்திரங்களும் நடிகர்களைப்போல் இல்லை. அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைப் போலவே வாழ்ந்திருக்கிறார்கள், பாராட்டுகள்
இருள் கவ்விய சென்னை கிண்டியில் இறங்கியதிலிருந்து க்ளைமாக்ஸ்வரை கண்களாலேயே கதை வசனம் பேசுகிறார் மலர். 'எவ்ளோ பணம் இருந்தாலும் மனசுக்கு புடிச்ச காதலியோட வாழ்ற சந்தோஷம் கிடைக்குமா?' என்று உண்மைக் காதலின் உன்னதத்தைப்பேசி கண்களைக் குளமாக்குகிறார் கதிர்.
சாதீய வெறியால் பெற்றோர்கள் ஆணவக்கொலை செய்யும் சூழல் ஏற்பட்டு வேறுவழியில்லாமல், காதலர்கள் சுயமாக திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டால் முதலில் பாதுகாப்பான நபரை நாடிச்செல்லவேண்டும்...

சுயமாக சம்பாதிக்கும் திறனைப் பெற்றிருக்கவேண்டும் என்றும் எச்சரிக்கையூட்டுகிறது.
ஆனால், தன்னை விரும்பிய; தானும் விரும்பிய ஸ்டெல்லாவை அன்பு விட்டுக்கொடுப்பது முரண்பாடாக உள்ளது. கதையில் வரும் மூன்று காதல்களுமே நெகட்டிவ் அப்ரோச்சை உண்டாக்குகின்றன. ஆணவக்கொலை செய்கிறவர்கள் காலம் முழுக்க வழக்குச்செலவுகள், சிறைதண்டனை என அலைந்தே வாழ்க்கை முடிந்துவிடும். அப்படியே, திருந்துவதுபோல் காட்டுவார்கள் என்றால் ஏமாற்றம். உடுமலைப்பேட்டை சங்கரின் ஆணவப்படுகொலையை காட்சிப்படுத்தி 'பலி' தீர்க்கிறது. அது, திரைக்கதைக்கு ட்விஸ்டாக இருந்தாலும் பலிக்கு பலி தீர்வாகாது. சமூகத்தில் சாதீயவெறிதான் சாக வேண்டுமே தவிர சாதீயவெறியர்கள் அல்ல.
கன்னிமாடம்... காதலர்களுக்கு தைரியப்படுத்தவில்லை; விழிப்புணர்வூட்டுகிறது. தொய்வில்லாத திரைக்கதையால் மட்டும் போஸ் வெங்கட் 'பாஸ்' வெங்கட் ஆகியிருக்கிறார்!
- வினி சர்பனா

கருத்துகள் இல்லை: