வெள்ளி, 6 மார்ச், 2020

ரஜினிக்கு ஏமாற்றம் தந்தது எது.. கூட்டத்தில் நடந்தது பற்றி ...

ரஜினிக்கு ஏமாற்றம் தந்தது எது?
மின்னம்பலம் : ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (மார்ச் 5) சென்னையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி,
“கட்சி தொடங்குவது குறித்தான விஷயங்களை விவாதிப்பதற்காக ஓர் ஆண்டுக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்தேன். அவர்களின் நிறைய கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். மாவட்டச் செயலாளர்களுக்குத் திருப்தியாக இருந்தது. ஆனால், ஒரு விஷயத்தில் எனக்குத் திருப்தி கிடையாது, ஏமாற்றம்தான். அது என்ன என்பதை தற்போது சொல்ல விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

ரஜினிக்கு ஏமாற்றம் அளித்த விஷயம் என்ன என்பதைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சில மாவட்டச் செயலாளர்களிடமே பேசினோம்.
“மக்கள் மன்றமாக மாற்றியபோதே ரஜினி எல்லாருக்கும் ஒரு விஷயத்தை எச்சரிக்கையாகத் தெரிவித்தார். மன்றத்தில் யாரும் கோஷ்டி வளர்க்கக் கூடாது என்பதுதான் அந்த எச்சரிக்கை. ஆனால், அதையும் மீறி பொதுஜன அமைப்புக்கே உரிய கோஷ்டிப் பூசல்கள் ரஜினி மன்றத்திலும் இருக்கின்றன. சத்தியநாராயணன் அளவுக்குத் தலையிட்டுத் தீர்த்து வைப்பதில் தலைமை நிர்வாகிகளுக்கு அனுபவம் போதவில்லை என்பதால் இந்தப் பூசல் ரஜினி மக்கள் மன்றத்தின் சில மாவட்டங்களில் அதிகமாகவே இருந்தது.
இதைக் குறிப்பிட்டுத்தான் மாவட்டச் செயலாளர் ஒருவர், ‘மாவட்ட அளவுல அதுக்குக் கீழ சில பேர் கட்டுப்பாட்டை மீறி செயல்படுறாங்க. அதனால மன்றத்தின் பேரு கெட்டுப் போகுது. அவங்களை நீக்க முடியலை. இதுக்கு என்ன வழி?’ என்று கேட்டார்.

இதற்குப் பதில் சொல்லும்போதே ரஜினி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘நம்ம மன்றத்துல சில பேர் கட்டுப்பாட்டை மீறி செயல்படுறாங்கன்னு நாம பேசுறோம். எல்லா கட்சியிலயும் இன்னிக்கு இப்படித்தான் இருக்கு. ஆனா ஒண்ணு... மத்த கட்சிகள் மாதிரி நாம கிடையாது. மத்த கட்சியில இருக்கிற கோஷ்டிப் பூசல் நம்ம கட்சியில இருக்கக் கூடாது. கட்டுப்பாடு, ஒழுங்கு நம்மகிட்ட இருக்கணும். இதுதான் நான் எதிர்பார்க்குறது. சில இடங்கள்ல இந்தக் கட்டுப்பாடு, ஒழுங்கு இல்லைங்கறதுதான் எனக்கு வருத்தமா இருக்கு, ஏமாற்றமா இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.
ரஜினி என்ன நினைக்கிறார் என்றால், அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏராளமான முரண்பாடுகள் இருந்தும் அவங்க வெளியே ஒண்ணாதான் வர்றாங்க, பேசுறாங்க, சிரிச்சுக்கறாங்க, அறிக்கை விடுறாங்க. அப்படி இருக்கும்போது நம்ம மன்றத்துல இந்த அளவுலயே ஒருத்தருக்கொருத்தர் எதிரா செயல்படக் கூடாது என்று நினைக்கிறார்” என்கிறார்கள்.
-வேந்தன்


யார் யாருடன் கூட்டணி? -மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மனம் திறந்த ரஜினி யார் யாருடன் கூட்டணி? -மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மனம் திறந்த ரஜினி சுமார் ஒன்றரை வருடத்துக்குப் பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை இன்று (மார்ச் 5) ஒரு சேர சந்தித்துக் கூட்டம் நடத்தியிருக்கிறார் ரஜினிகாந்த். சிஏஏ விவகாரத்தில் சமீப காலமாக மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளித்து வந்த ரஜினி, சில நாட்களாகவே தன் நிலைப்பாட்டில் லேசான மாறுதல் இருப்பதை சூசகமாக பேட்டிகள் மூலம் தெரிவித்து வந்தார்.

இஸ்லாமிய அறிஞர்கள் சந்திப்பு, ரசிகர்கள் சந்திப்பு என்று சில நாட்களாகவே அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்திய ரஜினி, இன்று (மார்ச் 5) சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்தித்தார். கூட்டம் தொடங்கிய உடனே சில வார்த்தைகள் பேசிய ரஜினி, “ எப்படி இருக்கீங்க எல்லாரும்?” என்று கேட்டவர், “நம்ம மன்றம் எப்படி போய்க்கிட்டிருக்கு, மக்கள் என்ன நினைக்கிறாங்கனு உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கதான் எல்லாரையும் வரவழைச்சிருக்கேன்” என்று சொன்னவர் முழுக்க முழுக்க மாவட்டச் செயலாளர்களையே பேசுமாறு கூறியிருக்கிறார். ஒவ்வொரு மாசெவாக பேச ஆரம்பித்துள்ளனர். “தமிழ்நாடு முழுசும் உங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கு. மக்கள் எப்போது கட்சி ஆர்மபிக்கப் போறோம்னு ஆவலா இருக்காங்க தலைவா?” என்று ஒரு மாவட்டத் தலைவர் பேச, “ஏற்பாடுகள் ரொம்ப தீவிரமா நடந்துக்கிட்டிருக்கு. சீக்கிரமே நாம அறிவிப்பை வெளியிட்டுடுவோம்” என்று பதில் சொன்னார்


ரஜினி. இன்னொரு மாவட்டச் செயலாளர் பேசுகையில், “மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை வேணாம்னு நீங்க சொன்னதால நிறுத்தி வச்சிட்டோம். இப்ப கட்சி ஆரம்பிக்கப் போறோம், தேர்தல் வேற வருது. இப்ப என்ன செய்யுறது? என்று கேட்க அதற்கு ரஜினி பதில் சொல்லியிருக்கிறார். “நாம கட்சி ஆரம்பித்த பிறகு உறுப்பினர் சேர்க்கையை வச்சுக்கலாம்னு நான் தான் ஏற்கனவே சொன்னேன். அதுக்கு முக்கியமான காரணம் இருக்கு. இப்ப நாம மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்த்து வச்சிருந்தோம்னா, கட்சி ஆரம்பிக்க தாமதமாகுதுன்னு சும்மா கொஞ்ச பேரு சொன்னால் கூட, அவங்களை திட்டமிட்டு மத்த கட்சிக்காரங்க இழுப்பாங்க. ரஜினி மன்றத்தினர் வேறு கட்சியில் சேர்ந்தார்கள்னு செய்தி வரும். அது நல்லா இருக்காதுல்ல. அதனால கட்சி ஆரம்பிச்ச பிறகு உறுப்பினர் சேர்க்கையை வச்சுக்கலாம்” என்று கூறியிருக்கிறார் ரஜினி. தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாவட்டத் தலைவர், “மன்றத்துல யாரையும் சேர்க்கவும் வேணாம் நீக்கவும் வேணாம்னு நீங்க ஏற்கனவே சொல்லிட்டீங்க. ஆனா மாவட்ட அளவுல அதுக்குக் கீழ சில பேர் தப்பு பண்றாங்க. அதனால மன்றத்தின் பேரு கெட்டுப் போகுது. அவங்க நீக்க முடியலை. இதுக்கு என்ன வழி?” என்று கேட்டிருக்கிறார்.

 அந்தக் கேள்விக்கு ரஜினி, “உங்களை மாவட்டச் செயலாளரா நான் தானே போட்டிருக்கேன்? மாவட்ட அளவுல மன்றத்தை நல்லவிதமா வச்சிருக்கறதுதான் உங்க பொறுப்பு. தப்பு பண்றவங்க யாரா இருந்தாலும் விடக் கூடாது. யார் அதுமாதிரி இருக்காங்கனு சொல்லுங்க. நடவடிக்கை நிச்சயமாக எடுப்போம்” என்று பதிலளித்துள்ளார். மன்றம் பற்றிய இப்படிப்பட்ட விவாதங்களுக்குப் பிறகு பல மாவட்டச் செயலாளர்கள், “கூட்டணி பற்றி பலரும் பலவிதமா பேசுறாங்க தலைவரே... உங்களை பிஜேபிதான் டைரக்ட் பண்ணுதுனு சொல்றாங்க” என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். சில நிமிடங்கள் மாவட்டச் செயலாளர்களின் கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொண்ட ரஜினி, பின் அழுத்தம் திருத்தமாகவே தொடங்கினார். “பாஜகவுடன் நிச்சயமாக நாம கூட்டணி வைக்கப் போறது கிடையாது. இஸ்லாமியர்கள் முழுதுமாக பாஜகவை எதிர்க்கும்போது நாம எப்படி அவங்க கூட கூட்டணி வைக்க முடியும்? நமக்கு பாரதிய ஜனதாவோடு கூட்டணி இல்லை... இல்லை... இல்லை” என்று மூன்று முறை இல்லை என்பதை திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார் ரஜினி. அப்போது கைதட்டல்கள் எழுந்தன. ”அப்படின்னா கூட்டணியே வைக்கமாட்டோமா... கூட்டணி இல்லாம தேர்தலை சந்திக்க முடியுமா?” என்றும் சிலர் கேட்டிருக்கிறார்கள்.

“பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுடனும்... திமுக, அதிமுக ஆகிய இரண்டு மாநிலக் கட்சிகளுடனும் இந்த நான்கு கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. ஆனால் கூட்டணி அமைத்துதான் நாம் போட்டியிடுவோம். மற்ற கட்சிகள் நம்மோடு வருவார்கள்” என்று ரஜினி பதில் அளித்தபோதும் அதே கைதட்டல்கள் எழுந்தன.

 இதன் பின் சில மாவட்டத் தலைவர்கள் எழுந்து, “தலைவரே... தேர்தல் வரும்போது மன்றத்துக் காரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கணும். இது எல்லாருடைய எதிர்பார்ப்பு” என்றார். அப்போது ரஜினி, “கண்டிப்பா மன்றத்தினருக்கு முன்னுரிமை கொடுப்போம். ஆனா ஒண்ணு சொல்லிக்கிறேன்,. கட்சி ஆரம்பிச்ச பிறகும் மன்றம் இருக்கும். மன்றத்தின் செயல்பாடுகள் தொடரும்”என்று சொல்லியிருக்கிறார் ரஜினி. தென் சென்னை மாவட்டத் தலைவர் அசோக் ஏதோ சொல்ல எழ, ‘சொல்லு அசோக்... சொல்லு அசோக்’ என்று அவரை பேச அழைத்தார் ரஜினி. அப்போது அசோக், “கரிஷ்மா உள்ள லீடர் தமிழ்நாட்ல இப்ப அரசியல்ல யாருமே இல்லை. நீங்கதான் கரிஷ்மா உள்ள தலைவர். அடுத்த வருஷம் நீங்கதான் தலைவா முதலமைச்சர்,. இது ஆண்டவனே முடிவு பண்ணினது” என்று சொல்ல புன்னகை பூத்துக் கொண்ட ரஜினி எல்லாரையும் கையெடுத்து வணங்கினார். கூட்டம் முடிந்ததும் அனைவருக்கும் வடை, பாயாசத்தோடு சைவ விருந்து அளிக்கப்பட்டது.

 ரஜினியே பக்கத்தில் நின்று எல்லாரையும் சாப்பிடச் சொல்லி உரையாடினார். வடை பாயாச விருந்தைவிட ரஜினி கூறிய கூட்டணி மெசேஜே மன்ற நிர்வாகிகளுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. வேந்தன்

கருத்துகள் இல்லை: