வியாழன், 24 ஜனவரி, 2019

வெயிட்டர் பணிக்கு 7,000 பேர் விண்ணப்பம்.. மகாராஷ்ட்ரா தலைமை செயலகம்

வெயிட்டர் பணிக்கு 7,000 பேர் விண்ணப்பம்!மின்னம்பலம் : மகாராஷ்டிர மாநிலத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த சுமார் 7,000 பேர் உணவகப் பணியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலக உணவகத்தில் காலியாக உள்ள 13 வெயிட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் பணிக்குச் சுமார் 7,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள். ஆனால், இந்தப் பணிக்கு நான்காம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது.

பணியாளர்களைத் தேர்வு செய்யும் முறை டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது, தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர். 8 ஆண்கள், 5 பெண்கள் உட்பட 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பையும், 12 பேர் கல்லூரிப் படிப்பையும் முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா இளைஞர்களுக்குப் போதுமான வேலைவாய்ப்புக்களை உருவாக்க மாநில அரசு தவறியதற்கான அடையாளம்தான் இது என்று தெரிவித்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக். “மாநிலத்தில் புதியதாகத் தொழிற்சாலைகள், கட்டுமானத் திட்டங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. மகாராஷ்டிர மக்கள் முழுக்க முழுக்க நெருக்கடியிலும் துன்பத்திலும் உள்ளனர்” என்று அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது அம்மாநில பாஜக. “தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களைத் தடுக்க முடியாது. நாங்கள் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இந்த எண்ணிக்கை ஆரோக்கியமானது” என மகாராஷ்டிர நிதியமைச்சர் சுதிர் முங்கந்திவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் அவரது கருத்துடன் ஒத்துப்போகவில்லை. 2016ஆம் ஆண்டு 33.56 லட்சமாக இருந்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை, இந்தாண்டு 42.2 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும், இந்தாண்டு 17,000 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: