சனி, 26 ஜனவரி, 2019

ஆந்திராவில் காங்கிரஸ் 25 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்து போட்டி

vikatan.com - சக்திவேல் : “ஆந்திராவில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்” என்று அறிவித்திருக்கிறது காங்கிரஸ்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், பி.ஜே.பி கூட்டணியிலிருந்து வெளியேறினார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. “ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை” என்பதைக் காரணமாக சொன்னார். அடுத்த சில மாதங்களில் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினார். தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸும் தெலுங்கு தேசமும் கூட்டணி அமைத்து களம் கண்டன. ஆனாலும், சந்திரசேகர் ராவை அரியணையிலிருந்து இறக்க முடியவில்லை, இரண்டு கட்சிகளாலும். கடந்த முறை, தனித்துக் களமிறங்கியபோதே இரண்டு கட்சிகளும் 36 (காங்கிரஸ் 21, தெலுங்குதேசம் 15) இடங்களைப் பெற்றன. ஆனால், இப்போது கூட்டணி அமைத்துக் களமிறங்கியும் 21 (காங்கிரஸ் 19, தெலுங்குதேசம் 2) தொகுதிகளையே கைப்பற்ற முடிந்தது. அப்போதே சந்திரபாபு நாயுடு யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.


கடந்த சில தினங்களுக்கு முன்னால், “தெலுங்கு தேசத்துக்கும் காங்கிரஸுக்கும் தேசிய அளவில் மட்டுமே கூட்டணி” என்று தெளிவாக அறிவித்துவிட்டார். அதனால், ஆந்திராவில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது காங்கிரஸ். “இருக்கும் 25 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்துக் களம் காண்கிறோம்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார், அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் உம்மன் சாண்டி. நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்கிறது ஆந்திரா. அதிலும் தனித்துப்போட்டியிடுகிறது காங்கிரஸ். 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்தே களமிறங்குகிறார்கள்.

ஆந்திராவைப் பொறுத்தவரை, காங்கிரஸ் இல்லாதது சந்திரபாபுவுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. `மாநிலத்தைப் பிரித்தவர்கள்’ என்ற கோபம், காங்கிரஸ் மேல் ஆந்திர மக்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அதனால், ’காங்கிரஸ் இல்லாதது நமக்கு நல்லதே’ எனும் முடிவுக்கு வந்துவிட்டார் அவர். அங்கே, தெலுங்கு தேசத்துக்கு சவாலாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை சமாளிக்க, பவன் கல்யாணின் ஜனசேனாவை அணிக்குள் சேர்க்க ஆலோசித்து வருகிறார்.
ஆக, உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து, ஆந்திராவிலும் தனித்து விடப்பட்டிருக்கிறது காங்கிரஸ்.
vikatan.com

கருத்துகள் இல்லை: