திங்கள், 21 ஜனவரி, 2019

கர்நாடக ஓட்டலில் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ... தாக்கிய எம்.எல்.ஏ. கணேஷ் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை உறுப்பினர் ஆனந்த் சிங் என்பவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. கணேஷ் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சொகுசு ஓட்டலில் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. புகைப்படம் வெளியானதுமாலைமலர் : கர்நாடக மாநிலம், சொகுசு ஓட்டலில் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் காயங்களுடன் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது. பெங்களூரு: கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் (ரெசார்ட்) தங்க வைக்கப்பட்டனர். பாரதீய ஜனதாவின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில்தான் இப்படி செய்திருப்பதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்திருந்தார்.


நேற்று முன்தினம் இரவு, ரெசார்ட்டில் உள்ள ஒரு அறையில் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், பீமா நாயக், கணேஷ் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

பீமா நாயக், கணேஷ் ஆகியோர் ஆனந்த்சிங்கிடம், ‘நாங்கள் பா.ஜனதாவுக்கு செல்ல இருந்த ரகசிய திட்டத்தை நீங்கள் தான் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் கூறிவிட்டீர்கள்’ என்று குற்றம்சாட்டியதாக தெரிகிறது. 

இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கணேசும், பீமா நாயக்கும் சேர்ந்து தாக்கியதில் ஆனந்த் சிங் படுகாயம் அடைந்தார். பெங்களூருவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று நேற்று தகவல்கள் வெளியாகின.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிகிச்சை பெறும் ஆனந்த் சிங்கை மந்திரி ஜமீர் அகமதுகான் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ரெசார்ட்டில் நண்பர்களுக்குள் சிறிய அளவில் தகராறு நடந்துள்ளது. பெரிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன’ என்றார்.

மற்றொரு மந்திரியான டி.கே.சிவக்குமார், ‘எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்கள் தான் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆனந்த் சிங் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தலை மற்றும் நெஞ்சு பகுதியில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடபட்டுள்ளது.

இதற்கிடையில், மருத்துவமனையில் வீங்கிய முகத்துடன் ஆனந்த் சிங் படுத்திருக்கும் புகைப்படம் சில ஊடகங்களில் வெளியாகி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்குள் மோதல் நடந்தது உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளது.

கருத்துகள் இல்லை: