சனி, 26 ஜனவரி, 2019

பெற்ற மகளைக் கொன்று நாடகமாடிய தாய் கைது..

THE HINDU TAMIL : தவறான உறவை மகள் கணவனிடம் கூறிவிடுவார் என்கிற எண்ணத்தில் மகளைக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்து கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடிய தாய் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் உள்ள இலுப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (24). இவரது கணவர் கடலூர் மாவட்டம் மாங்குளத்தைச் சேர்ந்த சிவசங்கர் (28). இவர் சிங்கப்புரில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஷிவானி என்ற மகள் இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் இவரது கிராமம் அமைந்துள்ள தலைவாசல் மும்முடி கிராமம் அருகே நெடுஞ்சாலை ஓரம் உள்ள கிணற்றில் நீரில் தத்தளித்தபடி பிரியங்கா கூச்சலிட்டத்தைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் போலீஸாரிடமும், பொதுமக்களிடமும் தனது மகள் கிணற்றில் மூழ்கிவிட்டாள் என்று கூறியதை அடுத்து அவரது மகள் ஷிவானியின் உடலும் மீட்கப்பட்டது. இதைப் பார்த்து பிரியங்கா கதறினார்.

இறைவா, என் உயிரை எடுத்துக்கொண்டு என் மகளை உயிருடன் விட்டு வைக்கக்கூடாதா? என கதறினார். அவருக்கு அக்கம் பக்கத்தினர் ஆறுதல் சொன்னார்கள். போலீஸார் அவரிடம் என்ன நடந்தது என விசாரித்தனர்.
அப்போது அவர் அழுதபடி நடந்ததை தெரிவித்தார். தனது மகளுடன் கடலூரில் உள்ள கணவரின் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு 24-ம் தேதி இரவுப் பேருந்தில் வீடு திரும்பியதாகவும், இரவு சுமார் 10 மணி அளவில் இரண்டு முகமூடிக் கொள்ளையர்கள் தன்னை வழிமறித்து தன்னிடம் உள்ள 2 சவரன் நகை, ரூ.1000 ரொக்கப் பணத்தை பறித்ததாகவும் கூறினார்.
முடிவில் தன்னையும், மகளையும் கிணற்றில் தள்ளிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றதாகவும், தனது மகள் நீரில் மூழ்கிவிட்ட நிலையில் தான் மட்டும் பம்பு செட் பைப்பை பிடித்துத் தொங்கியபடி உயிருக்குப் போராடியதாகவும் தெரிவித்தார். போலீஸார் அவர் சொன்னதை நம்பி விசாரணை நடத்தினர்.
அப்போது போலீஸாருக்கு தாய் பிரியங்காவின் அழுகை செயற்கையாக இருப்பதாகப் பட்டது. நகை, பணத்தை பறித்தவர்கள் அதன் பின்னர் கிணற்றில் ஏன் தள்ளிவிட வேண்டும் என சந்தேகித்தனர். பிரியங்காவின் செல்போன் அழைப்புகளைச் சோதித்தனர்.
அப்போது 24-ம் தேதி பிரியங்கா ஒரு நம்பரில் அதிகம் பேசியுள்ளது தெரியவந்தது. பிரியங்கா பேசிய தகவலை எடுத்த போலீஸார் அவரது ஊரிலும், அவரது தாய் சரோஜாவிடம் நடத்திய விசாரணையிலும் ஒரு முடிவுக்கு வந்தனர். பிரியங்காவுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
பின்னர் போலீஸார் அவர்கள் பாணியில் பிரியங்காவை  விசாரித்தபோது தன் மகளை தானே கொன்றுவிட்டு நாடகமாடிய உண்மையை ஒப்புக்கொண்டார். பிரியங்காவின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவரது நண்பர் ஒருவருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அது கூடா நட்பாக மாற, இதை 5 வயது மகள் ஷிவானி பார்த்துள்ளார்.
இதுகுறித்து அவரது பாட்டியிடம் சொல்ல அவர் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தை அரசல்புரசலாக கேள்விப்பட்ட சிவசங்கர் சிங்கப்பூரிலிருந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் மிரண்டு போன பிரியங்கா, தனது மகள் ஷிவானி தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாளோ என பயந்துள்ளார்.
இதனால் மகளைக் கொன்றுவிட முடிவெடுத்தார். ஆனால் அது கொலை போல் இருக்கக்கூடாது என முடிவெடுத்து தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டம் தீட்டி கடைசியில் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றி மகளைக் கொலை செய்துள்ளார்.
பிரியங்காவும், அவரது ஆண் நண்பரும் அழகாகத் திட்டம்போட்டார்கள். ஆனால் செல்போன் கையிலிருப்பதும், அதில் அவர்கள் தொடர்ச்சியாகப் பேசியதையும் மறந்துவிட்டார்கள். இது போலீஸாருக்குத் துப்பாக அமைந்தது. அவர்களது கால் டீட்டெய்லே அவர்களை சிக்க வைத்தது.
தவறான உறவுக்காக பெற்ற மகளையே கொன்றுவிட்டு , தனது வாழ்க்கையையும் கெடுத்துக்கொண்டு போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார் பிரியங்கா. இந்தக் கொலையில் மூளையாக செயல்பட்ட பிரியங்காவின் நண்பரையும் போலீஸார் தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: