சனி, 26 ஜனவரி, 2019

ஜாக்டோ ஜியோ: வீடு தேடிச் சென்று கைது!

ஜாக்டோ ஜியோ: வீடு தேடிச் சென்று கைது!மின்னம்பலம் : கடந்த 4 நாட்களாக ஜாக்டோ ஜியோவினரின் போராட்டம் தொடர்ந்த நிலையில், நேற்று இரவு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அதன் முக்கிய நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஜனவரி 22ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து, அதன்படி மிகத் தீவிரமாக ஜாக்டோ ஜியோ போராட்டம் தமிழகமெங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்று (ஜனவரி 26) ஐந்தாவது நாளாகப் போராட்டம் தொடரவுள்ளது. இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்யும் முயற்சியில் காவல் துறை இறங்கியது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 10 பேர் வரை பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களது பெயர், வயது, குடும்ப விவரங்களில் இருந்து
சம்பந்தப்பட்டவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வருவது பற்றி, நேற்று மாலை 7 மணி பதிப்பில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது?டாப் டென் லிஸ்ட் ரெடி! என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். இந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே, போலீசாரின் கைது நடவடிக்கை தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டத்தில் இறங்கியவர்களில் இருந்து முக்கிய நிர்வாகிகளை மட்டும் தேர்ந்தெடுத்துக் கைது செய்தனர் போலீசார்.

திருவண்ணாமலை
பேச்சுவார்த்தைக்கு என்று திருவண்ணாமலை மாவட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் காவல் துறை அலுவலகத்துக்கே அழைத்துச் சென்றார் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி. அதன்பின், திருமண மண்டபத்தில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டவர்களை வீட்டிற்குச் செல்லுமாறு கூறியிருக்கின்றனர் போலீசார். ஆனால், “நீங்கள் அழைத்துச்சென்ற 10 பேர் எங்கே? அவர்கள் வந்தபிறகுதான் போவோம்” என்று பிரச்சினை செய்திருக்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் 7 பேரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று, மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தினர் போலீசார். ஆனால், குறிப்பிட்ட பிரிவுகளில் அவர்களை ரிமாண்ட் செய்ய மாஜிஸ்திரேட் மறுத்துவிட்டார். இதனால் வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய ஆலோசனை நடத்தியது போலீசார் தரப்பு.

கடலூர்
கடலூரில் ஜாக்டோ ஜியோவினர் சுமார் 1,500 பேர் வரை திருமண மண்டபமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த இடத்தில் முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்வது கடினம் என்பதை உணர்ந்த காவல் கண்காணிப்பாளர் சரவணன், துணைக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார், அவர்களை விடுதலை செய்வதாகக் கூறினர். மண்டபத்தில் இருந்து அனைவரும் வெளியேறியபோது, முக்கிய நிர்வாகிகள் ஆறு பேரை மட்டும் பின்தொடர்ந்தனர் போலீசார். அவர்கள் பேருந்து ஏறுவதற்காக நின்றபோது, அவர்களை ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் பயந்துபோன மற்றவர்கள் ஓடிச் சென்றனர்.
சிவகங்கை
மிகவும் தீவிரமாக சிவகங்கை மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு, 10க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளைப் பிடித்தனர் போலீசார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கைது நடவடிக்கை தொடர்ந்தது. கிருஷ்ணகிரியில் நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டுமென்று கூறி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 6 முதல் 15 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, மீதம் இருப்பவர்களை இரவோடு இரவாகப் பிடிக்க காவல் துறைக்கு உத்தரவு அனுப்பப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தது அல்லாமல், சிலரை வீட்டுக்குச் சென்று பிடிக்க வேண்டுமென்று கூறியதைக் கேட்டு போலீசார் அதிருப்தியடைந்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள் தரப்பிலேயே இதை எப்படிக் கையாள்வது என்று யோசித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனாலும் நடு இரவில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளைக் கைது செய்யும் முயற்சிகளில் இறங்கினர் போலீசார். திருவாரூர் மாவட்டத்தில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, இரவோடு இரவாக முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், நாகர்கோவில் ஆகிய ஊர்களில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளைக் கைது செய்ததால், மற்றவர்கள் போலீசாரை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர், திருச்சி போன்ற இடங்களில் கைது செய்யப்பட்டவர்களை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள், நள்ளிரவில் அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.
பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு
தமிழகப் பள்ளிக்கல்வித் துறை தரப்பில் இருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் குடியரசு தின விழாவின்போது ஒவ்வொரு பள்ளிகளிலும் எத்தனை ஆசிரியர்கள் வந்துள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
“குடியரசு தின விழாவில் அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். கலந்துகொள்ளாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு வராத தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ‘No work No pay’ என்ற அடிப்படையில் ஊதியம் பெற்றளிக்கப்படக்கூடாது. 26.01.2019 வரை வருகை புரியாத ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியலை தயார் செய்து, அப்பணியிடங்கள் ‘காலிப் பணியிடங்கள்’ எனக் கருதி தகுதியுள்ள வேலையில்லா நபர்கள் / ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உடனடியாக நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்குத் தொகுப்பூதியமாக மாதம் ரூ.10,000/- வழங்கப்படும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்வதை அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் நடைபெறுவதைக் கண்காணிக்கும்படி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று தமிழகத் தலைமைச்செயலக சங்கத்தினர் கூடி, ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதையடுத்து, வரும் 28ஆம் தேதி முதல் தலைமைச் செயலகப் பணியாளர்கள் போராட்டத்தில் இறங்குவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், முக்கிய நிர்வாகிகள் கைது நடவடிக்கை போன்றவற்றினால் ஜாக்டோ ஜியோ போராட்டம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: