ஞாயிறு, 20 ஜனவரி, 2019

கொடநாடு கொள்ளை : பழனிசாமியை பயன்படுத்திய சசிகலா,, ஸ்டாலின் ,,

 கொடநாடு கொள்ளை : பழனிசாமியை பயன்படுத்திய சசிகலாமின்னம்பலம் : ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் சூழல் வேறுபடுகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில், வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் முக.ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்நிலையில் தமிழகத்தின் சூழலைக் கருத்தில் கொண்டே அக்கருத்தை தான் தெரிவித்ததாக இன்று (ஜனவரி 20) முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் அத்தொகுதியைச் சேர்ந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உறவினர் திருமண விழாவில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அவ்விழாவில் கலந்துகொண்டு இதுகுறித்து முக.ஸ்டாலின் பேசுகையில், “தமிழக சூழலுக்கு ஏற்பத்தான் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தேன். அதில் தவறு இல்லை. திமுக கூட்டத்தில் நாங்கள் சொல்வதற்கு எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதனால் நாங்கள் சொன்னோம். பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்ததை தவறு என கொல்கத்தா கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் யாரும் என்னிடம் கூறவில்லை.
தேர்தல் முடிந்த பிறகு, அதற்குப் பிறகு பேசி பிரதமர் யார் என்பதை முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இதைக்கூட தெரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் சில அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள்” என்றார். மேலும், “பாஜகவுக்கு அடிமையாக இருக்க மாட்டோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சொல்வதிலிருந்தே அவர்கள் அடிமையாகத்தான் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கொடநாடு பங்களாவில் வருமான வரி சோதனைக்குப் பயந்து சில முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இதில் முதல்வர் பழனிசாமியை சசிகலா திட்டமிட்டு பயன்படுத்திக்கொண்டார்” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: