ஞாயிறு, 20 ஜனவரி, 2019

சபரிமலைக்கு ரூ.95.65 கோடி வருவாய் இழப்பு.. பக்தர் வருகை குறைவு

சபரிமலை கோயில் வருவாய் சரிவு!மின்னம்பலம் : மகரவிளக்கு சீசனில் சபரிமலை கோயிலுக்கு ரூ.95.65 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மகரவிளக்கு பூஜை காலம் நேற்றுடன் (ஜனவரி 19) முடிவடைந்தது. கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால் திருவாங்கூர் தேவசம் போர்டின் வருவாயில் கடந்த ஆண்டின் மகரவிளக்கு பூஜை காலத்தை காட்டிலும் இந்தாண்டில் ரூ.95.65 கோடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கோயிலில் தரிசனம் செய்வதற்கு சில பெண்களால் முயற்சிக்கப்பட்டதால் சில இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபரிமலை பதட்டநிலைக்குள்ளானது. சனிக்கிழமையன்று (ஜனவரி 19) கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்துள்ளது. மேலும் இரவு 9.50 மணிக்கு கோயில் மூடப்பட்டது.

மகரவிளக்கு பூஜைக்காலம் நேற்றுடன் முடிவடைந்தாலும் கூட, வழக்கமான சடங்குகள், பூஜைகளுக்கு பின்னர் இன்று காலைதான் மூடப்படும். இன்று சபரிமலை கோயிலில் வழிபாடு நடத்துவதற்கு பண்டளம் அரச குடும்பத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பின்னர் கோயிலின் சாவியை தலைமை பூசாரி பண்டாளம் குடும்பப் பிரதிநிதியிடம் ஒப்படைப்பார். பின்னர் அந்த சாவி திருவாங்கூர் தேவசம் போர்டிடம் ஒப்படைக்கப்படும். சபரிமலை கோயிலின் கடந்த ஆண்டு மகரவிளக்கு சீசன் வருவாய் ரூ.2,63,78,00,000ஆக இருந்தது. இந்தாண்டு மகரவிளக்கு சீசன் வருவாய் ரூ.1,68,12,00,000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: