செவ்வாய், 22 ஜனவரி, 2019

மீண்டும் ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ வருகிறது 15 ஆண்டுகளுக்கு முன் லாலு பிரசாத் யாதவ் அறிமுகப்படுத்தினார்!


tamilthehindu : 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும்
வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு ரயில் நிலையங்களில் மீண்டும் மண் குவளை பயன்பாடு கொண்டுவரப்பட உள்ளது. அதற்கு முன்னோட்டமாக வாரணாசி, ரேபரேலி ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ரயில்நிலையங்களில் மண் குவளைகளை அறிமுகம் செய்தார். காலப்போக்கில் அது வழக்கில் இருந்து மறைந்து பிளாஸ்டிக், பேப்பர் கப் வந்த நிலையில், மீண்டும் மண் குவளை மெல்லக் கொண்டுவரப்படுகிறது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் வாரணாசி, மற்றும் ரேபரேலி ரயில் நிலைய அதிகாரிகளுக்குப் பிறப்பித்த உத்தரவில் பயணிகளுக்கு வழங்கும் உணவுப் பொருட்கள், பால், தேநீர், காபி உள்ளிட்டவற்றை மண் குவளையிலும், பீங்கான் தட்டுகளிலும் வழங்க கோரியுள்ளார். ரயில்வே அமைச்சர் உத்தரவைத் தொடர்ந்து வடக்கு ரயில்வே, மற்றும் வடகிழக்கு ரயில்வே மேலாளர்களும் மண் குவளை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.

ரயில் நிலையங்களில் மண் குவளையில் தேநீர், பால், காபி ஆகியவற்றை அருந்துவது பயணிகளுக்கு புதுமையான அனுபவத்தையும், இதை தயாரிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பையும் வழங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையில் “ சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட குவளைகள், தட்டுகளைப் பயணிகளுக்கு உணவுப்பொருட்கள், தேநீர், பால் ஆகியவற்றை வழங்கப் பயன்படுத்த வேண்டும் என்று மண்டல ரயில் நிலையங்கள், ஐஆர்சிடிசி அமைப்பை கேட்டுக்கொள்கிறோம். ரேபரேலி, வாரணாசி ரயில் நிலையங்கள் உடனடியாக டெரகோட்டா பொருட்களை பயன்படுத்த வேண்டும், இதன் மூலம் மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் என்பது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காதி மற்றும் கிராம தொழிற்சாலை ஆணையத்தின் தலைவர் மூலம் ஏற்பட்டு, இது தொடர்பாக அமைச்சர் பியூஷ் கோயிலுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி, ரேபரேலி, வாரணாசி ரயில்நிலையங்களில் செயல்படுத்த கேட்டுக்கொண்டார். இதன்மூலம் உள்ளூர் மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து காதி மற்றும் கிராம தொழிற்சாலை ஆணையத்தின் தலைவர் வி.கே. சக்சேனா கூறுகையில், “ மண் குவளைகள் தயாரிப்பை ஊக்குவிப்பதற்காக மண்பாண்டம் செய்பவர்களுக்கும் மின்மோட்டார் பொருத்தப்பட்ட சக்கரங்கள் வழங்கியுள்ளோம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 600 கோப்பைகள் வரை செய்ய முடியும். அவர்களுக்கு வருமானமும் அதிகரிக்கும். எங்களுடைய திட்டத்தை ரயில்வே ஏற்றுக்கொண்டதால், இனி லட்சக்கணக்கான மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைக்கும்.
இது அனைவருக்குமான வெற்றி. ஒட்டுமொத்த மண்பாண்ட உற்பத்தியாளர்களும் ரயில்வே துறைக்கு நன்றி செலுத்துவார்கள். ரேபரேலி, வாரணாசி ரயில் நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு 2.5 லட்சம் கோப்பைகள் தேவைப்படுகிறது அதை இவர்கள் வழங்குவார்கள் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
கும்ஹார் சஷாக்திகரண் யோஜனா திட்டத்தின் கீழ் உ.பி. அரசு மின்மோட்டார்கள் பொருத்தப்பட்ட சக்கரங்களை மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் ஆயிரம் மின்சக்கரங்களும், சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் 700க்கும் மேற்பட்ட மின்சக்கரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: