வெள்ளி, 25 ஜனவரி, 2019

உத்தர பிரதேச ஆதித்யநாத் ஆட்சியில் 3,000 என்கவுன்டர்கள்!

ஆதித்யநாத் ஆட்சியில் 3,000 என்கவுன்டர்கள்!மின்னம்பலம் : யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 3,000
என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாக உ.பி மாநில தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவர் பதவியேற்றது முதல் உ.பி காவல்துறையினர் 3,000க்கும் மேற்பட்ட என்கவுன்டர்களை பதிவு செய்துள்ளனர். என்கவுன்டர்களில் குறைந்தபட்சமாக 78 பேராவது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த தகவல்கள் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும், 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பதிவு செய்யப்பட்டதாக உ.பி டிஜிபி அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். என்கவுன்டர்கள், கொல்லப்பட்ட குற்றவாளிகள், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆகியோரின் எண்ணிக்கை அரசின் சாதனைப் பட்டியலாக குடியரசு தினத்தன்று வெளியிடப்படவுள்ளது.

அரசின் சாதனைப் பட்டியலை குடியரசு தினத்தையொட்டி அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி 2018 ஜூலை வரை 3,026 என்கவுன்டர்கள் பதிவாகியுள்ளன, 69 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர், 7,043 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 838 குற்றவாளிகள் காயத்துடன் உயர்தப்பியுள்ளனர். இதே காலத்தில் 11,981 பேர் ஜாமீனை ரத்து செய்துவிட்டு நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளதாக இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை ஆய்வு செய்தால், ஒரு நாளைக்கு சராசரியாக ஆறு என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளதாகவும், 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை: