சனி, 1 செப்டம்பர், 2018

அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவுதினம்! குழுமூரில் குவியும் தலைவர்கள்

அனிதா நூலகம்அனிதாஎம்.திலீபன் - அர்ஜூன் மா விகடன் : மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வை எதிர்த்துப் போராடி சென்ற ஆண்டு (2017) செப்டம்பர் 1-ம் தேதி இதேநாளில் அனிதா தனது உயிரை மாய்த்துக்கொண்டார். நீட் தேர்வினால் உயிரிழந்த அரியலூர் அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி குழூமுரில் இன்று நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தையும் நாடினார். அதிலிலும் தோல்வியைத் தழுவியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிகழ்வு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவி அனிதாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி  அவரது பெயரில் நினைவு நூலகம் 1,800 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 6 வரிசைகள், 2,000 க்கும் மேற்பட்ட நூல்களோடு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள், கல்விக்கான வழிகாட்டும் புத்தகங்கள் அடங்கிய வகையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனிதாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா மற்றும் அனிதா நினைவு அறக்கட்டளை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் அவரது சொந்த ஊரான குழுமூரில் இன்று மாலை மூன்று மணிக்கு நடைபெற உள்ளது.
திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில்முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளருமான ஆ.ராசா முன்னிலை வகிக்கிறார். நூலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் திறந்து வைக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை: