ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

ரஃபேல் விமான ஊழல் : விலை 3 மடங்காக உயர்த்தப்பட்டது ஏன்?

ரஃபேல் விமானங்கள்: விலை 3 மடங்காக உயர்த்தப்பட்டது ஏன்? மின்னம்பலம் : ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகளை அரசு ஏன் தவிர்த்தது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மத்திய அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்து வருகிறது. ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 25) செய்தியாளர்களிடம் பேசும்போது, “ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் ஏன் தவிர்க்கப்பட்டன?” எனக் கேள்வி எழுப்பினார்.
“ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான நடைமுறைகளில் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குழுவும் மற்றும் விலை பேச்சுவார்த்தை குழுவும் ஏன் இருட்டில் மறைக்கப்பட்டன? பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவும் இந்த விவகாரத்தில் நம்பிக்கைக்குரிய ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படவில்லை” என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
“காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ரஃபேல் போர் விமானம் ஒன்றை ரூ.526 கோடிக்கு வாங்கியது. ஆனால், பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அதே ரஃபேல் போர் விமானத்தை தலா ரூ.1,670 கோடிக்கு வாங்கி உள்ளது. இந்த எண்ணிக்கை சரியென்றால் போர் விமானங்களின் விலை ஏன் 3 மடங்கு உயர்த்தப்பட்டது என்பதை யாராவது விளக்க முடியுமா?” என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முன்னதாக லண்டனில் உள்ள லண்டன் பொருளாதாரப் பள்ளியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியபோது, “விமான தயாரிப்பில் எவ்வித அனுபவமும் இல்லாத தனது நண்பர்களுக்குப் பிரதமர் மோடி ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைக் கொடுத்திருக்கிறார்கள்” என்று அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஃபிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஹெச்ஏஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார். ஹெச்ஏஎல் நிறுவனம் 70 ஆண்டுகளாக விமான தயாரிப்பில் இருப்பதாகவும், சுகோய் (Sukhoi) ஹாக் (Hawk) உள்ளிட்ட விமானங்களைத் தயாரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: