வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

நீதிபதிகள், விஐபிகளுக்கு சுங்க சாவடிகளில் தனி வழி ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு: ... பிரபுக்களின் ராஜ்ஜியம்?

க.சக்திவேல் சென்னை /tamil.thehindu.com/tamilnadu : தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் நீதிபதிகள், விஐபிகளுக்கென தனி வழியை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது குறித்து முன்னாள் நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளுக்கு அரசுப் போக்கு வரத்து கழகங்கள் செலுத்த வேண் டிய சுங்க கட்டண நிலுவையை செலுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ‘‘பணியில் உள்ள நீதிபதிகள் மற்றும் முக்கிய விஐபிகளின் வாகனங்கள் செல்ல சுங்கச்சாவடிகளில் தற்போது தனி வழி இல்லை.

இதனால் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வாகனங்கள் வரிசை யில் காக்க வைக்கப்படுகின்றன. எனவே, நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பணியில் உள்ள நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய விஐபிகளின் வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில் தனி வழித்தடங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து பல்வேறு தரப் பினர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு:
விஐபிகளுக்கும், நீதிபதிகளுக் கும் நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகளில் தனிப்பாதை அமைத்து வழிவிட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது தவறான முன்னு தாரணம். ஏற்கெனவே நீதிபதிகளின் வாகனங்களுக்கு சுங்க வசூலி லிருந்து விலக்கு அளிக்கப்பட் டுள்ளது. அது போதாதென்று தனிக்கம்பளம் விரிக்கக் கோருவது எவ்விதத்தில் நியாயமென்று தெரியவில்லை.
சுங்கச்சாவடிகளின் கட்டண வசூலில் மூன்று நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால் சுங்கம் வசூலிக்கக் கூடாது என விதி உள்ளது. நாடு முழுவதும் சாலை களில் தடையின்றி வாகனங்கள் செல்லவேண்டுமென்பதற்காக இவ்விதி ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சுங்கச்சாவடிகள் வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பயணிகள் படும் இன் னல்களை குறைப்பதற்கு நீதிபதி கள் முற்பட்டிருந்தால் பாராட்டலாம்.
ஆனால், வசதிகளைப் பெற விதிவிலக்கு கோரு வது நியாயமற்ற செயலாகும். இன்றைக்கும் விமான நிலையங் களில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்தான் பயணிக்க அனுமதிக் கப்படுகிறார்கள். அங்கெல்லாம் பொறுமை காக்கும் நீதிபதிகள் சுங்கச்சாவடிகளில் மட்டும் பொறுமை இழப்பது ஏன்?
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி:
விஐபிகள் நெடுஞ்சாலை களில் பயணிக்கும்போது போக்கு வரத்து சிறிது நேரம் நிறுத்தப் படுகிறது. அதனால், அவர்கள் இடையூறின்றி பயணிக்கின்றனர். நீதிபதிகள் சுங்கச்சாவடிகளை கடக்கும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. எனினும், அதற் காக தனி வழி அமைக்கத் தேவை யில்லை. இந்த பிரச்சினையை சரி செய்ய அனைத்து நீதிபதி களையும் பாஸ்ட்டேக் (FASTag) வழித் தடத்தில் அனுமதிக்கலாம். இதற்கான வசதியை அரசு ஏற்படுத்தித் தந்தாலே போது மானது.
கன்சியூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாக அறங்காவலர் கே.ராமச் சந்திரன்:
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் போக்குவரத்துக்கு 8 வழிகள் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், நீதிமன்றத்தின் உத்தரவுபடி பிரத்யேகமாக ஒரு புதிய வழியை நிலம் கையகப்படுத்தி உருவாக்க வேண்டியிருக்கும். இல்லை யெனில் ஏற்கெனவே உள்ள வழிகளில் போக்குவரத்துக்காக இரு வழிகளை இவர்களுக்காக ஒதுக்க வேண்டியிருக்கும்.
இதனால், போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக் கும் நிலை ஏற்படும். இதனால், பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். எனவே, நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தின் தலைவர் சிவ இளங்கோ:
ஜனநாயக நாட்டில் மக்கள்தான் மன்னர்கள். அரசும், நீதிமன்றமும் மக்களுக்காகவே செயல்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி விஐபிகள், நீதிபதிகளுக்கு தனி வழியை ஏற்படுத்த வேண்டும் என்ற உத்தரவை நீதி மன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: