திங்கள், 27 ஆகஸ்ட், 2018

வாக்குசீட்டு இயந்திரத்தின் மூலம் உங்களை வெற்றி பெற வைக்கிறோம் என்று புரோக்கர்கள் .....? தேர்தல் ஆணையத்தில் திமுக அதிரடி!

வாக்குப் பதிவு இயந்திரம்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!  மின்னம்பலம்: தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கத் தேர்தல் ஆணையம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 27) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 7 தேசிய கட்சிகளும் 51 மாநில கட்சிகளும் கலந்துகொண்டன.
வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகள் எப்படி எப்போதும் ஒரே கட்சிக்கு சாதகமாக உள்ளது, அந்தக் கட்சிக்கு மட்டுமே வாக்கு செல்கிறது எனக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள், வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பழுது நீக்க வழங்கப்படும் நிறுவனங்களின் பெயர் மற்றும் விலாசத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவரவேண்டும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், “ வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. அதேவேளையில், வாக்குச் சீட்டு முறைக்கு மாறினால், வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் சம்பவங்கள் மீண்டும் ஏற்படக்கூடும் என்றும் சில கட்சிகள் கவலைத் தெரிவித்துள்ளன. அவற்றைக் கவனத்தில் கொள்வோம்” என்று தெரிவித்தார்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக், “வாக்குப் பதிவு இயந்திரங்கள் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிப்பதில்லை. வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்படும்போது குறிப்பிட்ட கட்சிக்கே வாக்கு செல்கிறது. விவிபிஏடி மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாக்காளர் பட்டியல் தயாரிப்பது பற்றி கருத்துக்களை கூறினோம். ஒவ்வொரு வாக்காளரும் தேர்தலில் பங்கேற்பதற்கு ஏற்ப வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும், யாருடைய பெயரும் விடுபடக்கூடாது என்று வலியுறுத்தினோம். பெண்களை அதிகளவில் வேட்பாளர்களாக அறிவிப்பது பற்றி ஆலோசித்தோம். நாடாளுமன்றத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தனியார் தொலைக்காட்சி மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது. தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலேயே கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கி பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்வதுகுறித்து பேசப்பட்டது.
தேர்தலில் பணபட்டுவாடாவை தடுக்க கட்சிகளின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வலியுறுத்தினோம். தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, எந்த முறையில் தேர்தல் நடத்தினாலும் வரவேற்போம். வாக்குச்சீட்டு முறையோ, மின்னணு எந்திரமோ எதுவானாலும் தவறு நேர கூடாது. பாஜகவுடன் திமுக நெருங்குவதால் அதிமுகவுக்கு எந்தக் கவலையுமில்லை; அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இல்லை” என்று குறிப்பிட்டார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாக்காளர் பட்டியல் முறையாக இருக்க வேண்டும், அரசியல் கட்சிகளின் செலவுக்கு உச்ச வரம்பு விதிக்க வேண்டும் என்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட வாரியாக தேர்தல் அதிகாரிகளை நியமிக்காமல் சட்டமன்ற தொகுதி வரியாக அதிகாரிகளை நியமிக்க திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. வாக்கு இயந்திரங்களை (இ.வி.எம்) பயன்படுத்தி உங்களை வெற்றி பெறவைக்கிறோம், எங்களுக்கு இவ்வளவு தொகையை தாருங்கள் என்று புரோக்கர்கள் இறங்கி செயல்படும் அளவுக்கு வாக்கு இயந்திரங்களின் நிலை மாறிவிட்டது என்பது வருத்தமளிக்கிறது. பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கே போவது நல்லது என்ற கருத்தை எடுத்துவைத்தோம்” என தெரிவித்தார்.
முன்னதாக, தேமுதிக சார்பில் பங்கேற்ற டெல்லி மாநிலச் செயலாளர் ஜி.எஸ். மணி, தேர்தலின் போது அதிமுக பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார். அரவக்குறிச்சி தேர்தலையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
அதிமுக சார்பில் பங்கேற்ற மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், குறிப்பிட்ட கட்சிகள் குறித்த விமர்சனங்கள் இந்தக் கூட்டத்துக்கு தேவையற்றது என தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை: