வியாழன், 30 ஆகஸ்ட், 2018

கலைஞருக்கு நினைவேந்தல்: தேசியத் தலைவர்கள் பங்கேற்பு!


கலைஞருக்கு  நினைவேந்தல்: தேசியத் தலைவர்கள் பங்கேற்பு!
மின்னம்பலம் :‘தெற்கிலிருந்து உதித்தெழுந்த சூரியன்’ என்னும் தலைப்பில் இன்று மாலை சென்னையில் நடைபெறவுள்ள கலைஞரின் புகழ் வணக்க கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர்கள், 4 மாநில முதல்வர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
திமுக தலைவர் கலைஞர் கடந்த 7ஆம் தேதி காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கலைஞர் சார்ந்திருந்த துறைகளின் பிரபலங்கள் கலந்துகொண்டு அவரின் பெருமைகள் குறித்து உரையாற்றும் ‘கலைஞரின் புகழுக்கு வணக்கம்’ நிகழ்ச்சி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்றுவருகிறது. நிறைவாக, ‘தெற்கிலிருந்து உதித்தெழுந்த சூரியன்’ என்னும் தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் கலந்துகொண்டு பேசும் நினைவஞ்சலி கூட்டம் இன்று மாலை (ஆகஸ்ட் 30) 4 மணிக்கு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுவை முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

கூட்டத்திற்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 60 அடி நீளம் 40 அடி அகலத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட அரங்கில் 15,000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மைதானத்தில் பெரிய எல்.இ.டி திரைகள் வைக்கப்பட்டு 15,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. நினைவேந்தல் நிகழ்வுக்கான மேடை அமைக்கும் பணிகளை நேற்று மாலை திமுக தலைவர் ஸ்டாலின், பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
நிகழ்வில் பங்கேற்பதற்காக தலைவர்கள் இன்று சென்னை வரவுள்ள நிலையில், அவர்களை விமான நிலையத்திலிருந்து வரவேற்று அழைத்துச் சென்று, ஹோட்டலில் தங்க வைத்து, நினைவேந்தல் மேடைக்கு அழைத்து வரும் வரையிலான பணிகளுக்கு தனித் தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுவில் திமுக நிர்வாகிகளும் வழக்கறிஞர்களும் இடம்பெற்றுள்ளனர். இது ஒரு கட்சி விழாவாக அல்லாமல் அரசு விழாவைப் போல நடைபெற வேண்டும் என்பதற்காக, அதுபோலவே திட்டமிடப்பட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மாலைமலர் :திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தெற்கில் உதிக்கும் சூரியன் - அகில இந்திய தலைவர்கள் பங்கேற்ற கருணாநிதி புகழஞ்சலி கூட்டம் தொடங்கியது
கலைஞரின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நினைவேந்தல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தெற்கில் உதிக்கும் சூரியன் - அகில இந்திய தலைவர்கள் பங்கேற்ற கருணாநிதி புகழஞ்சலி கூட்டம் தொடங்கியதுதிருச்சி, மதுரை, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் புகழஞ்சலி கூட்டங்கள் நடந்தன. இதையடுத்து, தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் புகழஞ்சலி கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். இந்த புகழஞ்சலி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, தேசிய செயலாளர் முரளிதரராவ், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத் எம்.பி., தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்பட பலர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக சிறப்புரையாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


கருத்துகள் இல்லை: