ஞாயிறு, 6 மே, 2018

விளக்குடியில் வெடிக்கும் போராட்டம் ... இறந்த கிருஷ்ணசாமியின் (செஸ் மாஸ்டர் ரமேஷ்) சொந்த ஊர் ..

போராட்டக் குடியாகும் விளக்குடி!மின்னம்பலம்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது விளக்குடி. ‘அய்யோ நம்ம செஸ்மாஸ்டர் ரமேஷ் இறந்துட்டாரா?’ என்று விளக்குடியே இன்று விக்கித்து நிற்கிறது.
ஆம்... திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரத்தில் அவர் பெயர் ரமேஷ்தான். சான்றிதழில்தான் அவரது பெயர் கிருஷ்ணசாமி. இதனாலேயே பல பேருக்கு டிவி பார்த்ததும் கிருஷ்ணசாமியா யார் என்ற கேள்வி எழுந்தது. மெல்ல மெல்ல அவரைப் பற்றிய விவரங்கள் வெளியான பிறகுதான் ஐயோ நம்ம ரமேஷா என்று அதிர்ச்சி அடைந்து திருத்துதுறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் இருந்து விளக்குடியில் உள்ள அவரது வீட்டை நோக்கிச் சென்றிருக்கிறார்கள் பலரும்.
ரமேஷ் என்கிற கிருஷ்ணசாமியின் மனைவி பாரத மகாதேவி, தலைமை ஆசிரியையாக இருக்கிறார். இவர் மாற்றுத் திறனாளி. தொலைக்காட்சியில் தனது கணவர் சடலமாக இருப்பதையும் தன் மகன் அழுதுகொண்டிருப்பதையும் பார்த்து கதறிக் கொண்டிருக்கிறார்.


அவர்களது வீட்டருகே இன்று மதியம் கூடிய கூட்டம் சிறிது நேரத்தில் போராட்டமாக மாறியது. இந்தப் பகுதியில் கம்யூனிஸ்டு கட்சியினர் வலுவாக உள்ளார்கள். அவர்கள் முதல்கட்டமாக பிரதமர் மோடியின் உருவபொம்மையைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் திருவாரூர் மன்னார்குடி சாலையில் மறியல் செய்து, ‘நீட் தேர்வு காரணமான மன உளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போன கிருஷ்ணசாமியின் மரணத்துக்கு நீதி வேண்டும்’ என்று முழக்கங்கள் எழுப்பினர்.

நேரம் ஆக ஆக விளக்குடியில் கூட்டம் கூடிக் கொண்டே இருக்கிறது. எர்ணா குளத்தில் இருந்து உடலை சுமந்துகொண்டு ஆம்புலன்ஸ் இன்று பிற்பகல் புறப்பட்டுவிட்டது. அவரது உடல் திருத்துறைப்பூண்டி வந்து சேர இன்று நள்ளிரவுக்கு மேல் ஆகிவிடும் என்பதால் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் விளக்குடியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

இறந்த ரமேஷின் (கிருஷ்ணசாமி) நண்பரான ஆனந்த் திருத்துறைப்பூண்டியில் புத்தகக் கடை வைத்திருக்கிறார். “மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்....’’ என்று நம்மிடம் தன் நண்பர் ரமேஷ் பற்றி பேசத் தொடங்கினார்.
“முந்தாநாள் வரைக்கும் திருத்துறைப்பூண்டியில இருந்திருக்கார் ரமேஷ். அவர் மகன் கஸ்தூரி மகாலிங்கம் திருச்சி திருவரம்பூரில் உள்ள செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிச்சிருக்கான். ரொம்ப நல்ல பையன். காரணம் ரமேஷ், பாரதமகாதேவியோட வளர்ப்பு. ரமேஷ் முன்னாடி திருத்துறைப்பூண்டி லைப்ரரியில வேலை செஞ்சாரு. அப்புறம் முத்துப்பேட்டை லைப்ரரியனா வேலை பாத்துக்கிட்டிருந்தார்.

’பையனுக்கு நீட் பரிட்சை கேரளாவுல எழுதணுமாம், ஒரு பரிட்சை எழுதறதுக்கு எவ்வளவு தூரம் போவான் பாவம் சின்னப் பையன்’ என்று திருத்துறைப்பூண்டியில தன் நண்பர்கள் கிட்ட சொல்லி வேதனைப் பட்டுக்கிட்டிருந்தார். திருச்சியிலேர்ந்து முந்தநாள் எர்ணாகுளம் ரயில்ல அவரும், பையனும் ஏறிப் போயிருக்காங்க. ஆனா, இப்படி உடம்பா திரும்பி வருவார்னு நினைக்கவே இல்லங்க’’ என்று கண்கலங்கிய ஆனந்த் தன்னைத் தேற்றிக் கொண்டு தொடர்ந்து நம்மிடம் பேசினார்.
“ரமேஷ் பல திறமை கொண்டவருங்க. பத்து பதினைந்து வருடங்கள் முன்பு திருத்துறைப்பூண்டி,. முத்துப்பேட்டை வட்டாரத்துல கபடி போட்டிகள் நடத்தி கிராமப்புற மாணவர்கள்கிட்ட விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தினவர் அவர். அவரால்தான் நான் பல கபடிப் போட்டிகள்ல கலந்துகிட்டு பல மெடல்கள் வாங்கியிருக்கேன். செஸ் ஆட்டத்துலயும் அவர் மிகச் சிறந்த பயிற்சி பெற்றவர். தன் மகன் கஸ்தூரி உள்பட இந்த பகுதியில பல மாணவர்களுக்கும் செஸ் பயிற்சி கொடுத்திருக்கிறார். செஸ் என்பது மனசையும், மூளையையும் ஒருங்கிணைச்சு விளையாடும் ஆட்டம். அதில் அவர் கோச் என்பதால் மன உறுதிமிக்கவர்.ஆனா அவரையே உடைச்சுடிச்சி நீட். இப்படித் திரும்பிவருவார்னு நினைக்கவே இல்லையே’’ என்று கலங்கினார் ஆனந்த்.
பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க பிரமுகர்கள், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என்று விளக்குடியை நோக்கி மக்கள் திரள்கின்றனர்.
இதனால் போராட்டக் குடியாக மாறுகிறது விளக்குடி.
-ஆரா

கருத்துகள் இல்லை: