செவ்வாய், 13 டிசம்பர், 2016

மக்களுக்கு மொட்டை - போட்டா போட்டி! .


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும்வகையில் ஜெயலலிதா சமாதி முன்பு மொட்டை அடித்து வருகிறார்கள் அதிமுக தீவிர விசுவாசிகள். அதிமுக பிரமுகர்களும் தமிழகம் முழுவதும் பலவிதமாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும், தற்போது பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ-வான பழனியப்பன் டிசம்பர் 11ஆம் தேதியன்று ஆயிரம் பேரை திரட்டினார். அவர்களை ஊர்வலமாக ஒகேனக்கல் அழைத்துச் சென்றார். அங்கு ஆயிரம் பேரையும் மொட்டை அடிக்க வைத்தார். பிறகு அனைவரும், உடுத்திய ஆடையைக் கழற்றி ஆற்றில் விட்டுவிட்டு புதிய ஆடையை உடுத்திக்கொண்டு வந்தார்கள். பழனியப்பன் கூட்டிய கூட்டத்துக்கு இன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தன்னுடைய ஆதரவாளர்களை போகக்கூடாது என்று தடுத்துவிட்டார்.  விரல்களில்உள்ள பெரிய மோதிரங்களை பார்த்தாலே தெரிகிறது அடேயப்பா  எப்பேர்ப்பட்ட தொண்டரகள்?

கிருஷ்ணகிரி அதிமுக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தர்மபுரிக்கு ஒகேனக்கல் என்றால் கிருஷ்ணகிரிக்கு தென்பெண்ணையாறு என்று, பொதுமக்களையும் கட்சியினரையும் தர்மபுரி மாவட்டத்துக்கு சமமாக ஆட்களை அழைத்துச்சென்று தென்பெண்ணையாற்றில் மொட்டை அடிக்கவைத்து, அஞ்சலி செலுத்தி அழைத்துவந்துள்ளார். மறைந்த முதல்வருக்கு இரங்கல் தெரிவிக்கும்வகையில், நாடெங்கும் மொட்டை அடிப்பது தொடரும் என்கிறார்கள். minnambalam.com

கருத்துகள் இல்லை: