கான்கிரீட் கட்டிடங்கள் நிறைந்த ஒவ்வொரு நகரமும் ஒரு வெப்ப தீவுதான். குறைந்த எண்ணிக்கையில் மரங்களுள்ள இந்திய நகரங்களுள் சென்னையும் ஒன்று. ஒரு நகரத்துக்குக் குறைந்தது 20% பசுமைப்பரப்பு தேவை.
சென்னையில் மூன்று வகைப் பசுமைப்பரப்பு இருக்கிறது. 1. வீடு போன்ற தனியார் இடத்தில் உள்ள மரங்கள். 2. பூங்கா, சாலையோர மரங்கள். 3. கிண்டி, வண்டலூர் போன்ற காடுகள். இந்த மூன்று வகையையும் சேர்த்தாலும் சென்னையின் பசுமைப்பரப்பு போதாது என்பதே உண்மை. இந்நிலையில் புயல் இப்பசுமைப் பரப்பை மேலும் குறைத்திருக்கிறது. இதன் எதிர்காலம் இனி எப்படி அமையும்?
வெப்பம்:
மரங்களற்ற இடத்தின் காற்று எளிதில் வெப்பமடையும். இதனால் காற்றின் ஈரப்பதம் குறையும். ஒவ்வொரு 11பாகை செல்சியஸ் வெப்பநிலை உயர்வுக்கும் காற்றின் ஈரப்பதம் பாதியாகக் குறையும். அதாவது காற்றில் 100% ஈரப்பதம் இருந்தால் வெப்பக் காற்று அதை 50% அளவுக்குக் குறைத்துவிடும். இவ்விதம் ஈரப்பதம் குறைந்த வெப்பக் காற்று நிலத்தைவிட்டு சற்றே உயரே எழும்பி பிற இடங்களின் மேல் வீசத் தொடங்கும்போது அதன் பாதையில் உள்ள மண் மரம் ஆகியவற்றிலுள்ள ஈரத்தையும் உறிஞ்சிவிடும். ஏன் மனிதரின் உடல் ஈரத்தையும் கூட இவ்வெப்பக் காற்று உறிஞ்சிவிடும். பாலைப் பகுதிகளில் கூடத் தாவரங்கள் சிறிதளவு வளர்ந்து விட்டால் வெப்பத்தின் கடுமை அங்கு 5பாகை செல்சியஸ் குறைகிறது. எனவே சென்னைக்குத் தேவை மீண்டும் மரங்கள். மரங்களை இழந்ததால் சென்னையின் வெப்பம் 2பாகை செல்சியஸ் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதிலும் சாலையோர மரங்கள் இழப்பால் அங்கு 3.1பாகை செல்சியஸ் வெப்பம் மிகும்.
தண்ணீர்:
மரங்கள் என்பவை தண்ணீர் சேமிப்புத் தொட்டிகள். பெய்யும் மழையை நிலத்தடி நீராக மாற்றக்கூடியவை. மரங்கள் இல்லாத இடத்தை விட மரங்கள் இருக்கும் இடத்தில் 25% நீர் உட்புகும். காட்டில் 10% மரங்களை வெட்டினால் கூட அங்கு 40% நீர் உட்புகாமல் வழிந்தோடிவிடுகிறது எனும்போது ஏற்கனவே நிலத்தடி நீர் குறைந்து தற்போது மரங்களும் அழிந்த சென்னையின் நிலைமை இனிதான் தெரியவரும்
தூசி:
சிற்றூரில் கூட ஆண்டொன்றுக்கு ஒரு ச.கி.மீட்டருக்கு 19 டன்கள் தூசி படிகிறது. நகரங்களில் 35 டன்கள் தூசி. அதுவும் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமென்றால் இன்னும் அதிகம். கல்கத்தாவில் 6000 தொழிற்சாலைகள் வெளியிடும் தூசி 600 டன்கள் அங்குள்ள வாகனங்கள் வெளியிடும் தூசி 358 டன்கள். ஒரு செய்தி சொல்லட்டுமா? இது 1981ஆம் ஆண்டின் பழங்கணக்கு. அப்படியானால் இன்றைய கணக்கு? ஆனால் சாலையோர மரங்கள் வாகனம் வெளியிடும் தூசியில் 70% அளவை குறைத்திடும். இது புரிந்தால் மரங்களின் இழப்பையும் நாம் புரிந்து கொள்ள முடியும்
ஒளி/ஒலி:
கதிரொளியை கான்கிரீட் கட்டிடங்களும் தார்ச்சாலைகளும் முறையே 60%, 45% அளவுக்குப் பிரதிபலிப்பதால் கண்களுக்கு ஊறு நேருகின்றன. ஆனால் ஆலமரங்கள் போன்றவை வெறும் 9% அளவே ஒளியை பிரதிபலிக்கின்றன. அதுபோல நகரம் என்றாலே ஒலி மாசு. பொதுவாக ஒலி பகலில் 90 டெசிபலாகவும், இரவில் 80 டெசிபலாகவும் இருக்கின்றன. 45 டெசிபல் அளவு 3 நிமிடங்களுக்கு நீடித்தாலே 50% பேருக்குத் தூக்கம் கலைந்திடும். சாலையில் 50 அடி அகலத்துக்கு மேல் மரங்கள் இருந்தால் அவை ஒலியை 20-30 டெசிபல் அளவுக்குக் குறைத்திடும். இனி என்ன செய்யப் போகிறது சென்னை?
உடல்நலம்:
மரங்கள் என்பது உயிர்வளி (ஆக்சிஜன்) தொழிற்சாலை என்பதை நாம் அறிவோம். மரங்கள் கூடினால் வீசும் காற்றில் உயிர்வளி கூடும். நம் மூச்சுக்காற்றிலும் உயிர்வளி கூடும். குருதியிலும் உயிர்வளி கூடும். இதனால் நம் உடல் திசுக்களின் கழிவுகள் வெளியேற்றப்பட்டு, நோய் எதிர்ப்புத் திறனும் கூடும். நகரில் மரங்கள் வெளியிடும் வேதிப்பொருட்கள் காற்றிலுள்ள நச்சுயிரிகளை (கிருமிகளை) கொல்லக்கூடியவை. பூங்கா உள்ள இடத்தைவிடப் பூங்கா இல்லாத இடத்தின் மேலுள்ள காற்றில் 200 மடங்கு நச்சுயிரிகள் மிகுந்திருப்பதாக ருஷ்ய அறிவியலாளர்கள் ஆய்வு தெரிவிக்கிறது.
ஒரு எக்டேரில் உள்ள மரங்கள் ஆண்டுக்கு 1.8 கோடி க.மீ காற்றைத் தூய்மைப்படுத்துகிறது. அதே நேரத்தில் ஒரு மணி நேரத்துக்கு 200 மனிதர்கள் வெளியிடும் 8 கிலோ காற்றைத் தாம் இழுத்துக்கொண்டு காற்று நஞ்சாகாமல் நம்மைப் பாதுகாக்கிறது.
ஆனால் சென்னையில் ஓடும் ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு ஆயிரம் கிலோ மீட்டருக்கும் ஒரு மனிதரின் ஓராண்டுக்கு தேவையான உயிர்வளியை ஏற்கனவே அழித்துக் கொண்டிருக்கையில் மரங்களையும் இழந்த சென்னை இனி என்ன செய்யப் போகிறது? எனவேதான் சென்னைக்கு உடனடியாகத் தேவைப்படுவது அதன் நுரையீரலே.
நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
முகப்புப் படம்: மகேஸ்வரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக