செவ்வாய், 13 டிசம்பர், 2016

குடியரசு தலைவர் பதவிக்கு அத்வானி.. மோடி குருப் வேறு திட்டம் .. குத்து வெட்டு ஆரம்பம்

dinamani.com மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தம்மை அறிவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தாததால் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2014-இல் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தொடக்கத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அத்வானியை நரேந்திர மோடி சந்தித்து ஆசி பெற்ற பிறகு அவரது தேர்தல் வெற்றிக்கு அத்வானி வாழ்த்து கூறினார்.

இதேபோல, பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரும் குஜராத் முன்னாள் அமைச்சருமான அமித் ஷாவை பாஜக தேசியத் தலைவராக அறிவித்த நடவடிக்கையிலும் அத்வானி தொடக்கத்தில் உடன்படவில்லை. இருப்பினும் அவரை நரேந்திர மோடியும் பாஜக மூத்த தலைவர்களும் சமாதானப்படுத்தினர்.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலத்துக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் வேட்பாளராக அத்வானியை பாஜக கூட்டணி முன்னிறுத்தும் என்று அவரிடம் பாஜக தலைவர்கள் கூறினர். இதையடுத்து, கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருந்த அத்வானி, மிக முக்கியமான கட்சிக் கூட்டங்கள், நாடாளுமன்ற கூட்டத்தொடர் போன்ற நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2017) ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்தும் பணிகளை மத்திய அரசு இப்போதே தொடங்க வேண்டும் என்று பிரதமரிடம் வற்புறுத்துமாறு சில மூத்த அமைச்சர்களிடம் அத்வானி கடந்த வாரம் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து பாஜக மேலிட வட்டாரங்கள் கூறியதாவது:
பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், தனது ஆதரவாளர்களுமான அனந்த் குமார், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட சிலரை கடந்த வாரம் அத்வானி தனது இல்லத்துக்கு அழைத்துப் பேசினார். அப்போது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் மூலம் பிரதமரிடம் குடியரசுத் தலைவர் வேட்பாளர் விவகாரம் குறித்து பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு வாரம் கடந்த பிறகும் மோடியிடம் குடியரசுத் தலைவர் வேட்பாளர் விவகாரம் பற்றி அனந்த் குமார் ஏதும் பேசவில்லை என்ற தகவல் அத்வானிக்கு கிடைத்தது. இதையடுத்து, மத்திய அரசின் பணக் கட்டுப்பாடு விவகாரத்தில் அரசியல் கட்சிகளை சமாளிக்கும் நடவடிக்கையில் "நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்' என்ற முறையில் தனது கடமையை அனந்த் குமாரும் மற்ற மத்திய அமைச்சர்களும் சரியாகச் செய்யவில்லை என்று பாஜக தலைவர்களிடம் அத்வானி வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு அத்வானி மட்டுமின்றி மூத்த மத்திய அமைச்சரான வெங்கய்ய நாயுடுவின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பணக் கட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அமைச்சர்களின் செயல்திறனை விமர்சித்து அத்வானி கருத்து வெளியிட்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: