கீற்று: 15.12.2016 அன்று உச்ச நீதிமன்ற சிறப்பு
அமர்வின் முன் விசாரணைக்கு வந்த காவிரி வழக்கை, உருப்படியான ஒரு முடிவும்
சொல்லாமல் சனவரி 4ஆம் நாளுக்கு ஒத்தி வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்கள்
மீது உச்ச நீதிமன்றம் காட்டும் அலட்சியம் என்றே கருத வேண்டியுள்ளது.
மூன்று
நீதிபதிகளில் ஒருவர் வேறொரு வழக்கின் விசாரணைக்கு முக்கியத்துவம்
கொடுத்து, காவிரி அமர்வுக்கு வர மறுத்தது காவிரிப் பிரச்சினை மட்டுமல்ல,
தமிழ்நாட்டையும் சிறுமைப்படுத்தும் நிகழ்வாகும்.<
கடந்த
09.12.2016 அன்று, இதே சிறப்பு அமர்வு காவிரித் தீர்ப்பாய வழக்கை
விசாரிக்கவும் அதில் ஆணைகள் இடவும் உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரமுண்டு என
தீர்ப்பளித்து, வழக்கை 15.12.2016க்கு ஒத்தி வைத்தது.
காவிரி
மேலாண்மை வாரியம் அமைத்திடுமாறு கட்டளையிட உச்ச நீதிமன்றத்திற்கு
அதிகாரமில்லை என்ற இந்திய அரசின் வாதத்தை 09.12.2016 அன்று இந்த சிறப்பு
அமர்வு நிராகரித்தது. எனவே, இன்றைய விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியம் –
காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்திடுமாறு காலவரம்பிட்டு புதிய
கட்டளை இந்திய அரசுக்கு விதிக்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த
நிலையில், மொட்டையாக விசாரணை நாளைத் தள்ளி வைத்தது பெரும் ஏமாற்றத்தை
அளிக்கிறது.
இந்திய அரசைப் போலவே, உச்ச நீதிமன்றமும் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கிறதா என்ற வினா எழுகிறது.
2013
பிப்ரவரி 19இல் காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புப்படி அதை
செயல்படுத்தும் பொறியமைவு அமைக்காமல், அத்தீர்ப்பை வெறுமனே அரசிதழில்
வெளியிட்டு இந்திய அரசு ஏமாற்றிய பின்னணியில், தமிழ்நாடு அரசு மேலாண்மை
வாரியம் அமைக்க வலியுறுத்தி அப்போது தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம்
இன்றுவரை ஒத்தி வைத்து ஒத்தி வைத்து ஏமாற்றிவிட்டது.
இரண்டாயிரம்
கன அடி தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து திறந்துவிட
வேண்டுமென்று, இன்று (15.12.2016) உச்ச நீதிமன்றம் மீண்டும்
அறிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இதே அமர்வு, 09.12.2016 அன்றே
2,000 கன அடி தண்ணீர் கர்நாடகம் திறந்துவிட வேண்டுமென்று ஆணையிட்டது.
அதை
இன்றுவரை கர்நாடகம் செயல்படுத்தவில்லை என்பது உச்ச நீதிமன்றத்திற்கும்
நன்கு தெரியும். அது மட்டுமின்றி அதைச் செயல்படுத்த முடியாதென்று இதே
அமர்வில் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதையெல்லாம் கண்டு
கொள்ளாமல், தொடர்ந்து 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று உச்ச
நீதிமன்ற சிறப்பு அமர்வு கூறுவது, வெறும் பாசாங்கு என்றுதான் தமிழ்நாட்டு
மக்கள் கருதுகிறோம்.
தமிழ்நாட்டிற்குரிய
சட்டப்படியான உரிமைகளை வழங்காமல் வஞ்சிக்கும் இந்திய அரசும், சட்டத்தைச்
செயல்படுத்தாமல் பின்வாங்கும் உச்ச நீதிமன்றமும் தமிழ்நாட்டில் 25 இலட்சம்
ஏக்கர் சாகுபடியையும் 20 மாவட்டங்களின் குடிநீரையும் பாதிக்கச்
செய்துவிட்டன.
இந்த கால நிலையில்,
தமிழ்நாட்டு மக்களினால்வந்த காவிரி உரிமையைக் காப்பாற்ற போர்க்கால
அடிப்படையில் தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இந்திய
அரசுக்கு அரசியல் அழுத்தத்தைத் தர வேண்டும்.
அதேவேளை,
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டு வாதத்தை வலுவாகவும் திறமையாகவும்
எடுத்துரைக்கும் வகையில் வழக்கறிஞர் குழுவுக்கு உரிய வல்லுநர்களைக் கொண்டு
தரவுகளும் தர்க்கங்களும் தர வேண்டும். இதற்கு பணி ஓய்வு பெற்ற மற்றும்
பணியில் இல்லாத பாசனப் பொறியியல் வல்லுநர்களையும் சட்ட அறிஞர்களையும்
தமிழ்நாடு அரசு பயன்படுத்த வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு
சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
- பெ. மணியரசன், ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக