புதன், 14 டிசம்பர், 2016

பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி... தமிழை கணினி அரியாசனத்தில் அமர்த்தியதில் அரும்பணி ஆற்றியவர்

ஆழி செந்தில்நாதன்& தமிழறிஞர், கல்வியாளர், நீரியல் வல்லுநர் எனப் பல்துறைச் செயல்பாடுகளைக் கொண்டிருந்த பேரா.வா.செ.குழந்தைசாமி, வாழ்வாங்கு வாழ்ந்து நம்மிடமிருந்து விடைபெற் றிருக்கிறார். நெடும்பார்வை மிக்கதொரு ஆளுமை அவர். வள்ளுவ நெறிமுறைகளால் ஈர்க்கப்பட்ட அவரைப் போன்றவர்களைத் தொடர்ந்து இழந்துகொண்டிருக்கிறோம். வா.செ.கு (VCK என்றும் தமிழரால் அழைக் கப்படுபவர்) மதுரை காமராசர், அண்ணா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக இருந்தவர் என்பதும் இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்த ராக இருந்தவர் என்பதும் அவரது கல்வி ஆளுமையின் அடையாளங்கள். அவர் சாகித்ய அகாடமி, பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற விருதுகளை வென்றது அவரது சாதனைகளுக்கான சான்றிதழ்கள்.
புறக்கணிக்க முடியாத தாக்கம்
நீரியல் துறையில் ‘குழந்தைசாமி மாடல்’ என்று அத்துறை நிபுணர்களால் அழைக்கப் படும் ஒரு தொழில்நுட்பப் பங்களிப்பு வா.செ.கு.வின் மாபெரும் சாதனைகளில் ஒன்று. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக அவர் இருந்தபோது, உலகளாவிய முன்மாதிரி களைக் கொண்டு நமது பல்கலைக் கழகங்களின் தரத்தையும் நிர்வாகத்தையும் உயர்த்துவதில் முனைந்திருக்கிறார். இதையெல்லாம் செய்வதற்கு ஆட்சியாளர் களிடம் அகலாது அணுகாது தீக்காய வேண்டும். வா.செ.கு. அதைச் சிறப்பாகச் செய்தார் என்று தெரிகிறது.
ஆனால், அவரது மிக முக்கியச் செயல் பாடுகளும் தாக்கமும் இந்தப் பதவிகளுக்கும் விருதுகளுக்கும் வெளியேதான் இருக்கிறது. குறிப்பாக, தமிழ் வளர்ச்சி என்கிற ஒரு பெரும்பரப்பில் அவரது தாக்கம் புறக்கணிக்க முடியாத ஒன்று.
உலகளாவிய நிகழ்பாடு
அப்போதெல்லாம் பெரும்பாலான தமிழறி ஞர்களின் மொழிவளர்ச்சிப் பார்வைகள் பழமையில் தோய்ந்திருக்க, வா.செ.கு. நவீன உலகத்துக்கான தமிழை அறிமுகப்படுத்தி யவர்களில் முக்கியமானவர். அது 80-களிலும் 90-களிலும் விரிவான வீச்சை ஏற்படுத்திய பார்வை. ஆனால், அறிவியல் உலகுக்கேற்ப தமிழைப் புதுப்பித்தல் என்கிற பார்வை தீவிரமான விமர்சனங்களை ஈர்த்த ஒன்று. வா.செ.குவின் நவீன பாதை கல்லும் முள்ளும் நிறைந்தது. கலைச் சொல்லாக்கம், மொழி வளர்ச்சிக்கான திட்டமிடல் போன்றவை குறித்த அவரது கருத்துகளுக்குப் பெரிதும் வரவேற்பு இருக்க, எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பான அவரது முன்வைப்புகள் தீவிரமான ஆதரவாளர்களையும் எதிர்ப்பாளர்களையும் கொண்டிருந்தன.
வரி வடிவங்களில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவைதான், எழுத்துச் சீர்திருத்தம் என்பது உலகளாவிய நிகழ்பாடு, கருவிகளுக்கேற்ப எழுத்துகள் வடிவமாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்றெல்லாம் அவர் கூறியதற்குப் பின்னால் இருந்த சிந்தனை நல்ல நோக்கம் கொண்டதுதான். பல்வேறு மொழிகள் வழக்கொழிந்துவிடக்கூடிய ஒரு யுகத்தில், சீர்திருத்தங்களினூடாக நமது மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்கிற குரலோடு நாம் அனுதாபம் கொள்ளவேண்டியிருக்கிறது. அதுவும், 20-ம் நூற்றாண்டில் பல நாடுகளில் மொழிச் சீர்திருத்தம் என்பது ஜனநாயக அரசியலிலும் நவீனத்துவப் பார்வையிலும் ஒரு முக்கிய இடத்தை வகித்த ஒன்று. வா.செ.கு அந்தக் கண்ணோட்டத்தில் தோய்ந்தவர்.
அடிப்படைகள் தகர்க்கப்படக் கூடாது
ஆனால், சீர்திருத்தம் என்கிற பெயரில் சீரழிவு வந்துவிடக் கூடாது என்றும் சில குறைந்த பலன்களுக்காக அடிப்படைகள் தகர்க்கப்படக் கூடாது என்றும் அவருக்கு எதிரான விமர்சனங் கள் தமிழ்ப் பரப்பில் எழுந்தன. எழுத்துச் சீர்திருத்தம் என்கிற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு பெரிய தொழில்துறையே தோன்றி, எழுத்து களை வெட்டியும் ஒட்டியும் விளையாடிக் கொண்டிருந்த காலம் அது. தொடக்கத்தில் வா.செ.குவின் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்ட என்னைப் போன்ற பலரும்கூட பிற்காலத்தில் அது அவ்வளவு முக்கியமல்ல என்றே நினைத்தோம். காரணம்? மொழி அரசியல்.
அவர் எப்படி இதை எதிர்கொண்டார்? வா.செ.கு. எதிர்க் கருத்துகளை மதிக்கக் கூடியவராக இருந்தார் என்பதுதான் உண்மை. அவரது சீர்திருத்தக் கனவுகள் நனவாகக் கூடிய ஒரு வாய்ப்பு 2010 செம்மொழி மாநாட் டின்போது வந்தது. அரசின் ஆதரவும் அதற்கு இருந்தது. ஆனால், எதிர்ப்பாளர்கள் அவரோடு விவாதித்து அதைத் தடுத்து நிறுத்தினார்கள். வா.செ.கு என்கிற தமிழ்ச் சால்புள்ள அறிஞர் பிடிவாதம் பிடிக்காமல், மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்து, தன் நீண்ட காலக் கனவு தன் கண் முன்பாகச் சிதைவுறுவதை அனுமதித்தார். பல பெரியவர்களுக்கு இப்படிப்பட்ட அணுகு முறைகள் வாய்ப்பதில்லை.
பாரதிதாசன் பரம்பரை
கணித் தமிழ் யுகம் பிறந்தபோது, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (இப்போது தமிழ் இணையக் கல்விக்கழகம்) அவரது தலைமையை ஏற்றது. இன்று அது இந்தியா வின் முக்கியமான மொழி மையங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. தமிழ் விக்கி பீடியாவுக்குப் பெருமளவில் அறிவுச் செல்வங் கள் கிடைக்க வழிவகுத்தார் அவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பொறி யியல் பாடங்கள் எழுதப்பட ஊக்குவித்தார். வா.செ.கு ஒரு ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ மனிதர். ஆனால், அவரது தமிழ்ப் பங்களிப்புகள் பொதுப் போக்குகளைக் குறுக்கீடு செய்த ஒன்று.
அவரது பிற பங்களிப்புகளிலிருந்து தன்மையளவில் முற்றிலும் வித்தியாசமானவை ‘குலோத்துங்கன்’ என்கிற பெயரில் அவர் எழுதிய கவிதைகள். மொழியில் நவீனம் தேடியவர், படைப்புலகில் மரபின் பக்கம் நின்றார். இவ்வகையில், உள்ளபடியே இவர் பாரதிதாசன் பரம்பரைதான்!
வா.செ.கு. எனது முதலீடு
ஆனால், அவரது சமூகப் பார்வையின், சமூக வளர்ச்சி குறித்த அக்கறையின் வெளிப்பாடுகளாக அவரது படைப்புகள் இருந்தன. ‘விண்சமைப்போர் வருக’ என்கிற புகழ்பெற்ற அவரது அறைகூவல் தற்போது வழக்கொழிந்துபோன லட்சியவாத உலகத்தைச் சார்ந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால், தமிழ்ச் சமூகம் இன்னமும் அப்படிப்பட்டவர்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறது. நான் எங்கும் சுமந்துகொண்டு திரியும் அவரது மற்றொரு புகழ்பெற்ற வாசகம் ‘தாய்மொழி பெறாததை சமூகம் பெறாது’ என்பது. இந்த வாசகத்தின் அரசியல், பொருளாதார, கலாச்சார உள்ளடக்கம் மிக ஆழமானது.
தமிழ் மொழி மீதான காதல் அரும்பிய என் இளம் வயதில், என் மீது மிகப்பெரிய அளவுக்குத் தாக்கம் செலுத்தியவர்களில் அவரும் ஒருவர். நான் மேல்நிலைப் பள்ளியில் இருந்தபோதுதான், அவரது அறிவியல் தமிழ் என்கிற நூலை வாசித்தேன். இன்று நான் மொழிபெயர்ப்புத் துறையிலும் மொழித் துறையிலும் கணித் தமிழ்த் துறையிலும் இருப்பதற்கும் மொழி தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும் காரணமான பல்வேறு அம்சங்களில் வா.செ.குவின் அந்த நூலும் ஒன்று என்பதை நான் உறுதியாகக் கூற முடியும். வா.செ.கு. எனது முதலீடு. பின்பு இதழாளராக, கணித் தமிழ் ஆர்வலராக அவரோடு பேசிப் பழகிய தருணங்கள் எனக்கு உவப்பானவை, வெளிச்சம் தந்தவை. இன்று மொழிக்கொள்கை உருவாக்கத்துக்காகவும் மொழியுரிமைக்காகவும் தமிழுக்காகவும் செயல்படக்கூடிய என்னைப் போன்றோருக்கு, வா.செ.கு. ஓர் அறிவாயுதம். ஏனென்றால், அவர் கூறிய அறிவியல் தமிழ் என்பது, வெறும் கலைச் சொல்லாக்க உத்தி அல்ல. அறிவியல் கண்ணோட்டத்தோடு தமிழைப் பார்க்க வேண்டும் என்பதுதான் அவரது அணுகுமுறை. தமிழியல் உலகில் அவ்வளவு எளிதாகக் காணக்கிடைக்கிறதா அந்தப் பார்வை? – ஆழி செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம், zsenthil@gmail.com
hindu

கருத்துகள் இல்லை: