திங்கள், 12 டிசம்பர், 2016

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா!


minnambalam,com அதிமுக-வுக்கு தலைமை ஏற்க சசிகலாவை முன்னிறுத்துகிறார்கள் அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும். ஆனால், தீட்டு இருக்கும்போது கட்சிப் பதவியை ஏற்கலாமா என்ற விவாதம் எழுந்தது. ’தீட்டு ஏழு நாள்தான். பிராமணர்கள் வழக்கப்படி 10ஆவது நாளில் தீட்டு கழித்துவிட்டு, 13ஆவது நாளில் சுபஷி கிரணம் செய்வார்கள். சசிகலா ரத்த உறவு அல்ல. அதனால் ஏழாம் நாள் தீட்டு கழித்துவிட்டு, வீட்டில் ஜலம் தெளித்துவிட்டு நல்ல காரியம் செய்யலாம் என்று குருக்கள் கூறியிருக்கிறார். அப்படியென்றால் 5ஆம் தேதி ஜெயலலிதா இறந்தார். ஏழாவது நாளான 12ஆம் தேதியுடன் தீட்டு முடிந்துவிட்டது.
டிசம்பர் 13ஆம் தேதிதான் நல்ல நாள். அதைவிட்டால், 14, 15 ஆகிய இரண்டு நல்ல நாட்கள்தான் உள்ளன. 15ஆம் தேதி சசிகலாவுக்கு பொருத்தம் இல்லாத நட்சத்திரம். 16ஆம் தேதி மார்கழி வருவதால், 15ஆம் தேதிக்குள் கட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டும். திங்கட்கிழமை போயஸ் கார்டனில் ஜலம் தெளிக்கப்பட்டது. அதனால்தான் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கட்சியினரை கார்டனுக்குள் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பொதுக்குழுவை கூட்டவேண்டும் என்றால் சிரமம். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு கொடுக்கவேண்டும். அது நடைமுறையில் சாத்தியமல்ல. அதனால் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பிவிட்டு பிறகு ஒரு நாளில் பொதுக்குழுவைக் கூட்டலாம். அதனால் தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்கள் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பச் சொல்லி உத்தரவு சென்றது. இதைத் தொடர்ந்து ஒன்றியச் செயலாளர்கள், நகர பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களை மாவட்டச் செயலாளர்கள் அழைத்து,அதிமுக-வின் பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்து, தீர்மானம் நிறைவேற்றி திங்கள் மதியம் முதல் தீர்மான நகலை தலைமைக்கு அனுப்பி வருகிறார்கள். இதனடிப்படையில் 13ஆம் தேதிதான் சசிகலாவுக்கு ஜாதகப்படி நல்ல நாள் என்பதால் செவ்வாய் கிழமையே (13ஆம் தேதி) அதிமுக-வுக்கு தலைமை ஏற்கும் ஆவணங்களில் சசிகலா கையெழுத்திடவுள்ளார். அதிமுக-வின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சசிகலா.

கருத்துகள் இல்லை: