சனி, 4 அக்டோபர், 2014

மத்திய உளவு துறை தமிழகத்தில் நீதித்துறைக்கு எதிரான அசம்பாவிதங்களை அவதானிக்கிறது !

ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதித்த பின், தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகின்றனர்.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தரப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, தமிழகத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம், பஸ் எரிப்பு, கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் தொடர்கின்றன. வர்த்தகர்கள், பல்வேறு சங்கங்கள் தனித்தனியாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. மறைமுக நிர்ப்பந்தம் காரணமாகவும் போராட்டங்கள் தொடர்வதாகவும் புகார் உள்ளது. அமைப்புகள் மற்றும் சிறிய அரசியல் கட்சியினர், ஆளும்கட்சியின் அபிமானத்தைப் பெற போராட்டம் நடத்துகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில், தீர்ப்பைக் கண்டித்தும், விமர்சித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன; பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.


இதுபற்றிய தகவல்களை, மத்திய உளவுத்துறையினர் (இன்டெலிஜென்ஸ் பீரோ) சேகரிக்கின்றனர். கண்டன போஸ்டர் மற்றும் பேனர்களை படமெடுத்து, அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்து, மேலிடத்துக்கு அனுப்பி வருகின்றனர். போராட்டக்காரர்களின் ஒலிபெருக்கி பேச்சுகளும், 'ரிக்கார்டு' செய்யப்படுகின்றன. மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் காவல்துறையின் செயல்பாடு குறித்து தகவல் திரட்டி வருகிறோம். நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என்றார்.

ரகசிய 'அசைன்மென்ட்':

ஜெ.,மீதான தீர்ப்பு குறித்து தி.மு.க.,தலைவர் கருணாநிதி, எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் தற்போதுள்ள நிலைமை பற்றியும், வன்முறை சம்பவங்கள் மற்றும் தீர்ப்பு குறித்த ஆளும்கட்சியினரின் விமர்சனங்கள் குறித்தும் அமைதியாக தகவல் சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு 'ரகசிய அசைன்மென்ட்' தரப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எதிர்காலத்தில், ஜெ., சார்பில் மேல் முறையீடு செய்யப்படும்போது, அதனை சட்டரீதியாக எதிர்ப்பதற்கு, இந்த தகவல் சேகரிப்பு உதவுமென்று, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். dinamalar.com

கருத்துகள் இல்லை: