சனி, 4 அக்டோபர், 2014

பீகார் தசரா விழா கூட்ட நெரிசலில் மிதிபட்டு 32 பேர் பலி:

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று தசரா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். பாட்னா காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இரவு 7 மணியளவில் ’ராவண வதம்’ நிகழ்ச்சி முடிந்ததும், மைதானத்தை விட்டு பொதுமக்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறினர். இதனால், சாலையில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. நிலை தடுமாறி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். அவர்களுக்கு பின்னால் வந்தவர்கள், கீழே விழுந்து கிடந்தவர்களை மிதித்துக் கொண்டு இடறி விழுந்தனர்.
இப்படி, அடுக்கடுக்காக நூற்றுக் கணக்கானவர்கள் கீழே விழுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 32 பேர் மிதிபட்டும், மூச்சுத் திணறியும் இறந்தனர்.


மேலும், காயமடைந்த பலர் பாட்னா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவ்விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், கால்வாயில் சிலர் தவறி விழுந்ததால் இந்த தள்ளுமுள்ளு நிகழ்ந்ததாகவும், மின்னோட்டத்துடன் கூடிய மின்சார கம்பி ஒன்று யார் மீதோ விழுந்து விட்டதாகவும் பரவிய வதந்திதான் இச்சம்பவத்துக்கு காரணம் எனவும் பலதரப்பட்ட செவிவழி செய்திகள் உலா வரத் தொடங்கின.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், நேற்றிரவு பாட்னா அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்த பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மாநில தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, இந்த சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சியுடன் தொலைபேசி மூலம் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தசரா விழாவில் 32 பேர் பலியான சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: