
கடுமையான தீர்ப்பு :இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு இப்படி கடுமையான தீர்ப்பு வரவில்லை என்றால், நீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும், மக்களுக்கு, நம்பிக்கை இல்லாமல் போய்விடும். நல்லவேளை, சட்டமும், நீதியும் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன.ஜெயலலிதா அடிக்கடி சொல்லும் வார்த்தையையே நானும் சொல்கிறேன். 'தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; தர்மமே மறுபடியும் வெல்லும்' என்பது தான் அது. ஜெயலலிதா குற்றவாளி என, தீர்ப்பளிக்கப்பட்டதன் மூலம், தர்மம் மறுபடியும் வென்று இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதாலேயே, அவர்கள் மக்கள் பணத்தை சுரண்டி கொழுக்கலாம் என்று, யாரும் அவர்களுக்கு அனுமதி சீட்டு கொடுக்கவில்லை என்பதை, ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.ஊழல் விஷயத்தில், நான் தி.மு.க., - அ.தி.மு.க., என்றெல்லாம் பிரித்து பார்த்ததில்லை. காங்கிரஸ் என்றும் பார்ப்பதில்லை. யார் ஊழல் செய்தாலும், நான் விடமாட்டேன். '2ஜி' வழக்கும் நான் போட்டது தான். அதில், தி.மு.க.,வினருக்கும் கண்டிப்பாக தண்டனை உண்டு. அதேபோல, காங்கிரஸ் தலைவர் சோனியா மீதும், நான் போட்டிருக்கும் வழக்கிலும், எல்லா ஆதாரங்களும் தெளிவாக இருக்கின்றன. அதனால், அவர்களும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.
என் மேல் கோபம் :
இப்படித் தான், நான் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன். ஆனால், அதைச் சொன்னால், ஜெயலலிதா உட்பட எல்லோருக்கும் என் மேல் கோபம் வருகிறது. நான்தான் எல்லாவற்றையும் செய்தேன் என்று சொன்னால்கூட என் மேல் வழக்கு போடுகின்றனர். நான் என்ன ஊழலா செய்தேன், இவர்கள் போடும் வழக்குகளுக்கெல்லாம் அஞ்சுவதற்கு. இப்பவும் சொல்கிறேன், நான் சொல்லும் எல்லா விஷயங்களுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது.அதனால், எந்த கோர்ட்டில், யார் என் மீது வழக்குப் போட்டாலும், நான் அதை தைரியமாக எதிர்கொள்வேன்.வழக்குப் போட்டவர்கள் வருத்தப்படும் அளவுக்கு, தீர்ப்பை பெறுவேன். எந்த காலத்திலும், இந்த மாதிரியான மிரட்டல், உருட்டல்களுக்கெல்லாம், இந்த சாமி பயந்து ஓடிவிட மாட்டேன்.சென்னையில் என் வீட்டுக்கு சென்று, அ.தி.மு.க.,வினர் கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். என் படத்தை வைத்து, செருப்பால் அடித்து மகிழ்ந்திருக்கின்றனர். சில இடங்களில் என் உருவ பொம்மையை எரித்திருக்கின்றனர். ரவுடி கூட்டமாக அ.தி.மு.க.,வினர் செயல்பட்டு இருக்கின்றனர் என்பதை, ஊர் பார்க்கிறது. மக்களுக்கெல்லாம் என்ன நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரியட்டும். அதில் ஒன்றும் தவறில்லை. அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் வன்முறையை அ.தி.மு.க.,வினர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
போலீசார் வேடிக்கை :
இதற்கும் ஜெயலலிதா பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அ.தி.மு.க.,வினர், கலவரத்தில் ஈடுபட்டு வருவதை, போலீசார் பல இடங்களில், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நிலைமை, அசாதாரணமான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருந்தால், அடுத்து, சட்ட ரீதியில் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வேன்.இந்த தீர்ப்புக்கு பிறகாவது, ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும், அவர்கள் கூட இருப்பவர்களும், அதிகாரிகளும், ஊழல் செய்வதில் இருந்து, தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், இப்படித்தான், தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும். நான் நியாயத்தை சொன்னால், என் மீது கோபமாகி, என்னை மிரட்டப் பார்க்கின்றனர். இப்போது கூட, ஜெயலலிதா மீது வழக்குப் போடுவதற்கு என்னிடம் ஏராளமான ஆவணங்கள் உள்ளன.தமிழகத்தைப் பொறுத்த வரையில், சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வந்து, சினிமாத்தனமாக அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் என, நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அந்த சூழ்நிலை மாற வேண்டும். இல்லை, மாற்றப்பட வேண்டும். இது நடந்தால், தமிழகம் நல்லதை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக