திங்கள், 29 செப்டம்பர், 2014

ஜெயலலிதாவிடம் முதுகெலும்பை தொலைந்து விட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் வகையாறாக்கள் !

கதிர் இரண்டு லட்டு தின்றேன். தீர்ப்பு சொன்னதும் ஒன்று. தண்டனை அறிவிக்கப்பட்டதும் மற்றது. ஜெயலலிதா ஜெயிலுக்கு போனதைக் கொண்டாடவில்லை. எனக்கு ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும். காலை 11 மணிக்கு என்று சொன்னதால் 9 மணிக்கே பிரேக்ஃபஸ்ட் முடித்துவிட்டு டீவி முன் உட்கார்ந்தேன். 11 மணி தாண்டி 12, 1 என்று இழுத்துக் கொண்டே போனதில் சஸ்பென்ஸ் எகிறியது. தொடர்ந்து ஃபோன்கால் வந்து கொண்டிருந்ததால் வேறு டென்ஷன். லஞ்ச் சாப்பிட தோன்றவில்லை. பசி கிள்ளியது. ‘ஸ்பெஷல் எடிஷனா போடப்போறீங்க' என்ற கிண்டல்கூட காதில் ஏறவில்லை. ஏன் இப்படி ஆயிற்று? அப்போதுதான் கன்னட சேனல்களில் ஃபிளாஷ் ஓடியது. நாளாகி விட்டதால் பாஷையை புரிந்து கொள்ள சிரமம் இருந்தது. ஆனால், திடீரென ஜெயலலிதா படத்தைக் காட்டி அவசரமாக வார்த்தைகளை உச்சரித்ததைப் பார்த்தபோது விடுதலையாக இருந்தால் இத்தனை பரபரப்பு இருக்காது என்று மனசுக்குப் பட்டது. எஸ் என்று சுருக்கமாக ட்வீட் செய்தேன். அதற்குள் பெங்களூர் தகவல் கிடைத்தது. கன்விக்டட் என்று ட்வீட் போட்டுவிட்டு முதல் லட்டு தின்றேன். பசியாற்ற. தமிழ் சேனல்கள் எதிலும் வரவில்லையே என்று நண்பர்கள் ஃபோன். ஏனென்று தெரிந்து கொண்டே கேட்டால் எப்படி என்று சூடு வைத்தேன். தீர்ப்பு அறிவிக்கப்பட்டு 10 மணி நேரத்துக்குப் பிறகுகூட, பேனர் செய்தியாக போடுவதா வேண்டாமா என்று ஒரு பத்திரிகை ஆபீசில் விவாதம் நடந்திருக்கிறது. முதுகெலும்புள்ள ஒரே இந்திய பத்திரிகை என ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்த இந்தியன் எக்ஸ்பிரசின் சென்னைப் பதிப்பில் இன்று காலை அந்த செய்தியே இல்லை,
முதல் பக்கத்தில். உள்ளே 'சிட்டி' பக்கத்தில் சாதாரண நான்கு பத்தி செய்தியாக சுருட்டி மடக்கி மடக்கி வைத்திருக்கிறார்கள். ஊர்ஜிதம் செய்யப்படாத செய்தியை நாங்கள் எப்படி சொல்ல முடியும் என்று தாமதத்துக்கு இன்று காரணம் கூறுகிறார் ஒரு சேனலின் செய்தி ஆசிரியர். அச்சிடும் பத்திரிகையில் செய்தி ஊர்ஜிதத்துக்குக் காத்திருப்பது வேறு. செய்தி சேனல்களின் அவசர உலகத்தில் ஊர்ஜிதத்துக்காக காத்திருப்பது வேறு. சில சமிக்ஞைகள், அறிகுறிகள் மூலமாக தகவலின் நம்பகத் தன்மையை புரிந்து கொள்வதும் ஜேனலிசத்தின் பிரதான உத்திகளில் ஒன்று. ஏன் இப்படி ஆயிற்று? எந்த ஒரு தகவல் முன்னறிவிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் விளக்கம் இல்லாமல் தாமதிக்கப்படுகிறதோ, அது நெகடிவாகத்தான் இருக்கும் என்ற அனுமானம் பிசகுவதில்லை. தலைவர்களின் மரண செய்திகள் உலகம் முழுவதும் இந்த வகையில்தான் முதலில் வெளிப்பட்டு இருக்கின்றன. அந்த இடத்தில் காணப்படும் திடீர் பரபரப்பு, சூழ்நிலையின் இறுக்கம், மயான அமைதி, நடமாடும் ஒரு சிலரின் நிலம் நோக்கிய பார்வை, நடையில் தளர்ச்சி, காத்திருக்கும் செய்தியாளர்களின் கேமராக்கள் பக்கம் திரும்பாமல் தவிர்ப்பது, போலீசுக்கு வரும் அலெர்ட்... இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். சூதாட்டம் மாதிரிதான். பெரிய ரிஸ்க்தான். சொன்னது தப்பாகி விட்டால் டின் கட்டி விடுவார்கள்தான். ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கும்தான். ஆனாலும் செய்தியை முந்தித் தருவதும் முதலில் தருவதும் ஒவ்வொரு பத்திரிகையும் சேனலும் எப்போதும் சூடத்துடிக்கும் மணி மகுடம். ரிஸ்க் எடுக்காமல் சாதிக்க முடியாது. விளைவுகள் பற்றி ரொம்பவும் யோசித்தால் முடிவு எடுக்க இயலாது. பிரபாகரன் மரணம் என்று நடு இரவில் அந்துமணி ஃபோனில் அழைத்து சொன்னபோது ஊர்ஜிதம் செய்ய கிராஸ்-செக் செய்ய போதுமான அவகாசமோ வசதிகளோ இல்லை. இந்திய பிரதமரின் ஆலோசகருக்கு கிடைத்துள்ள முதல் தகவல் என்கிற நிலையில், அதன் நம்பகத்தன்மையை வேறு யாரிடம் சோதித்து பார்ப்பது. ஊர்ஜிதம் செய்ய முடியாமல் அந்த செய்தியை வெளியிட்டு, காலையில் தவறு என்று தெரியவந்தால் அவமானம் என்பதைச் சுட்டிக் காட்டினேன். சரி, அதனால் செய்தியை போடாமல் விட்டுவிட்டு, காலையில் அது உண்மை என தெரிய வந்தால் எப்படி இருக்கும் என்று திரும்பக் கேட்டார். தலைப்பு எழுதிப் போட்டு விட்டேன். தவறு என்று காலையில் தெரிந்தது. விளைவுகள் மகிழ்ச்சி தரவில்லை. ஆனால் எடுத்த முடிவு வருத்தமும் தரவில்லை. உலகப் புகழ் பெற்ற நாளிதழ்கள் ஒவ்வொன்றும் ஒரு காலகட்டத்தில் இது போன்ற சோதனைக்கு உள்ளாகி இருக்கின்றன. இது பார்ட் ஆஃப் ஜேனலிசம். ஜெயலலிதா ஜெயிலுக்கு போனதில் எனக்கு மகிழ்ச்சி கிடையாது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துதான் தீர வேண்டும் என்பதற்கு உதாரணமான தீர்ப்பு என்று கேப்டன் சொன்னார். அதுபோல, தவறுக்கு தண்டனை என்ற ஒரு திருப்தி மட்டுமே எனக்கும். அதே போன்ற, அல்லது அதைவிட பெரிய தப்பு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடுவதைப் பார்க்கும்போது, இந்த தீர்ப்பால் கிடைக்கும் திருப்தி அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை. அதற்கு என்ன செய்ய முடியும். இந்த நாட்டில் நீதிச் சக்கரம் அத்தனை மெதுவாகத்தான் சுழல்கிறது. ஒவ்வொரு நிகழ்வையும் வேறு எதனுடாவது ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலையில் இருந்து நாம் விடுதலை ஆகாதவரை எதையும் நம்மால் சரியாக அப்ரெஷியேட் பண்ண முடியாது. பத்தாயிரம் இன்க்ரிமென்ட் கிடைக்கும்போதுகூட பக்கத்தில் இருப்பவனின் ஐயாயிரம் இன்க்ரிமென்ட் நம் மகிழ்ச்சியை குலைக்கிறது. மாடாய் உழைக்கும் எனக்கு பத்து, தகுதியே இல்லாத அவனுக்கு ஐந்தா என்று காதுவழி புகை விடுகிறோம். 2ஜி தீர்ப்பு வரும்போது வரட்டுமே. அதற்காக இதை ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும். காவிரி பிரச்னையில் ஜெயலலிதா எடுத்த உறுதியன நிலைப்பாடுதான் இவ்வளவு கடுமையான தீர்ப்புக்கு காரணம் என்று அவரது அனுதாபிகள் கொதிக்கிறார்கள். ஒரு வாதத்துக்காக இதை ஏற்றுக் கொள்வோம். ஆந்திரா கோர்ட்டில் இதே தீர்ப்பு வந்திருந்தால் என்ன சொல்வார்கள்? பாலாறு பிரச்னையில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். கிருஷ்ணா தண்ணீர் தராவிட்டால் கோர்ட்டுக்கு இழுப்பேன் என எச்சரித்தார். தெலுங்கரான சென்னாரெட்டி கவர்னராக இருந்தபோது அவர் செய்த தப்பை அம்பலப்படுத்தினார். ஆந்திராவில் உள்ளவர்கள்தான் தமிழகத்துக்கு வந்து குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று சொன்னார். இந்த காரணங்களால் தெலுங்கு நீதிபதி அநீதி இழைத்து விட்டார் என்பார்கள். கேரளா கோர்ட் தீர்ப்பாக இருந்திருந்தால், முல்லைப் பெரியார் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் சென்று வெற்றி பெற்றதும், அதற்காக மதுரையில் விழா எடுத்ததும் பிடிக்காமல் நீதிபதி மூலம் மலையாளிகள் பழி வாங்கி விட்டனர் என்பார்கள். தென் மாநிலங்கள் அல்லாமல் வடக்கே இத்தீர்ப்பு வந்திருந்தால் பிஜேபி அல்லது காங்கிரஸ் அரசு செய்த மோசடி என்று கூறலாம். அப்புறம் வழக்கை என்ன சர்வதேச நீதிமன்றத்திலா நடத்த முடியும்? உணர்ச்சி வசப்படும் நண்பர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். லஞ்ச ஊழல் புகார்கள் குறித்த வழக்குகள் இரண்டு ஆண்டுக்குள் முடிய வேண்டும் என்பது சட்டம். இந்த வழக்கு 18 ஆண்டுகள் நகர்ந்திருக்கிறது. தீர்ப்பு சொன்னவர் இந்த வழக்கில் ஐந்தாவது நீதிபதி. 150 தடவைகளுக்கு மேல் வாய்தா வாங்கியுள்ளனர். அரசு வக்கீலும் மாற்றப்பட்டார். சிறப்பு வக்கீல் மாற்றப்பட்டார். தனி கோர்ட்டின் விசாரனையை நிறுத்துமாறு ஐகோர்ட்டிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் மாற்றி மாற்றி மனுக்கள், தடைகள், விசாரணை, தடை நீக்கம். செய்தி படிப்பவர்களே சலிப்படைந்து அதை விட்டுவிட்டு மற்ற செய்திகளை மேயும் அளவுக்கு நடந்த இழுத்தடிப்பு. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையிலான ரப்பர் புல்லிங். ‘என் மீது எந்த தப்பும் கிடையாது. இது திமுக அரசு வேண்டுமென்றே என் மீது போட்ட பொய் வழக்கு' என ஜெயலலிதா சொல்வது உண்மை என்றால், இத்தனை காலம் இவ்வளவு கஷ்டப்பட்டு, எக்கச்சக்கம் செலவு செய்து, இந்த வழக்கை ஏன் இழுத்தடிக்க வேண்டும்? கடைசி நிமிடத்தில்கூட சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு வக்கீல்களை விட்டு மனு போட வைத்து, தீர்ப்பு வழங்குவதை வேறு மாநிலத்துக்கு மாற்ற முயற்சி நடந்தது இந்தியாவே இதுவரை கேள்விப்படாத உபாயம். பகீரத முயற்சி என்பதை இனி ஜெயலலிதா முயற்சி என்று மாற்றிவிடலாம்! அவரே சொன்னதை போல, 13 பொய் வழக்குகளில் இருந்து நீதிமன்றம் மூலம் விடுதலை ஆனதை போல இதில் இருந்தும் வெளியே வருவேன் என்று சொன்னவர், நியாயமாக விசாரணையை துரிதப்படுத்தி விரைவில் தீர்ப்பு வெளியாவதற்கு அல்லவா பாடுபட்டிருக்க வேண்டும்? வெளிப்படையான இந்த முயற்சிகள் ஒரு பக்கம் நடக்கும்போதே வெளியே தெரியாத வகையில் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல பேரங்கள், நிர்பந்தங்கள், அழுத்தங்கள், எச்சரிக்கைகள், மிரட்டல்கள் நடந்ததாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டுதான் இருந்தன. அவதூறு வழக்கு பாயும் என்ற அச்சத்தால் ஊடகங்கள் அவற்றை தொடவில்லை. சம்பந்தப்பட்ட நீதிபதிகள் இந்த டார்ச்சரால் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றுவிட்டார்கள் என்று நீதித்துறை வட்டாரங்களிலேயே பேச்சு அடிபட்டது. முழுக்க முழுக்க தவறான ஆலோசனைகளால் ஜெயலலிதா வழி நடத்தப்பட்டார் என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. ஆரம்பத்திலேயே வழக்கை அதன் போக்கில் சந்தித்து, இப்போது வந்துள்ளதைப் போன்றே கடுமையான தீர்ப்பு வந்திருந்தால்கூட, தண்டனை காலம் முடிந்து, துரத்தும் பழைய வழக்குகள் எதுவும் இல்லாத வகையில் அவர் முதல்வராகத் தொடர்ந்திருக்க முடியும் என்று தோன்றுகிறது. இப்படி ஒன்றைச் செய்யுங்கள் என்று ஜெயலலிதா சொல்லும்போது, அப்படியே செய்கிறோம் அம்மா என்று கூறக்கூடிய நபர்களே அவரைச் சுற்றி இருக்கிறார்கள். அம்மா, அப்படி செய்தால் மக்களிடம் நல்ல பெயர் போய்விடக்கூடும் அம்மா என்று துணிவுடன் சொல்லக்கூடிய சீனியர் கட்சிக்காரர்களோ... மேடம், அப்படி செய்ய சட்டத்தில் இடமில்லை என்று நேர்மையுடன் சுட்டிக் காட்டக்கூடிய உயர் அதிகாரிகளோ ஜெயலலிதாவின் சுற்று வட்டத்தில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அனுபவிக்கும் அதிகார சுகத்தை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் அவர் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டே பிரச்னைகளை இடியாப்பச் சிக்கலாக்கிய ஆலோசகர்கள் அவருக்கு வாய்த்திருக்கிறார்கள். எதார்த்தம் அவர் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டிவிடாமல் இவர்கள் கவனமாக பார்த்துக் கொண்டார்கள். மேலே குறிப்பிட்ட துணிவான கட்சிக்காரர்களும் நேர்மையான அதிகாரிகளும் அருகில் இருக்க அவர் இடம் அளித்திருப்பாரா என்பது ஒரு கேள்வி. ஜெயலலிதாவின் குணம் பற்றி அவரை பலகாலம் அறிந்த மறைந்த பத்திரிகையாளர் சோலையிடம் கேட்டிருக்கிறேன். மெர்கூரியல் டெம்ப்ரமன்ட் என்று அவர் சொல்வார். எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார், என்ன செய்வார் என எவரும் எதிர்பார்க்க முடியாத இயல்பு. நான் ஒன்று சொன்னால் அதை எவ்வாறு சீக்கிரம் செய்து முடிக்கும் செயல் வீரர்கள்தான் எனக்கு வேண்டுமே தவிர, நான் சொல்வதை ஏன் செய்ய இயலாது என்று காரணங்களை அடுக்கும் வாய்ச்சொல் வீரர்கள் எனக்கு தேவையில்லை என்று கூறும் இயல்பு. தவறுகள் அதிகமாக அதுவே காரணமாகி விட்டது. கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணம் திமுக. அதன் ஆட்சியில் நடந்த அராஜக செயல்களால் வெறுத்துப் போயிருந்த வாக்காளர்கள், எஞ்சியிருந்த ஒரே மாற்றான அதிமுகவுக்கு ஓட்டளித்து ஜெயலலிதாவை மீண்டும் கோட்டைக்கு அனுப்பினார்கள். அதிமுக மீது பிரியமோ அனுதாபமோ இல்லாதவர்களும் இதே காரணத்தால்தான் அதற்கு ஓடு போட்டார்கள். அந்த அளவுக்கு முந்தைய ஆட்சியில் அத்துமீறல்கள் எல்லை கடந்து போயிருந்தன. திமுகவுக்கு ஆதரவாக பெரிய பெரிய படங்களுடன் பிரசார செய்திகளை வெளியிட்ட தினகரன் நாளிதழ் செய்தியாளர்கள் மத்தியில்கூட தமிழ்நாட்டில் மாற்றம் தேவை என்ற எண்ணம் பரவியிருந்தது. அது திமுக தலைவருக்கும் உரிமையாளர்களான மாறன் சகோதரர்களுக்கும்கூட தெரிந்திருந்தது. ‘நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும்' என்று ஃபோனில் அழைத்து தெரிவித்தார் கருணாநிதி. நானும் என் எடிட்டோரியல் டீமில் பலரும் முன்பு தினமலர் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். ஜெயலலிதா தேர்தல் பிரசார படங்கள் தினகரனில் இடம் பெறுவது குறித்து அவருக்கு நிறைய ஆதங்கம் இருந்தது. முரசொலி போன்று முழுமையான கட்சிப் பத்திரிகையாக தினகரனை நடத்த இயலாது என்று நான் அளித்த விளக்கம் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு எதிரான சக்திகளுக்கு தினகரனில் இடம் ஒதுக்குவது நியாயமல்ல என்பது அவரது நிலைப்பாடு. தனிப்பட்ட சார்பு நிலை எதுவாக இருந்தாலும் அதை வேலையில் வெளிப்படுத்தாமல் நிர்வாக நடைமுறைகளுக்கு உட்பட்டு பணியாற்றும் ப்ரொஃபஷனல் ஜேனலிஸ்ட்ஸ் நாங்கள் என்று நான் தெளிவுபடுத்தியபோது, 'மனசாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்' என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டார். குரலில் எந்த கடுமையும் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் ஜெயலலிதா எவ்வாறு ரியாக்ட் செய்திருப்பார் என்பதை உங்கள் ஊகத்துக்கு விட்டு விடுகிறேன். அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் தனக்காக விழுந்தவை என்று ஜெயலலிதா நம்பியதால், அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக செயல்படக்கூடிய ஊடகங்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை என்பதை சுட்டிக்காட்ட இந்த சம்பவத்தை சொன்னேன். எம்ஜிஆரும் கருணாநிதியும் பத்திரிகைகளில் வரும் செய்திகளை தெரிந்து கொள்வதில் அத்தனை அக்கறை காட்டினார்கள். முன்னவருக்கு முக்கிய செய்திகளையும் படங்களையும் வெட்டியெடுத்து ஃபைல் போட்டு கொடுப்பார்கள். பின்னவர் தானே அத்தனை பத்திரிகைகளையும் படித்து விடுவார். மாதம் ஒருமுறை செய்தியாளர்களை சந்திப்பதாக பதவியேற்றதும் வாக்குறுதி அளித்த ஜெயலலிதா அதை நிறைவேற்றவில்லை. கட்சியினரும் நெருங்க முடியாது. அதிகாரிகளிலும் ஒரு சிலருக்கே வாய்ப்பு. இதனால் மக்களுக்கும் அவருக்கும் இடைவெளி அதிகமானது. பெரும்பகுதி மக்கள் இருட்டில் தவிக்கும்போது தமிழகத்தில் அறவே மின்வெட்டு இல்லை என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் சொன்னதுதான் அவருக்கு கேட்டது. மக்கள் நலன் கருதி அவர் அறிமுகம் செய்த திட்டங்களின் செயல்பாடும் ஓரிரு அதிகாரிகள் வழியாகவே அவரை எட்டின. விமர்சனங்கள் அனைத்தும் எதிர்க்கட்சிகளின் வெட்டி வேலையாகவே சித்தரிக்கப்பட்டன. அரசியலில் வெற்றி பெற அடிப்படை மந்திரமே மக்களின் இதயத்துடிப்பை அறிந்து வைத்திருப்பதுதான். என்னதான் டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும் ரிமோட் கன்ட்ரோல் முறையில் அந்த துடிப்பை அறிய முடியாது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை இந்த தீர்ப்புடன் அஸ்தமித்து விடும் என யாராவது நினைத்தால் ஏமாந்து போவார்கள். அவரை துரத்தியடிக்கும் முயற்சி எப்போதெல்லாம் தீவிரம் அடைந்ததோ அப்போதுதான் அவர் முன்னிலும் வேகமாக முன்னோக்கி வந்திருக்கிறார். இந்த முறை எதிரிகளுக்கு பதிலாக நீதிமன்ற தீர்ப்பு அவரது பயணத்துக்கு பத்தாண்டு தடையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் முக்கிய மாற்றம். உடல்நலம் குன்றாமல் பார்த்துக் கொண்டால் இந்த முறையும் அவர் எழுந்துவர நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது. 2ஜி வழக்கு விசாரணை விரைவு படுத்தப்படும்; தீர்ப்புக்கு அதிக காலம் காத்திருக்க நேராது என்று டெல்லியில் கசியும் தகவல்கள் அவரது மனக்காயத்துக்கு மருந்தாக அமையும். பெங்களூர் கோர்ட் தீர்ப்பின் பலன்களை திமுக அனுபவிக்க விடக்கூடாது என்ற வேகம் அதிமுகவினரை விட பிஜேபிகாரர்களிடம் அதிகம் காணப்படுகிறது. காங்கிரஸ் வழக்கம்போல் வேடிக்கை பார்க்கிறது. அது ஒரு தீர்மானத்துக்கு வருவதற்குள் அடுத்த ரவுண்டும் முடிந்துவிடக்கூடும்!
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: