புதன், 1 அக்டோபர், 2014

ஜெயலலிதா ! மீடியாக்களின் புண்ணியத்தில் தெய்வதாய் ஆக்கப்பட்ட ஒரு வாய்தா / ஊழல் ராணி!

J
சட்டத்துக்கு விரோதமான முறையில் சொத்துகள் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்திருக்கிறது.   இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா, வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் முதல்வர் பதவியைப் பறித்து அவரைச் சிறையிலும் தள்ளியுள்ள இந்தத் தீர்ப்பு வழக்கத்துக்கு மாறான சில எதிர்வினைகளையும் அசாதாரணமான ஒரு சூழலையும் இங்கே ஏற்படுத்தியிருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?
1) நிலப்பிரபுத்துவ மனோபாவம்
அஇஅதிமுக மீது பெரிதளவு பற்றோ ஆர்வமோ இல்லாத   திரளான மக்களும்கூட (குறிப்பாக, பெண்கள்) ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெயலலிதா இழைத்த குற்றங்கள் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டபிறகும்   அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு அவரைக் கொண்டாடாடும் மனோபாவமும் அவர் தண்டிக்கப்பட்டவுடன் உடைந்து அழும் மனநிலையும் நீடிப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்?
நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டம் நம் சமூகத்தில் வலுவாக வேறூன்றியிருப்பதன் விளைவே இது.
நம்மை ஆளும் ஒருவர் கடவுளாகவோ அல்லது குறைந்தபட்சம் எஜமானராகவோதான் இருக்கமுடியும் என்று கருதும் எளிய அதே சமயம் ஆபத்தான இந்த மனோபாவம் தமிழகத்தில் (ஏன், முழு இந்தியாவிலும்கூட) பலமாக வளர்ந்துள்ளது. இந்த எஜமான விசுவாச மனோபாவத்தை ஆட்சியாளர்கள் இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்தி வளர்த்தெடுக்கிறார்கள். ஒன்று, பாப்புலிசம். இரண்டு, அச்சுறுத்தல். ஜெயலலிதா இந்த இரண்டையும் திறமையாகக் கையாண்டவர். ஆனாலும் பின்னதைக் காட்டிலும் முந்தையதே பளிச்சென்று வெளியில் தெரிவதால் அவருடைய பதவி இழப்பைத் தங்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாக மக்கள் கருதுகிறார்கள்.
2) சந்தர்ப்பவாத அமைதி
ஜெயலலிதா அரசின் குறைபாடுகளும் அத்துமீறல்களும் வெளியில் தெரியாமல் போனதற்கும் அவருடைய நல்ல முகம் மட்டுமே பிரகாசமாக வெளியில் தெரிவதற்கும் காரணம் மீடியா (குறிப்பாக, அச்சு மற்றும் காட்சி ஊடகம்). நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து மக்களை மீட்டெடுத்து ஆட்சியாளர்கள் குறித்த மாயைகளை உடைத்தெறிந்து உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டிய கடமை மீடியாவுக்கு உள்ளது. ஆனால் அவர்கள் இவற்றைச் செய்வதில்லை என்பதோடு ஆட்சியாளர்களின் மாய பிம்பங்களை மேற்கொண்டு வலுவாகக் கட்டமைக்கும் பணியையே மேற்கொள்கிறார்கள்.
அரசியல், புலனாய்வு, ஆய்வு என்றெல்லாம் பெயர்கள் இட்டு அவர்கள் உற்பத்தி செய்யும் எழுத்துக்குவியல்கள் கதநாயாக(கி) வழிபாட்டுணர்வை மேலும் ஆழமாக்குகின்றனவே தவிர குறைக்கவில்லை. ஜெயலலிதா அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை வசதியாக மறைத்துவிட்டு தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களையே செய்திகளாக இவர்கள் வழங்குகிறார்கள். செய்தித்தாள்கள், பத்திரிகைகள், டிவி சானல்கள் அனைத்தும் ஜெயலலிதாவை அப்பழுக்கற்ற ஒரு தூய நபராக, புனிதமான ஓர் அரசியல் தலைவராக, துதிபாடத்தக்க ஒரு கடவுளாக மக்கள் முன்னால் தூக்கி நிறுத்துகின்றன. அரை உண்மையான அல்லது போலியான இந்தப் பிம்பங்களை மட்டுமே நீண்டகாலமாக உட்கொண்டு வளர்ந்த மக்களால் திடீரென்று ஜெயலலிதாவை ஓர் ஊழல்வாதியாகக் காணமுடியவில்லை. இந்த முரண்பாடு அழுத்தும்போது கோபமும் சோகமும் வெடிக்கின்றன. மக்களின் இந்தத் தடுமாற்றத்துக்கு மீடியாவும் அதில் இயங்குபவர்களும் ஒரு வகையில் பொறுப்பேற்கவேண்டும்.
3) செயல்படாத கட்சிகள்
ஜெயலலிதாவின் சட்டவிரோதச் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி மக்களுக்கு அரசியலறிவும் விழிப்புணர்வும் ஊட்ட இங்கே எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை. குறிப்பாக, திமுக. தற்போது அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக இயங்கவில்லை என்றபோதும் வரலாறு நெடுகிலும் அதிமுகவை எதிர்த்து அரசியல் களத்தில் செயல்பட்டு வந்த திமுக, தற்போதைய இந்த அசாதாரணமான சூழ்நிலையை கிட்டத்தட்ட அமைதியாகவே கடந்துசெல்ல விரும்புகிறது. இத்தனைக்கும் ஜெயலலிதா மீதான வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டதற்கும் அவருக்குப் பாதகமான (எனவே திமுகவுக்கு அனுகூலமான) தீர்ப்பு அங்கிருந்து வெளிவந்ததற்கும் காரணம் திமுக. இருந்தும் திமுக இந்த வாய்ப்பைத் தன்னுடைய அரசியல் லாபத்துக்காகக்கூடப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்குகிறது. காரணம் திமுகமீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் நீடிப்பதுதான். அதனாலேயே ஜெயலலிதாவைத் தனிமைப்படுத்தி அவரை எதிர்க்கவும் விமரிசிக்கவும் முடியாத நிலைக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டது. அந்த வகையில், ஆளுங்கட்சியின் தவறுகளை வலுவாகவும் துணிவாகவும் எதிர்க்க இன்று அரசியல் களத்தில் கிட்டத்தட்ட யாருமில்லை.
தமிழகத்தில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் ஏன் மத்தியில்கூட இப்போது இதுதான் நிலை. எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சியின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம். பலகட்சி ஜனநாயகத்தின் அடிப்படையும்கூட இதுதான். ஆனால் நடைமுறையில் எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதாரக் கண்ணோட்டமும் கொள்கையும் ஒன்றுபோலவே இருக்கின்றன. எனவே, ஊழலிலும் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். சிற்சில வேறுபாடுகள் கடந்து இரண்டும் மக்களை ஒன்றுபோலவே ஏய்த்துப் பிழைக்கின்றன.
இந்த உண்மை தெரிந்தும், ஜெயலலிதாவை இன்றுவரை ஒரு புனித பிம்பமாக மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் மீடியா கருணாநிதியை அவ்வாறு பாவிப்பதில்லை என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. கருணாநிதி என்று வரும்போது மட்டும் மீடியாவின் அற உணர்வும் விமரிசனப் பார்வையும் திடீரென்று கூர்மையடைந்துவிடுவதன் பொருள் என்ன? அச்சமா? ஜெயலலிதாமீதான அனுதாபமா? எனில், இந்த அனுதாபத்தின் அடிப்படை என்ன?
இடதுசாரிக் கட்சிகளின் தோல்வியையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். சமரசங்கள் கைவந்தால் மட்டுமே இங்கே தேர்தல் அரசியல் சாத்தியம் என்னும் நிதர்சனத்தை சிபிஐ, சிபிஎம் கட்சிகள் கேள்வியின்றி ஏற்றுக்கொண்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். மேலே கண்ட முக்கியக் குறைபாடுகளான நிலப்பிரபுத்துவ மனோபாவம், தனிநபர் வழிபாடு, அரசியல் உணர்வற்ற நிலை, மீடியாவின் சார்புத்தன்மை போன்றவற்றுக்கு எதிராகப் போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகள் போதுமான உழைப்பைச் செலுத்தவில்லை, போதுமான அளவுக்கு மக்களை நெருங்கவில்லை.
4) மழங்கடிக்கப்படும் அறிவு
வேலை, வீடு, குடும்பம், பிரச்னைகள் என்று ஒரு சிறிய வட்டத்தில் சிக்கி, மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான மக்களால் ஆட்சிமுறை குறித்தோ அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்தோ ஆராயவோ, விவாதிக்கவோ முடிவதில்லை. இவர்களில் பலர் அரசியலை சினிமாவின் நீட்சியாக, அதாவது மற்றொரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்கின்றனர். தம்மைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளின் அடிப்படைகளைக்கூட தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புவதில்லை. அரசியல் என்பது அவர்களுக்குப் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கும் சுவாரஸ்யமூட்டும், பதைபதைப்பூட்டும், பிரமிக்கவைக்கும், அதிர வைக்கும் கதைகள் மட்டுமே. தாம் வாசித்துக்கொண்டிருப்பது (அல்லது பார்த்துக்கொண்டிருப்பது) நிஜமா, கற்பனையா என்று தெரிந்துகொள்ளக்கூட அவர்கள் விரும்புவதில்லை.
அரசியல் உணர்வற்ற, அரசியலற்ற இத்தகைய மக்கள் மிக எளிதாக உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள். அவர்களைத் தேவைப்படும்போது தூண்டிவிடமுடிகிறது. தலைவருக்காக இவர்களில் சிலர் உயிரைக் கொடுக்கவும், எடுக்கவும் முன்வருகிறார்கள். இவர்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்திக்கொள்ளமுடிகிறது. தேவைப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினரை இன்னொன்றுக்கு எதிராகத் திருப்பிவிட முடிகிறது. மக்களின் அறிவு மழங்கடிக்கப்பட்ட நிலையில் இருக்கும்வரை குருட்டுத்தனமான தலைவர் ஆராதனையும் இன்னபிற சமூக அவலங்களும் தொடரவே செய்யும். இதைத்தான் அரசியல் கட்சிகளும்  விரும்புகின்றன.
5) மத அரசியலும் சீர்திருத்தமும்
ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆர்வமும் வேகமும் தற்போதைக்கு பாஜகவிடம் மட்டுமே இருக்கிறது என்பதைப் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். இது உடனடியாகச் சாத்தியப்படும் என்று சொல்லமுடியாது என்றபோதும் பாஜக அந்தத் திசையில்தான் இனி செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் காலூன்ற இரு வழிகளை  பாஜக கையாளும் என்று எதிர்பார்க்கலாம். ஒன்று, இந்து மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது.  இரண்டு, திராவிட அரசியலுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்துவது.
பிற மாநிலங்களைப்போலன்றி மத அடையாளங்கள் தமிழகத்தில் முக்கியத்துவம் பெறாமல் இருப்பதற்குக் காரணம் அத்தனை குறைபாடுகளையும் கொண்டிருக்கும் இந்த இரு பெரும் திராவிட அரசியல் கட்சிகள்தாம் என்பதை மறுப்பதற்கில்லை. தற்போதைய வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்டு பாஜக தனது மதவாத அரசியலை இங்கே பரப்பத் தொடங்கும்போது அதை எதிர்கொண்டு முறியடிக்கவேண்டிய அவசியம் திமுகவுக்கு இருக்கிறது. வேறு காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், பதவிக்காகவாவது இதனை திமுக செய்தாகவேண்டும். அப்போது திமுக சில சமரசங்களைச் செய்தாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.
பெரும்திரளான மக்கள் பாஜக பக்கம் நகர்ந்து செல்வதைத் தடுக்க திமுகவுக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, தனது நாத்திகவாதத்தை (என்றால் மிச்சமிருக்கும் அதன் கூறுகள் அனைத்தையும்) அது முற்றிலுமாகக் கைவிடவேண்டும். அல்லது, தனது நாத்திகவாதக் கொள்கையைத் தீவிரமாக்கி, வகுப்புவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிராக இப்போதிருந்தே குரல் கொடுத்துப் போராடத் தொடங்கவேண்டும். கிட்டத்தட்ட இதே இரு வழிகள்தான் இடதுசாரிக் கட்சிகளுக்கும் உள்ளன
.மருதன்    tamilpaper.net/

கருத்துகள் இல்லை: