செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஜெயலலிதாவுக்கு குறைந்த பட்ச தண்டனையே வழங்க பட்டுள்ளது ! அரசு வழக்கறிஞர் பி வி ஆச்சார்யா !

பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு குறைந்தபட்ச தண்டனைதான் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதாடிய பி.வி.ஆச்சாரியா, ஒன் இந்தியா தமிழ் இணையத் தளத்திடம் தெரிவித்தார். 2001ல், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் பெரும் தொய்வு ஏற்பட்டது. இதற்கு காரணம், அப்போது ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுதான் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சொத்துக்குவிப்பு வழக்கின் சாட்சிகள் திடீரென பல்டியடித்து பிறழ் சாட்சியம் அளித்ததால் ஜெயலலிதாவின் கை ஓங்கியது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது குறைந்தபட்ச தண்டனைதான்: வழக்கின் 'ஆட்ட நாயகன்' ஆச்சாரியா பேட்டி இந்நிலையில்தான் திமுகவின் அன்பழகன், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து பெங்களூரிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞராக, 2005 பிப்ரவரியில், பி.வி.ஆச்சார்யாவை உச்சநீதிமன்றம் நியமித்தது. மிகவும் அனுபவம்மிக்க மற்றும் வழக்கறிஞரான ஆச்சாரியா தனது வாதத்தை தொடங்கியதும் வழக்கின் போக்கிலேயே கடும் திருப்பம் ஏற்பட்டது. வழக்கு விசாரணை ஜெயலலிதாவுக்கு பாதகமாக மாறத்தொடங்கிய நிலையில், ஆச்சாரியாவுக்கு அப்போதைய கர்நாடக பாஜக அரசு நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எடியூரப்பாவுக்கு பிறகு கர்நாடக மாநில முதல்வராக பதவிக்கு வந்த சதானந்தகவுடா, ஆச்சாரியாவை மாநில அட்வகேட் ஜெனரலாக நியமித்தார். இதையடுத்து அவர் ஜெயலலிதா வழக்கில் ஆஜராகுவதில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் தன்னை ஜெயலலிதா வழக்கில் ஆஜராக நியமித்தது என்பதால், பதவி விலக போவதில்லை என்று ஆச்சாரியா திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்த நிலையில், வழக்கறிஞர் கங்காதரய்யா என்பவர் கர்நாடக ஹைகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து, அட்வகேட் ஜெனரல் ஆச்சார்யா, இரண்டு ஆதாயம் தரும் பதவிகளை வைத்துள்ளார். இது விதிமுறையை மீறியது என்று குற்றம்சாட்டினார். இந்த மனுவை தொடர்ந்து, ஆச்சாரியா, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடுவதில் இருந்து விலகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரோ, மதிப்பு மிக்க அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்து ஆட்சியாளர்களை திடுக்கிட செய்தார். இதையடுத்து ஆச்சாரியா மேலும் பல நெருக்கடிகளை சந்தித்தார். இந்நிலையில் 2012 ஆகஸ்ட் மாதத்தில் ஜெயலலிதாவுக்கு ஆஜராகுவதில் இருந்து ஆச்சாரியா விலகிக்கொண்டார். தனக்கு நெருக்கடி அளிக்கப்பட்டதை வெளிப்படையாகவும் தெரிவித்தார். ஆனால் அப்போதே, குற்றவாளிகளுக்கு செய்ய வேண்டிய சேதாரங்களை ஏறத்தாழ அவரது வாதம் செய்து முடித்துவிட்டது. இதன்பிறகுதான் சிறப்பு அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். இப்படி வழக்கின் போக்கையே மாற்றிய பி.வி.ஆச்சாரியா நமது இணையத்தளத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி: ஒரு வழக்கறிஞராக வழக்கின் முடிவு குறித்து மகிழ்ச்சியோ, துக்கமோ வெளிப்படுத்தக் கூடாது. அரசு தரப்பு வக்கீல் மகிழ்ச்சியடைகிறேன் என்று சொல்வதும், ஜெயலலிதா தரப்பு வக்கீல் இந்த தீர்ப்பு அதிருப்தியளித்துவிட்டதாக கூறுவதும் தவறான செயல்தான். தீர்ப்பு என்பது நீதிமன்றத்தின் முழு அதிகாரத்துக்கு உட்பட்டது. வழக்கறிஞர்கள் கடமையை மட்டுமே செய்ய வேண்டுமே தவிர, அதன் பிரதிபலனை எதிர்பார்க்க கூடாது. கே: தீர்ப்பு மிகவும் கடுமையாக இருப்பதாகவும், ரூ.100 கோடி அபராதம் மிகவும் அதிகம் என்றும் குற்றம்சாட்டப்படுகிறதே? ப: இந்த வழக்கை பொறுத்தளவில், சட்டப்படி, குறைந்தபட்சமாக ஓராண்டு முதல், அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்க முடியும். குற்றச்சாட்டு நிரூபணமாகிவிட்ட நிலையில், குற்றவாளிக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை விதிப்பது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு மட்டுமே உள்ளது. அந்த வகையில் 4 ஆண்டு சிறை தண்டனையை நீதிபதி அளித்துள்ளார். இது மிகவும் கடுமையான தண்டனை என்ற கருத்தே சரியில்லை. அதிகபட்ச தண்டனையான 7 ஆண்டுகளில் பாதியைத்தான் நீதிபதி வழங்கியுள்ளார். அதாவது மூன்றரை ஆண்டுகளுக்கும் சற்று அதிகமாக தண்டனை கொடுத்துள்ளார். ரூ.100 கோடி அபராதம் என்பதும், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பை வைத்து தரப்பட்டதுதான். இதில் எந்த இடத்திலும் நீதிபதி சட்டத்தை மீறவில்லை. கே: ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணை ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹைகோர்ட் தலைமை நீதிபதி தலையிட்டு உடனடியாக ஜாமீன் வழங்க சட்டத்தில் இடமுள்ளதா? ப: ஹைகோர்ட்டின் தலைமை நீதிபதிக்கு தனது அதிகார எல்லைக்குள் நடக்கும் வழக்குகளில் தலையிட முழு உரிமை உள்ளது. ஆனால் பொதுவாக, ஜாமீன் மனு விசாரணை தள்ளிப்போனபோதெல்லாம், தலைமை நீதிபதி தலையிட்டது கிடையாது. இப்போதும் தலைமை நீதிபதி தலையிடுவது சந்தேகமே. கே: ஜெயலலிதாவை விடுவிக்க கோரியும், நீதிபதியை விமர்சனம் செய்தும் நடத்தப்படும் போராட்டங்கள் குறித்து? ப: இதுபோன்ற போராட்டங்கள், விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபடுவோருக்கெல்லாம் கண்டிப்பாக தண்டனை அளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் நீதிமன்றங்களுக்கு கிடையாது. அவற்றை கண்டுகொள்ளாமலும் விடலாம். ஒருவேளை தண்டனை தர வேண்டும் என்று நினைத்தால், ஊடக செய்திகளின் அடிப்படையில், தானாக முன்வந்து கூட விசாரணை நடத்தும் அதிகாரம் (இந்த வழக்கில்) கர்நாடக ஹைகோர்ட்டுக்கு உள்ளது. இவ்வாறு ஆச்சாரியா தெரிவித்தார்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: