ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தீர்ப்புக்குத் தடை கோருகிறார் ஜெ.- ஜாமீனும் கோரி நாளை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு

பெங்களூர் சிறப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறும், ஜாமீன் வழங்குமாறும் கோரி ஜெயலலிதா சார்பில் நாளை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச். வகேலாவிடம் ஜெயலலிதாவின் வக்கீல்கள் மனு அளிக்கவுள்ளனர். தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதால் வழக்கமான பெஞ்ச்சில் அந்த மனுவை விசாரிக்க முடியாது. அதேசமயம், விடுமுறைக் காலத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் சிறப்பு பெஞ்ச் செயல்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. அந்த சிறப்பு பெஞ்ச்சில் ஜெயலலிதா மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மனு தாக்கல் செய்யப்படவுள்ளதை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் இன்று உறுதிப்படுத்தினார். அவர் இதுகுறித்துக் கூறுகையில், ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு தடைகோரியும், ஜாமீன் கேட்டும் கர்நாடகா மாநில ஐகோர்ட்டில் நாளை மனு தாக்கல் செய்யப்பட உள்ளது என்றார். இருப்பினும் இந்த இரண்டு கோரிக்கைகளும் உடனடியாக ஏற்கப்படும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே உயர்நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்த நடவடிக்கைகளிலும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக ஜாமீன் தர மாட்டார்கள். ஏன் உச்சநீதிமன்றத்திலுமே கூட எடுத்த எடுப்பிலேயே ஜாமீன் கிடைக்கவும் வாய்ப்பில்லை என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். இதற்காக தொடர் சட்டப் போராட்டத்தில் ஜெயலலிதா ஈடுபட நேரிடும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: