ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

Badri: ஏன் இந்த அம்மா மாட்டிக்கொண்டார்கள்? ஆடிய ஆட்டம் அப்படி !

 குற்றமும் தண்டனையும்
 முந்தைய திமுக ஆட்சியிலும் இதில் ஊழல் இருந்தது. ஆனால் இம்முறை அதிமுக ஆட்சியில் நடக்கும் ஊழல் மிக மோசமானது என்று பதிப்பாளர்களிடம் பேசிப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும்.
அதேபோல சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்க மாநில அரசிடம் நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் பெற நாற்பது லட்ச ரூபாய், சமச்சீர் பள்ளி தொடங்கி எட்டாம் வகுப்பு வரை அனுமதி பெற ஆறு லட்ச ரூபாய், அதன்பின் ஒன்பது/பத்து வகுப்புகளுக்கான அனுமதிக்கும் இன்னொரு ஐந்து லட்சம், 11/12 வகுப்புகளுக்கு மேலும் ஐந்து லட்சம் என்று ரேட் கார்ட் போட்டு ஊழல் நடக்கிறது இந்த ஆட்சியில்தான்
ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு நான்காண்டு சிறை + 100 கோடி ரூபாய் அபராதம் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் சில கேள்விகள் எழுகின்றன.
அவர் ஒருவர் மட்டும்தானா ஊழல் குற்றம் புரிந்தவர்? இல்லை. வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளவர்கள் என்று பார்த்தால் கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், அரசியல் இடைத்தரகர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் என்று ஒரு பெரும் கூட்டத்தைச் சொல்லலாம். இவர்கள் அரசு அல்லது அரசுசார் துறையில் இருந்துகொண்டு அல்லது அரசில் இருப்போருடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசு நிதியை அபகரித்து அல்லது பொதுமக்களிடமிருந்து பிடுங்கி அநியாயமாகப் பணம் சேர்த்தவர்கள். இப்படிச் சேர்த்த பணத்துக்கு நியாயமாக வரி கட்டினாலும் சரி, கட்டாவிட்டாலும் சரி, இவ்வாறு பணம் சேர்த்ததே சட்டத்துக்குப் புறம்பானது. இவர்கள்மீது புகார் இருந்தால், விசாரித்து, சாட்சியங்களைச் சேர்த்து, வழக்கு தொடர்ந்து, ஜெயலலிதாவுக்குத் தந்ததுபோல் தண்டனை பெற்றுத் தரலாம்.


ஆனால் பொதுவாக வெகு சிலர் தவிர மீதி பேருக்கு இம்மாதிரி வழக்கும் நடைபெறுவதில்லை, தண்டனையும் கிடைப்பதில்லை. அம்மாவுக்கு இப்போது கிடைத்துவரும் அனுதாபம் இதன் காரணமாகவே. எவ்வளவோ பொறுக்கிகள் தண்டனை பெறாமல் வெளியே சுதந்தரமாக உலாவ, இந்தம்மா மட்டும் பாவம், இப்படி ஆகிவிட்டதே என்ற பாமரத்தனமான அனுதாபம்.

ஏன் இந்த அம்மா மட்டும் மாட்டிக்கொண்டார்கள்? ஏனென்றால், இவர்கள் ஆடிய ஆட்டம் அப்படி. விட்டுவைத்த சாட்சியங்கள் அப்படி. கூடவே அரசியல் காரணத்தால் இவர்மீது உருப்படியான ஒரு வழக்கையாவது போட்டாகவேண்டும் என்று திமுக அரசு நடந்துகொண்டதும்கூட. அப்படிச் செய்யும்போது நல்லம்மா நாயுடு என்ற திறமையான ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணைக்குப் பொறுப்பாக நியமித்ததும் ஒரு காரணம். இறுதிக் காரணம் ஜான் மைக்கேல் டிகுன்ஹா என்ற சிறப்பு நீதிபதி. இப்படிப் பல காரணங்கள் ஒன்றுசேர்ந்துதான் ஜெயலலிதாவுக்குத் தண்டனை கிடைத்துள்ளது. இதில் ஒன்று சறுக்கியிருந்தாலும் ஜெயலலிதா தப்பியிருப்பார். இதைப்போல் 11 வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லையா?

முந்தைய ஆட்சியிலிருந்து தற்போதைய ஆட்சியில் ஜெயலலிதா மிகவும் திருந்திவிட்டார் என்று சொல்பவர்கள் அவருடைய ஒரு முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள். நான் பதிப்பாளனாக இருக்கிறேன். தற்போதைய அஇஅதிமுக ஆட்சியில் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் உச்சபட்ச ஊழல் நடந்துவருகிறது. முன்னதாகவே லஞ்சம் கொடுத்தால்தான் ஆர்டரே கிடைக்கும். கொடுக்காதவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம் அல்லது கொஞ்சமாகக் கொடுக்கப்படலாம். இதற்கு முந்தைய திமுக ஆட்சியிலும் இதில் ஊழல் இருந்தது. ஆனால் இம்முறை நடக்கும் ஊழல் மிக மோசமானது என்று பதிப்பாளர்களிடம் பேசிப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும்.

அதேபோல சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங்களை ஆரம்பிக்க மாநில அரசிடம் நோ அப்ஜெக்‌ஷன் சான்றிதழ் பெற நாற்பது லட்ச ரூபாய், சமச்சீர் பள்ளி தொடங்கி எட்டாம் வகுப்பு வரை அனுமதி பெற ஆறு லட்ச ரூபாய், அதன்பின் ஒன்பது/பத்து வகுப்புகளுக்கான அனுமதிக்கும் இன்னொரு ஐந்து லட்சம், 11/12 வகுப்புகளுக்கு மேலும் ஐந்து லட்சம் என்று ரேட் கார்ட் போட்டு ஊழல் நடக்கிறது இந்த ஆட்சியில்தான்.

இது நான் பலரிடம் பேசித் தெரிந்துகொண்ட தகவல். எனக்குச் சம்பந்தமில்லாத பல துறைகள் குறித்து எனக்கு விவரங்கள் அதிகம் தெரியாது. இதெல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமலா நடந்துகொண்டிருக்கின்றன? அரசு கேபிள் டிவி தொடர்பாக சிறு பிரசுரமே வெளியாகும் அளவுக்குப் பல கோடிகளில் ஊழல் நடந்துள்ளது.

சாதாரணப் பொதுமக்கள் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர் போன்றவற்றை மட்டும்தான் பார்க்கிறார்கள். முந்தைய ஆட்சியில் ஊழலை இந்த ஆட்சியின் ஊழலோடு வரிக்கு வரி ஒப்பிட்டுப் பார்க்கும் அளவுக்கு நம்மிடம் தரவுகள் இல்லை. இந்த ஊழல்கள் நடைபெறாத, நியாயமான ஓர் அரசு சாத்தியமே இல்லை என்ற அளவுக்கு நாம் பழகிப் போய்விட்டோம்.

ஒவ்வோர் அரசு அலுவலகத்திலும் ஒரு தாளைத் தள்ளப் பணம் கேட்பார்கள், கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று அடித்துப் பேசுகிறார்கள் என் உறவினர்கள். இல்லை, கொடுக்காமலேயே நடந்திருக்கிறது, நடக்க வைக்க முடியும் என்று நான் சில உதாரணங்களைச் சொன்னாலும் யாரும் கேட்கத் தயாராக இல்லை. பேசாமல் கொடுத்துவிட்டு, சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு போய்க்கொண்டே இருப்போம் என்பதுதான் இவர்கள் கருத்தாக இருக்கிறது.

இந்த மாபெரும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் ஒரு  சறுக்கலால், அதுவும் சுமார் இருபதாண்டுகளுக்குமுன் செய்துள்ள சறுக்கலால் மாட்டிக்கொண்டவருக்கு அனுதாபம் தரத் தேவையே இல்லை. மாட்டாதவர்களையெல்லாம் எப்படி மாட்டவைப்பது, எப்படி ஊழல் புதைகுழிக்குள் சிக்கியுள்ள நம் சமூகத்தை மீட்டெடுப்பது என்பது குறித்துத்தான் நாம் சிந்திக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: