ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

திமுக நிபந்தனை: சேது சமுத்திர திட்ட ஆதரவு, மதவாதத்துக்கு எதிர்ப்பு ! கூட்டணியில் இணைய கட்சிகளுக்கு ....

சேது சமுத்திர திட்ட ஆதரவு, மதவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் மட்டுமே தமது கட்சித் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்று திருச்சி மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
திருச்சியில் நடைபெற்ற திமுகவின் 10-வது மாநில மாநாட்டில் நிறைவுரையாற்றிய கருணாநிதி பேசியது:
"நான் எத்தனையோ மாநாடுகளில் பங்குபெற்று பேசியிருக்கிறேன். ஆனால், இந்த மாநாட்டிலே கே.என்.நேரு ஆற்றிய பணி, வியப்படையும் அளவில் இருந்தது. அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அவரை நான் பாராட்டுவது என்பது என்னையே நான் பாராடுவது போன்றதாகிவிடும். இந்த மாநாட்டின் வெற்றிக்குக் காரணமே கே.என்.நேருதான்.
மிக முக்கிய காலக்கட்டத்தில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டைத் தொடர்ந்து பெரும் பணி இருக்கின்றன. அதுதான் நாடாளுமன்றத் தேர்தல்.
அதிமுகவின் வாக்குறுதிகளை மக்கள் நம்பினர். இப்போது ஏமாற்றம் மக்களுக்குத்தான். தமிழகத்தில் அதிமுக அரசிடம் இருந்து ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இல்லை. ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சிதான் இங்கு நடைபெறுகிறது. இது ஆட்சியல்ல; வெறும் காட்சி.
திமுக இயக்கத்தைச் சிதைத்து, அதை அதிமுக-வாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. அதிமுகவை, அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் என்று முழுமையாக அழைக்க மாட்டேன். அண்ணாவுக்கு களங்கம் ஏற்படுத்த அப்படி அழைக்க மாட்டேன். அதனால்தான் அதிமுக என்றே அழைப்பேன். அதிமுக என்பதற்கு அண்ணா எடுத்துச் சொன்ன லட்சியங்களுக்கு விரோதமான கட்சியாகவே இருக்கிறது.
முதல்வராக இருக்கும் ஜெயலலிதா, ஆட்சியில் வந்து அமர்ந்தவுடன் சமச்சீர்க் கல்வித் திட்டத்துக்கு சாவுமணி வைக்கிறார். இந்த விவகாரம் நீதிமன்றங்களுக்கு சென்றபோது, சமச்சீர்க் கல்விக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. சமச்சீர்க் கல்வி இப்போது நடைமுறையில் இருப்பதற்கு திமுகதான் காரணம்.
இதேபோல், அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் அதிமுக அரசின் முடிவுக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
எங்கேயாவது ஒரு குற்றவாளி, குற்றம்சாட்டப்பட்டவர், இந்த நீதிபதி வேண்டாம்; அந்த நீதிபதிதான் வேண்டும் என்று சொல்வாரா? சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா அப்படித்தான் சொன்னார். நல்ல வேளையாக அப்படியெல்லாம் நடக்கவில்லை.
ஒரு நீதிமன்றத்தில் வழக்குகளை இழுத்தடிக்க, வாய்தா வாங்க என்னெல்லாம் ஜாலங்கள் செய்ய முடியுமோ செய்தவர்கள்தான் நீதி, நேர்மை, நியாயம் பற்றி பேசுகிறார்கள். வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி, வழக்குகளை பல ஆண்டுகளை இழுத்தடிப்பதில் ஜெயலலிதா வல்லமை படைத்தவர். அப்படிப்பட்டவர் தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார்.
அண்ணா அறிவித்த திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதில் ஜெயலலிதா அழுத்தமாக இருக்கிறார். அவரது கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமா?
தமிழகத்தை வளப்படுத்தும் திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டம். அதை திமுக கொண்டுவந்தது என்ற ஒரே காரணத்துக்காகவே ஜெயலலிதா வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத்துக்கே சென்று முறையிட்டிருக்கிறார். இப்படிப்பட்டவரால் தமிழகம் எப்படி முன்னேறும்? யாரோ சிலரை திருப்திபடுத்துவதற்காக, ஜெயலலிதா அந்தத் திட்டத்தையே வேண்டாம் என்று சொல்கிறார்.
சேது சமுத்திரத் திட்டதை ஆதரிப்போரையும், மதாவாத அரசு உருவாக ஒத்துழைக்க மாட்டோம் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களுடன் சேரலாம். அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளைச் சேர்த்துதான் திமுக அணியை உருவாக்கி வருகிறோம். அந்த அணி திமுக தலைமையிலான கூட்டணியாகத்தான் இருக்கும். நாங்கள் உருவாக்கும் அணி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வோம். இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க நாம் உறுதுணையாக இருப்போம்" என்றார் திமுக தலைவர் கருணாநிதி. tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: