புதன், 19 பிப்ரவரி, 2014

கருணாநிதியை சந்திக்கிறார் அந்தோணி: தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலருமா?

'வேண்டாம்... வேண்டாம்... உங்கள் உறவு' என, காங்கிரசை, தி.மு.க., ஓரம் கட்டி வந்தாலும், '10 வருட பந்தத்தை, பாசத்தை எளிதில் விட்டுவிட முடியுமா' என, அந்தக் கட்சியுடன், லோக்சபா தேர்தலில், கூட்டணி சேர துடிக்கிறது காங்கிரஸ்.
அதனால், தி.மு.க., 'நோ என்ட்ரி' போர்டு போட்டாலும் பரவாயில்லை என, அதை ஒதுக்கி தள்ளி விட்டு, அக்கட்சித் தலைவர், கருணாநிதியை சந்திக்க, 22ம் தேதி, சென்னை வருகிறார், காங்கிரஸ் மேலிட தலைவரும், மத்திய அமைச்சருமான, ஏ.கே.அந்தோணி. அப்போது, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, டிசம்பர், 15ல் நடந்த, தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், 'காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை' என, அறிவிக்கப்பட்டது.
அத்துடன், லோக்சபா தேர்தலுக்கு, விஜயகாந்தின் தே.மு.தி.க., உடன், கூட்டணி அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பல விதமான ஊழல் விவகாரங்களில் சிக்கியதால், 'தீண்டத்தகாத' கட்சி போல, தமிழகத்தில் தனித்து விடப்பட்டுள்ள, காங்கிரஸ், தி.மு.க., உடனான, கூட்டணியை எளிதில் விட்டு விடுவதாக இல்லை. அதனால், கடந்த மாதம் சென்னை வந்த, மத்திய அமைச்சரும், தமிழக காங்., விவகாரங்களை கவனிப்பவருமான, குலாம்நபி ஆசாத், தி.மு.க., தலைவர், கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இதற்கு, தி.மு.க., தரப்பில், 'மரியாதை நிமித்தமான சந்திப்பு' என, விளக்கம் தரப்பட்டது.

அதேபோல், உடல் நலம் இல்லாமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, கருணாநிதியின் மகள், கனிமொழி பற்றி, காங்கிரஸ் தலைவர், சோனியாவும் கனிவுடன் நலம் விசாரித்தார். அதேநேரத்தில், விஜயகாந்திற்கு, தி.மு.க., தரப்பில் விடுக்கப்பட்ட கூட்டணி அழைப்புக்கு, அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லாததால், தி.மு.க., மேலிடம் அதிருப்தி அடைந்திருந்தாலும், 'எப்படியும், விஜயகாந்த் மனம் மாறுவார்' என்ற, நம்பிக்கையில் காத்திருக்கிறது. இந்நிலையில், கடந்த, 15, 16ம் தேதிகளில், திருச்சியில் நடைபெற்ற, தி.மு.க., மாநாட்டில் பேசிய, கருணாநிதி, 'மதவாதத்திற்கு எதிரானவர்களும், சேது சமுத்திர திட்டத்தை ஆதரிப்பவர்களும், தி.மு.க., கூட்டணியில் இணையலாம்' என, அழைப்பு விடுத்தார். 

இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், தி.மு.க., பெருவெற்றி பெற வேண்டும் எனில், கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளின் எண்ணிக்கை போதாது என்பதாலும், டில்லி அரசியலில், அ.தி.மு.க., ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க, மெகா கூட்டணி அவசியம் என, கருணாநிதி விரும்பியதாலும், தே.மு.தி.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்கு வரவேண்டும் என்பதாலும், அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார் என, அரசியல் நோக்கர்கள் கூறினர். இந்தக் கருத்தை உண்மையாக்கும் வகையிலான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தூதராக, அவருக்கு நம்பகமானவரும், ராணுவ அமைச்சருமான, ஏ.கே.அந்தோணி, வரும், 22ம் தேதி சென்னை வருகிறார் என்றும், அப்போது, அவர், கருணாநிதியை சந்தித்து, கூட்டணி மற்றும்  தொகுதிப் பங்கீடு நிலவரங்கள் குறித்து பேச உள்ளார் என்பதே, அந்தத் தகவல். ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் பிரிந்து விடக்கூடாது என்பதற்காக, தே.மு.தி.க.,வுக்கு, கருணாநிதி தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார். அத்துடன், இதுவரை நடந்த, அனைத்து லோக்சபா தேர்தல்களிலும், தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்தே, தி.மு.க., போட்டியிட்டு உள்ளது. காங்கிரசுக்கும் தொகுதி வாரியாக, பாரம்பரியமான ஓட்டு வங்கி இருப்பதால், அதை இழக்க, தி.மு.க., விரும்பவில்லை. அதனால், கூட்டணியில் காங்கிரசையும் சேர்த்தால் லாபமே, என, நம்புகிறது.

காங்கிரஸ், தே.மு.தி.க.,வுக்கு சேர்த்து, 19 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 21 தொகுதிகளில், நான்கு தொகுதிகளை, விடுதலை சிறுத்தைகள் புதிய தமிழகம், மனித நேயமக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு வழங்கி விட்டு, 17 தொகுதிகளில் மட்டும், தி.மு.க., போட்டியிட திட்டமிட்டு உள்ளது. எனவே, காங்., - தி.மு.க., கூட்டணி, மீண்டும் மலரும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் - தினமலர்.com 

கருத்துகள் இல்லை: