சனி, 22 பிப்ரவரி, 2014

என்னோடு இருந்தால் பதவி கிடைக்காது- மு.க.அழகிரி பேச்சு


 என்னோடு இருந்தால் கட்சியில் பதவி கிடைக்காது என்று தி.மு.க. பிரமுகர் இல்ல விழாவில் மு.க.அழகிரி பேசினார்.
தென் மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரிக்கு பொதுவாக மேடைப் பேச்சில் ஆர்வம் கிடையாது. இதனாலேயே, கட்சிப் பொதுக்கூட்டங்களிலும், போராட்டங்களிலும் தேர்தல் பிரசாரத்திலும் அவர் அதிகம் பங்கேற்பதில்லை. ஆனால், தி.மு.க.வில் இருந்து தற்காலிக மாக நீக்கப்பட்ட பிறகு கட்சிப் பிரமுகர்கள் இல்ல விழாவில் கூட கலந்துகொண்டு பேசி வருகிறார் அழகிரி. 

“நிர்வாகிகளை எல்லாம் கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் எப்படி தேர்தலை எதிர்கொள்ள முடியும்?” என்று ஏற்கெனவே ஒரு திருமண விழாவில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய அவர், தற்போது கட்சிப் பதவி குறித்து கருத்தை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின், மாநகர் மாவட்ட அமைப்பாளர் பூக்கடை ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா மதுரை ஐராவதநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் மு.க. அழகிரி கலந்துகொண்டு பேசியதாவது: எங்களைப் போல பலர், இன்றைய தினம் பதவியில் இல்லாவிட்டாலும் கூட, கலை இலக்கிய அணிக்குத் தலைவராக இருந்து, கட்சிக்கு அவர் ஆற்றியிருக்கிற பணியை, கட்சி நண்பர்களோடு இணைந்து அவர் ஆற்றியுள்ள உழைப்பை நாம் மறந்துவிட முடியாது. அவர் மேலும் மேலும் பல பதவிகளைப் பெற்று... (என்று வாழ்த்த முயன்ற அழகிரி சற்று நிறுத்தி) அவர் என்னோடு இருந்தால் பதவியைப் பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இருந்தாலும், அதைப்பற்றி அவர் கவலைப்படவும் மாட்டார் என்பது எனக்குத் தெரியும்.
அவரைப் போல விசுவாசமாக இருக்க வேண்டும். நன்றி என்றொன்று இருக்கிறது. அதை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். அது இல்லாதவர்கள் எங்கோ போய்விட்டார்கள். என்னால் பதவிக்கு வந்தார்கள். ஆனால், பதவி பெற்ற மறுநாளே என் மாமனார்தான் எனக்குப் பதவி வாங்கிக் கொடுத் தார். மாமியார்தான் பதவி வாங்கிக் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். நான் அதைப் பற்றி எல்லாம் ரொம்பப் பேச விரும்பவில்லை. இவரைப் போன்று, நன்றியுள்ளவர்களாக இருந்து நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்றார்.
தொடரும் அழகிரி-காங்கிரஸார் நட்பு!
மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. வெளியேறிய போது, அதில் தனக்கு விருப்பம் இல்லை என்று மு.க.அழகிரி தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய பிறகும்கூட, அக்கட்சியினருடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தார் அழகிரி. கடந்த ஜனவரி 30-ம் தேதி நடந்த பிறந்த நாள் விழாவில் கூட, ஏராளமான காங்கிரஸார் அவருக்கு நேரிலும், போனிலும் வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸார் சிலர் நன்றிக்கு இலக்கணமானவரே என்று அவரை வாழ்த்தி போஸ்டரும் ஒட்டினர்.
இந்நிலையில் வெள்ளிக் கிழமை நடந்த திருமண விழாவில் மு.க.அழகிரியுடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தெய்வ நாயகம், கே.எஸ்.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸாரும் கலந்து கொண்டு, அழகிரியை பாராட்டிப் பேசினர். அழகிரியின் நட்பைப் பயன்படுத்தி, மதுரை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்குப் பெற்று, தாங்கள் போட்டியிட சிலர் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: